நமது மூக்கைச் சுற்றி, நான்கு காற்றுப் பைகள் உண்டு. மூளை மூக்கு, கன்னம் மூக்கு, மூக்கு நெற்றி இணையும் இடம், கண்கள் மற்றும் மூக்குக்கு இடைப்பட்ட பகுதிகளில் இந்த காற்றுப் பைகள் அமைந்திருக்கின்றன. இந்த காற்றுப் பைகள், நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனை குறிப்பிட்ட வெப்பநிலையில் நுரையீரலுக்கு எடுத்துச் செல்ல உதவுகின்றன. இந்த காற்றுப் பைகளே சைனஸ் பகுதி என அழைக்கப்படுகின்றன.
சைனஸ் பகுதியில் ஒரு திரவம் சுரந்து, நமது மூக்கில் உள்ள சளி சவ்வுக்கு வரும். இந்த சளி சவ்வுதான், நாம் சுவாசிக்கும் வெப்பமான காற்றை ஈரபடுத்தி, சைனஸ் பகுதிக்கு அனுப்புகிறது. சைனஸ் பகுதியில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், திரவம் காற்றுப் பையிலேயே தங்கிவிடும். இதன் காரணமாக பல பாதிப்புகள் முகத்தில் ஏற்படக்கூடும்.
சைனஸ் அறிகுறிகள்
- கன்னம், நெற்றிப் பகுதியில் கடுமையான வலி ஏற்படும்.
- தலையைக் கீழே கவிழ்த்தால், தாங்க முடியாத தலைவலி இருக்கும்.
- மஞ்சள் நிறத்தில் சளி வெளியேறும்.
- மூக்கைத் தொட்டாலே, கடுமையான வலி ஏற்படும்.
- இரவு நேரத்தில் இருமல் வரும். காலையில் எழுந்தவுடன் தொடர்ச்சியாகத் தும்மல் வரும்.
- பல் வலி, காது வலி ஏற்படும்.
யோகா
1) ‘அம்’ மந்திர உட்சாடனை சைனஸ் பிரச்சனைகள் தீர உதவுவதுடன், வராமலும் தடுக்கிறது. உட்சாடனையின்போது ஏற்படும் அதிர்வுகள் சைனஸ்களில் கிருமிகள் சேராவண்ணம் தடுத்து, சைனஸ்களை ஆரோக்கியமாக்குகின்றன. இதனால் மூக்குக்கும் சைனஸ்களுக்கும் எவ்விதத் தடையும் இல்லாமல் காற்று சென்று வருகிறது. காற்று தடையில்லாமல் செல்வதால் சுரக்கப்படும் திரவங்கள் சைனஸ்களில் இருந்து எளிதாக அகற்றப்படுகின்றன.
2) ஆசனம் மற்றும் மூச்சுப் பயிற்சிகள்: இவை அனைத்துமே உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், தளர்வு நிலையையும் அளிக்கின்றன. அது மட்டுமில்லாமல் உடலின் எதிர்ப்புச் சக்தியும் அதிகரிப்பதாக ஆரம்ப நிலை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவற்றை உடற்பயிற்சிபோல் செய்யாமல், தகுந்த விழிப்பு உணர்வுடன் மூச்சு, உடல் மற்றும் மனம் ஒருங்கிணைந்தாற்போல் இருக்குமாறு செய்ய வேண்டும். இவை மேற்கூறியது போல் சைனஸ்களின் காற்றோட்டத்தைப் பாதுகாக்கின்றன.
3) யோகா, ரத்த ஓட்டத்தைச் சீர்செய்வதால் சைனஸ்களால் ஏற்படும் தலைபாரம், முகத்தில், கண்களில் வலி போன்றவற்றுக்கு உதவுகின்றன.
4) ஹடயோகாவில் உள்ள ஹடகிரியைகளில் ஒன்றாகக் கருதப்படும் நேத்திக் கிரியைகள் சைனஸ் வியாதிகள் வராமல் தடுப்பதற்கும், அதில் இருந்து நிவாரணம் பெறவும் உதவுவதாகக் கூறப்படுகிறது.
நேத்தி என்பது மூக்கு, தொண்டைப் பகுதியை, திரவம் அல்லது நூல்கொண்டு சுத்தம் செய்வது. இது சளியை அகற்றுவதுடன் சவ்வுகளில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து, மூக்குக்கும் சைனஸ்களுக்கும் உள்ள தடையை அகற்றுகிறது. நேத்திக் கிரியைகளை சரியான முறையில் பயின்று பின்பற்றவும்!
மிளகு, மஞ்சள், தேன்
சளிப் பிரச்சனையைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள 10 முதல் 12 முழு மிளகு எடுத்துக்கொள்ள வேண்டும். அதை உடைத்துக்கொள்ள வேண்டும், பவுடராக்கக் கூடாது. அதை 2 ஸ்பூன் தேனில் ஓர் இரவு அல்லது எட்டரை மணி நேரம் ஊறவைக்க வேண்டும். காலையில் அதை எடுத்து மென்று தின்றால் சளி கரைந்துவிடும்.
அல்லது மஞ்சளை இரண்டு ஸ்பூன் தேனில் கலந்து சாப்பிடலாம். அல்லது மிளகு, மஞ்சள் மற்றும் தேன் ஆகியவற்றைக் கலந்து சாப்பிடலாம். அனைத்துப் பால் பொருட்களையும் விட்டாலே சளி மிகவும் குறைந்துவிடும்.
எந்தவித அலர்ஜியாக இருந்தாலும், தோல் அலர்ஜி என்று மட்டுமல்ல, வேப்பிலையை உருண்டை செய்து தேனில் நனைத்து முழுங்கிவர ஒவ்வாமை சரியாகும்.
தினமும் தேன் சாப்பிடுவது சளி தொடர்பான பிரச்சனைகளுக்கு மிகவும் உதவி செய்யும்.
சைனஸ் பிரச்னைக்கு எளிய டிப்ஸ்
- பனிக்காலத்தில் அதிகாலை, இரவு வேளைகளில் வெளியே செல்வதைக் குறைத்துக்கொள்ளவும்.
- படுக்கையறையை ஆகியவற்றைச் சுத்தமாக வைத்திருக்கவும்.
- கைக்குட்டைகளைக் கொதிக்கும் தண்ணீரில் சில நிமிடங்கள் ஊறவைத்து, துவைத்துப் பயன்படுத்தவும்.
- சைனஸ் பிரச்னை உள்ளவர்கள், செடி, பூக்கள், மரங்கள் இருக்கும் பகுதியில் உலவ வேண்டாம்.
- அசுத்தமான நீர் நிலைகளில் குளிக்க வேண்டாம்.
- குளிர்பானம் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
இதையும் படிக்கலாம் : பித்தத்திலிருந்து விடுதலை பெற!