ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில்

ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில்

தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்திப் பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோயில். கண்ணனூர், விக்கிரமபுரம், மாகாளிபுரம், கண்ணபுரம் ஆகிய பெயர்களிலும் அழைக்கப்படும் இந்தத் தலம், இது திருச்சிராப்பள்ளிக்கு வடக்கே காவிரியின் வட கரையிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

மூலவர் மாரியம்மன்
தல விருட்சம் வேப்ப மரம்
அமைத்தவர் சோழர்கள்
புராண பெயர் கண்ணபுரம்
ஊர் சமயபுரம்
மாவட்டம் திருச்சி

வரலாறு

சோழ மன்னர் ஒருவன், தன் தங்கைக்கு சீதனமாக ஒரு நகரையும் கோட்டையையும் உண்டாக்கிக் கொடுத்தார். அதுவே கண்ணனூர். பிற்காலத்தில், பாண்டிய மன்னர்களின் படையெடுப்பால் அவை அழிந்து வேம்புக்காடாக மாறியதாகவும், தொடர்ந்து அங்கு அம்மன் கோயில் உருவானதாகவும் கூறப்படுகிறது.

வைணவி என்ற மாரியம்மன் சிலை ஸ்ரீரங்கத்தில் இருந்தது. அதன் உக்கிரம் தாங்க முடியாமல் போனதால், அங்கிருந்த ஜீயர் சுவாமிகள், அச்சிலையை அங்கிருந்து அப்புறப்படுத்த ஆணையிட்டார். அவருடைய ஆணைப்படி வைணவியின் சிலையை அப்புறப்படுத்த வந்தவர்கள் வடக்கு நோக்கிச் சென்று சற்று தூரத்தில் தற்போதுள்ள இனாம் சமயபுரம் என்னுமிடத்தில் இளைப்பாறினார்கள்.

பிறகு அதனை எடுத்துக்கொண்டு தென்மேற்காக வந்து தற்போதுள்ள மாரியம்மன் கோயில் அமைந்துள்ள கண்ணனூர் அரண்மனை மேட்டில் வைத்துவிட்டுச் சென்றனர். எனவே, அம்மன், ‘கண்ணனூர் அம்மன்’ என்றும், ‘கண்ணனூர் மாரியம்மன்’ என்றும் அழைக்கப்பட்டாள்.

அக்காலகட்டத்தில் விஜயநகர மன்னர் தென்னாட்டின் மீது படையெடுத்து வந்து, கண்ணனூரில் முகாமிட்டார்கள். அப்போது மாரியம்மனை வழிபட்டு, தாங்கள் தென்னாட்டில் வெற்றி பெற்றால் அம்மனுக்கு கோயில் கட்டி வழிபடுவதாக சபதம் செய்தார்கள்.

samayapuram mariamman temple
சமயபுரம் மாரியம்மன் கோயில்

அதன்படியே வெற்றி பெறவே, அம்மனுக்குத் திருக்கோயில் கட்டிய விஜயநகர மன்னர், பரிவாரத் தெய்வங்களாக விநாயகரையும், கருப்பண்ணசாமியையும் பிரதிஷ்டை செய்து, குடமுழுக்கு விழா நடத்தி, நித்திய பூஜைக்கான ஏற்பாடுகளையும் செய்தார்.

விஜயரெங்க சொக்கநாத நாயக்கர் காலத்தில் கி.பி. 1706-ல் அம்மனுக்கு தனியாக கோயில் அமைத்தார்கள் என்று வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்ட கண்ணனூர் மாரியம்மன் கோயில் இன்று, ”சமயபுரம் மாரியம்மன்” கோயிலாக மாறி புகழ்பெற்று விளங்குகிறது.

கோவில் அமைப்பு

தற்போது, சமயபுரம் மாரியம்மன் கோயில் இருக்குமிடம் கண்ணனூர் என அழைக்கப்படுகிறது. இவ்விடம் கண்ணபுரம், விக்ரமபுரம், மாகாளிபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோயிலுக்கு வடக்கே செல்லாயி அம்மன் கோயிலும், போஜீஸ்வரன் கோயிலும் கிழக்கே உஜ்ஜயினி மாகாளி கோயிலும், முத்தீஸ்வரன் கோயிலும் அமைந்துள்ளன.

சமயபுரத்தாள் கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கிழக்கு & மேற்காக சுமார் 280 அடி நீளத்துடனும் தெற்கு & வடக்காக 150 அடி அகலத்துடனும் அமைந்துள்ளது.

மூன்று திருச்சுற்றுகள் கொண்ட இந்தக் கோயில் முகப்பில் நீண்ட மண்டபம் ஒன்றுள்ளது. மூன்றாம் பிராகாரத்தில் பௌர்ணமி மண்டபம், நவராத்திரி மண்டபம், வசந்த மண்டபம் ஆகியவை அமைந்துள்ளன.

2ஆம் பிராகாரத்தில் விநாயகர், மாரியம்மனின் உற்சவ மூர்த்தி மற்றும் கருப்பண்ணசாமி ஆகியோரது சந்நிதிகள் உள்ளன.

மூன்று விநாயகர்கள்

இக்கோயிலில் ஒரே சந்நிதியில் மூன்று விநாயகர்கள் அருள் புரிகிறார்கள். அன்றைய கோயில் நிர்வாகத்தினர், இங்குள்ள அம்பாளின் உக்கிரத்தை தணிக்க, என்ன செய்யலாம் என்று ஸ்ரீ காஞ்சி பெரியவரின் ஆலோசனையை வேண்டினர்.

அதன்படி நுழைவாயிலின் வலப்புறத்தில், ஒரே சந்நிதியில் ஞான சக்தி, இச்சா சக்தி, கிரியா சக்தி வடிவங்களாக மூன்று விநாயகர்களை பிரதிஷ்டை செய்தனர். அதன்பின் அம்மனின் மூல விக்கிரகத்தில் கோரைப் பற்கள் அகற்றப்பட்டு, சாந்த சொரூபியாக மாற்றி 1970ல் கும்பாபிஷேகம் செய்தனர்.

மூலவர்

மூலவரான மாரியம்மன் எட்டு கைகளுடன், தலை மாலை கழுத்தில், சர்ப்பக் கொடையுடன், ஐந்து அசுரர்களின் தலைகளைத் தன் காலால் மிதித்து தனது சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் படி இருக்கிறார்.

samayapuram
சமயபுரம் மாரியம்மன்

இவளின் எட்டுத் திருக்கரங்களில் முறையே கத்தி, கபாலம், சூலம், மணிமாலை, வில், அம்பு, உடுக்கை, பாசம் ஆகியவற்றை ஏந்தியுள்ளாள். நெற்றியில் திருநீறு மற்றும் குங்குமம். ஜொலிக்கும் தோடுகள், மூக்குத்தி ஆகிய அலங்காரத்துடன், 27 நட்சத்திரங்களின் ஆதிக்கங்களையும் தன்னுள் அடக்கி, 27 யந்திரங்களாக திருமேனி பிரதிஷ்டையில் இங்கு அருள் புரிகிறாள் சமயபுரத்தாள்.

சமயபுரத்தாள் விக்கிரகம் மூலிகைகளால் ஆனதால், இதற்கு அபிஷேகம் கிடையாது. உற்சவர் அம்மனுக்கு மட்டுமே அபிஷேகம்.

கருவறையின் பின்புறம் அம்மனின் பாதங்கள் உள்ளன. இதற்கு மலர் சூடி, தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.

அம்பாளின் கருவறையைச் சுற்றி எப்போதும் நீர் நிறைந்திருக்கு மாறு ஈரத் தன்மையுடன் வைத்திருக்கிறார்கள். அம்பாள் எப்போதும் குளிர்ச்சியாக இருப்பதற்காக இந்த ஏற்பாடு.

சமயபுரத்தாளின் கருவறை மற்றும் கருவறை விமானம் தங்கத் தகடுகளால் வேயப்பட்டுள்ளன.

கோவிலின் சிறப்பு அம்சம்

கோயிலின் முன் மண்டபத்தில் படுத்து உறங்குபவருக்கு அர்த்த ஜாமத்தில் அம்பாளின் கொலுசுச் சத்தம் கேட்கும் அதிசயம் இன்றும் நிகழ்கிறது. அம்மை நோய் தீர்க்கவும், நகர சாந்திக்காகவும் அம்பாள் இரவு நேரத்தில் வலம் வருவதாக ஐதீகம்.

Mariamman Temple Samayapuram
ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் கோயில்

சமயபுரம் மாரியம்மன் ஆதி பீடம்

இக்கோவிலில் அம்மன் அஷ்ட புஜங்களுடன் வீற்றிருப்பது வேறு எந்த மாரியம்மன் கோவிலிலும் காணக்கிடைக்காத அரிய காட்சியாகும். மேலும் மாரியம்மன் வடிவங்களில் ஆதி பீடம் சமயபுரம் ஆகும்.

எனவே தான் இக்கோவிலில் எழுந்தருளியுள்ள மகாமாரி பதம் மாறி சிவ பதத்தில் மிகப்பெரிய சுதை சுயம்பு திருவுருவமாக காட்சி அளிக்கிறார்.

ராகு கேது தோஷம் நீங்கும்

அம்மனின் சுயம்பு திருமேனியில் நவக்கிரக ஆதிக்கத்தை உள்ளடக்கி நவக்கிரகங்களை நவசர்ப்பங்களாக தரித்து அருள்பாலிப்பதால் அம்மனை தரிசனம் செய்வதன் மூலம் நவக்கிரக தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

இக்கோவிலில் இருக்கும் அம்மனை அமாவாசை, பவுர்ணமி மற்றும் கிரகண காலங்களில் வழிபட்டால் உச்ச பலன் கிடைக்கும். இத்தலத்தில் வழிபட்டால் ராகு, கேது தோஷம் நிவர்த்தியாகும் என்பதற்கு இக்கோவிலின் மேற்கூரையில் சிற்ப சான்றும் உள்ளது.

மாரி தீர்த்தம்

இங்குள்ள பெருவளை வாய்க்கால் சிறப்பு மிகுந்த தீர்த்தமாக விளங்குகிறது. ஆலயத்தின் மேற்கே அமைந்துள்ள திருக்குளம் மற்றொரு புண்ணிய தீர்த்தம். இதற்கு ‘மாரி தீர்த்தம்’ என்று பெயர்.

தங்க ரதம்

சமயபுரம் கோயிலில் சுமார் 20 லட்சம் ரூபாய் செலவில் செய்யப்பட்ட தங்க ரதம் ஒன்று உள்ளது. பக்தர்கள் காணிக்கையாக ரூ.700 கட்டினால், தங்க ரதத்தை இழுக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

திருவிழா இல்லாத நாட்களில் மட்டுமே தங்க ரதம் இழுக்க அனுமதிக்கப்படுகிறது. அப்போது அம்பாளுக்கு தங்கக் கவசமும் அணிவிக்கப்படும்.

சீதளாதேவி

சிவபெருமான், மன்மதனை எரித்த வெப்பத்தின் அனல் தாங்காமல் தேவர்களும், மனித உயிர்களும் தவித்தனர். எனவே, அவர்கள் பார்வதியை வேண்டினர். அவள் அந்த வெப்பத்தை உள்வாங்கிக் கொண்டாள். அந்த சக்தி சொரூபமே சீதளாதேவி என்றும், மாரியம்மன் என்றும் வழங்கப்படுகிறது என்கிறார்கள்.

மாயாதேவி

வசுதேவர் மற்றும் தேவகி தம்பதியின் எட்டாவது குழந்தையான கண்ணன் யசோதை வீட்டுக்கும், நந்தகோபன் & யசோதையின் பெண் குழந்தை கம்சனது சிறைச்சாலைக்கும் இடம் மாற்றப்படுகின்றனர்.

அந்தப் பெண் குழந்தையை சிறைக்கு வந்து கம்சன் கொல்ல முயன்றபோது, அவனிடம் இருந்து தப்பித்து வானில் உயர்ந்து, ‘உன்னைக் கொல்லும் எமன் கோகுலத்தில் வளர்கிறான்!’ என்று கூறி மறைந்தது அந்த மாயக் குழந்தை. மாயாதேவி எனப்படும் அந்தக் குழந்தைதான் மாரியம்மன் என்கிறார்கள். அவளே சமயபுரத்திலும் அம்மனாக விளங்குகிறாள் என்பதும் ஐதீகம்.

இந்த மாரியம்மனுக்கு மகமாயி, அகிலாண்ட நாயகி, ஆயிரம் கண்ணுடையாள், சாம்பிராணி வாசகி, கௌமாரி, காரண சௌந்தரி, சீதளதேவி, கண்ணபுரத்தாள் ஆகிய பெயர்களும் உண்டு.

திருவிழாக்கள்

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பால், பன்னீர், பஞ்சாமிர்தம், இளநீர் ஆகிய அபிஷேகங்கள் ஆடி & தை வெள்ளிக்கிழமைகள், சித்ரா பௌர்ணமி, நவராத்திரி ஆகிய தினங்களில் விசேஷமாகச் செய்யப்படுகின்றன.

புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசை அன்று இங்குள்ள அம்மன் முன், புதிய மூங்கில் தட்டு ஒன்றில் பச்சரிசி, தேங்காய், பழம், வெற்றிலை& பாக்கு மற்றும் காய்கறிகள் ஆகியவற்றைச் சமர்ப்பித்து பூஜிக்கிறார்கள். அதன் பிறகு, அவற்றை அந்தணர்கள் அல்லது ஏழைகளுக்கு தானமாக அளிக்கிறார்கள் பக்தர்கள். இதனால் பித்ரு தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.

இக்கோயிலில் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் சித்திரைத் தேர்த்திருவிழா, ஆடி வெள்ளி போன்ற விழாக்காலங்களிலும் கூட்டம் அதிகமாகிறது. ஆடி மாதத்தில் எல்லா வெள்ளிக் கிழமைகளிலும் கூட்டம் கட்டுக்கடங்காத அளவில் இருக்கும்.

பூச்சொரிதல் விழா

பொதுவாக பக்தர்கள் பட்டினி கிடந்து விரதம் இருப்பதுதான் வழக்கம். இங்கோ தாய் மாரியம்மா தன் குழந்தைகளுக்காக மாசி மாதம் கடைசி ஞாயிறு தொடங்கி பங்குனி கடைசி ஞாயிறு வரை 28 நாள்கள் “பச்சைப் பட்டினி விரதம்” இருக்கிறார்.

அம்பாளுக்கு ஒரு வேளை மட்டும் அதாவது சாயரட்சை பூஜையின்போது இளநீர், மோர், பானகம், துள்ளு மாவு (பச்சை அரிசி மாவு + நாட்டுச் சர்க்கரை), வெள்ளரிப் பிஞ்சு ஆகியவை நிவேதிக்கப்படுகின்றன. இந்தக் காலத்தில் ஊர் மக்களும் அம்மனுடன் சேர்ந்து விரதம் இருப்பது வழக்கம்.

சித்திரை மாதத்தின் கத்தரி வெயிலில் அம்மை& வைசூரி போன்ற நோய்கள் மக்களுக்கு ஏற்படும். அந்த வெப்பத்தைத் தான் ஏற்றுக் கொண்டு, மக்களை குளிர வைக்கும் மாரித்தாயின் உடல் வெப்பத்தை தணிக்கவே, பக்தர்கள் அம்பாளுக்கு பூமாரி பொழிந்து, அவளை குளிரச் செய்கிறார்கள். அப்போது அயல் நாடுகளில் இருந்தும் பக்தர்கள் கூடை கூடையாகப் பூக்களை அனுப்பி வைக்கிறார்கள்.

சமயபுரம் மாரியம்மன், பச்சைப் பட்டினி விரதம் தொடங்கும் நாளான மாசி மாதத்தின் கடைசி ஞாயிறு தான் “பூச்சொரிதல் விழா” நடைபெறும். இந்த விழா திருச்சி மாவட்ட மக்களால் கோலாகலமாகக் கொண்டாடப்படும்.

எல்லா ஆட்டோ ஸ்டாண்டும் களைகட்டும். ’காந்தி சந்தை’ சுமைதூக்கும் தொழிலாளி முதல் எல்லாப் பகுதி மக்களும் பல வகையான பூக்களைப் பல்லக்கிலும் தட்டிலும் எடுத்துக்கொண்டு மேள தாளத்துடன் தாரை முழங்க தப்பட்டை அடிக்க ஆடியும் பாடியும் சமயபுரம் போய் தங்கள் மாரியம்மனுக்குப் பூவை அவள் கழுத்துவரை நிரப்புகின்றனர்.

பூச்சொரிதல் திருவிழாவையட்டி விக்னேசுவர பூஜை, புண்யாகவஜனம் முடித்த பிறகு முறைப்படி மாரியம்மனுக்குக் காப்பு கட்டுகிறார்கள். பிறகு, திருக்கோயிலின் தென்கரையிலுள்ள சுப்ரமணியசுவாமி கோயிலில் சிறப்புப் பூஜை செய்து, மூன்று யானைகள் மீது பூத்தட்டுகள் வைத்து திருக்கோயில் முன்மண்டபத்திலிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்வார்கள்.

தேரோடும் வீதிகள் நான்கின் வழியாகத் தேரடி வந்து, பின்னர் ராஜ கோபுரம் வழியாகப் பிரதட்சணம் செய்து, பூத்தட்டுகள் கருவறைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அம்மனுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.

எட்டுக் கரங்களுடன் சிங்க வாகனத்தில் வந்து, மகிசாசுரனை வதைத்த ஆத்தாளின் கோபம் தணியவே இந்தப் பூச்சொரிதல்.

சித்திரைப் பெரு விழா

பங்குனி & சித்திரையில் 13 நாட்களுக்கு சித்திரைப் பெரு விழா நடக்கும். சித்திரை மாதம் முதல் செவ்வாய் தேரோட்டமும், அதற்கு அடுத்த வெள்ளிக்கிழமை தெப்பமும் நடைபெறும். அப்போது முடி காணிக்கை, ஆடு, மாடு, கோழி காணிக்கை, அக்னி சட்டி எடுத்தல் ஆகிய நேர்த்திக்கடன்கள் நிறைவேற்றப் படும்.

தேர்த் திருநாளில் பக்தர்கள் ஆற்றில் குளித்து ஈர உடையுடன் ஆற்று நீரைச் சுமந்து அம்மனின் பாதத்தில் ஊற்றிக் குளிர வைப்பர். வைசூரி அகலவும், மழை பொழியவும், பால் சுரக்கவும், வறுமை நீங்கவும் இது நம்பிக்கையுடன் செய்யப்படுகிறது. அன்றைய தினம் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

தேர்த் திருவிழாவின் எட்டாம் நாளன்று, சமயபுரத்தாள், இனாம் சமயபுரத்துக்குச் சென்று ஒரு நாள் இரவு தங்குகிறாள்.

9ஆம் நாள் குதிரை வாகனத்தில் புறப்பட்டு வருவார்.

பத்தாம் நாளில் திருவானைக்காவில் அருள் புரியும் ஸ்ரீஜம்புகேஸ்வரர், மாரியம்மனுக்கு சீர்வரிசை அனுப்பி வைப்பார். அண்ணனிடமும், ஈஸ்வரனிடமும் சீர்வரிசை பெறும் அம்மன் இவள் மட்டுமே!.

இனாம் சமயபுரத்தில் உள்ள ஆதி மாரியம்மன் கோயிலுக்குச் சென்று வணங்கிய பின்னரே, கண்ணனூர் சமயபுரம் மாரியம்மனை தரிசிப்பது சுற்றுப்புற கிராம மக்களது வழக்கம்.

சித்திரை மாத இறுதியில் தொடங்கி வைகாசி முதல் தேதி வரை பஞ்சப் பிராகார உற்சவம் நடக்கும்.

பிரார்த்தனை மற்றும் நேர்த்திக்கடன்

இங்கு பக்தர்கள் ஈர உடையுடன் அங்கப்பிரதட்சணம் செய்து, வழிபடுவதுடன், ஆடு, கோழி, தானியங்கள், உப்பு, வெல்லம் ஆகியவற்றுடன் நேர்ந்து கொண்ட வெள்ளியால் ஆன உறுப்புகளையும் தன்னைப் போன்ற மணி பொம்மையையும் காணிக்கை செலுத்துகின்றனர்.

samayapuram temple

மேலும், பக்தர்கள் மல்லாந்து படுத்துக் கொண்டு தங்களின் வயிறு மற்றும் கண்களில் மாவிளக்கு தீபம் ஏற்றி வைத்தும் அம்மனை வழிபடுகின்றனர்.

தாலி பலத்துக்காக சுமங்கலிப் பெண்கள் தாம்பூலம், வளையல், கண்ணாடி போன்ற மங்கலப் பொருட்களை தானம் அளித்தால், அம்பாளே பெண்மணியின் உருவில் வந்து இவற்றைப் பெற்றுக் கொண்டு ஆசீர்வதிக்கிறாள் என்பது ஐதீகம்.

குழந்தைப்பேறின்மை, தொழில் பிரச்னை, ராகு&கேது தோஷம் உள்ளவர்கள் சமயபுர மகமாயியை தரிசித்தால், அவள் கண்டிப்பாக பலன் தருவாள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

கரும்புத்தூளி எடுத்தல்

இங்கு ‘கரும்புத்தூளி எடுத்தல்’ என்ற விசேஷப் பிரார்த்தனை பிரசித்தம். குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகள் நேர்ந்து கொள்வது இந்த வேண்டுதல். அன்னையின் அருளால் கருவுற்று, சீமந்தம் முடிந்த பின், சீமந்தப் புடவை & வேஷ்டியைப் பத்திரமாக வைத்திருப்பர். குழந்தை பிறந்ததும் ஆறாவது மாதத்தில் இதைச் செய்கிறார்கள்.

அன்று பத்திரப்படுத்திய துணிகளை மஞ்சள் நீரில் நனைத்து கரும்புத் தொட்டில் தயார் செய்து அதில் குழந்தையைக் கிடத்துகிறார்கள். அந்தத் தொட்டிலைப் பிடித்த படி தந்தை முன்னே செல்ல, தாய் பின் தொடர மூன்று முறை வலம் வந்து பிரார்த்தனை செலுத்துகிறார்கள். துணிகளைப் பூசாரி எடுத்துக் கொண்டு, கரும்பை பக்தர்களுக்கு விநியோகிக்கிறார்கள்.

நடை திறந்திருக்கும் நேரம்

அதிகாலை 5.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை நடை திறந்திருக்கும்

முகவரி

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்,

சமயபுரம் ,

திருச்சிராப்பள்ளி மாவட்டம் – 621112.

தொலைபேசி எண் : 04312670460

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *