பித்தத்திலிருந்து விடுதலை பெற!

கல்லீரலில் மஞ்சள் நிறத்தில் சுரக்கின்ற ஒரு வகை திரவத்தைத்தான் பித்தம் என்று சொல்கின்றோம். நம் செரிமானத்திற்கு உதவி, இன்றியமையாத பணியை இந்த பித்த நீர் தான் செய்கின்றது. முக்கியமாக அதிக கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடும் பொழுது அதற்கு ஏற்றது போல் பித்த நீர் சுரந்து செரிமாணத்திற்கு உதவுகிறது.

தினமும் அளவுக்கு அதிகமாக டீ, காபி போன்ற பானங்களை அருந்தும்பொழுது பித்தம் அதிகரிக்கும். தினமும் அதிகநேரம் கண்விழித்து கொண்டு சரியாக உறங்காமல் இருந்தாலும் உடலில் பித்தம் அதிகரிக்கும்.

பித்தம் அதிகரித்தால், அஜீரணம் முதல் டிப்ரஷன் வரை பல பிரச்னைகள் வரக்கூடும். அல்சர், உயர் ரத்த அழுத்தம் என பித்த நோய்ப் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். இன்றைய வாழ்வியல் சூழலில் பல நோய்கள் பெருகுவதற்கு பித்தம் மிக முக்கியக் காரணம். பித்தத்தைக் குறைக்க உணவில் காரத்தை, எண்ணெயைக் குறைக்க வேண்டும். கோழிக்கறி கூடவே கூடாது.

அதிகமாக கோதுமையைச் சேர்ப்பதுகூட பித்தத்தைக் கூட்டும். அரிசி நல்லது. ஆனால் கைக்குத்தல் அரிசியாகப் பார்த்துச் சாப்பிடுவது நல்லது. கரிசலாங்கண்ணிக்கீரை, கறிவேப்பிலை, சீரகம், தனியா, எலுமிச்சை, மஞ்சள், இஞ்சி. இவையெல்லாம் பித்த தணிக்கும். மனத்தையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வது அவசியம்.

  • இஞ்சித் துண்டு தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்த தெளிந்து ஆயுள் பெருகும்.
  • இஞ்சிச் சாறு, வெங்காயச் சாறு தேன் கலந்து குடித்தால் பித்த மயக்கம் தீரும்.
  • பழுத்த மாம்பழத்தை சாறு பிழிந்து அந்தச் சாறை அடுப்பில் லேசாக சூடேற்றி பின் ஆறவைத்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.
  • எலுமிச்சை சாதம் வாரத்தில் மூன்று நாள் காலையில் சாப்பிட்டால் பித்தத்தை தணிக்கும்.
  • ரோஜாப்பூ கஷாயம் பால் சர்க்கரை கூட்டி சாப்பிட்டால் பித்த நீர் மலத்துடன் வெளியேறும்.
  • பொன்னாவரை வேர், சுக்கு, மிளகு, சீரகம் கஷாயம் குடித்தால் பித்தபாண்டு தீரும்.
  • விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டு வந்தால் பித்தத்தை குறைக்கலாம்.
  • அகத்திக்கீரை சாப்பிட்டு வந்தால் பித்தக் கோளாறுகள் அகலும்.
  • பனங்கிழங்கு சாப்பிட்டால் பித்தம் நீக்கி உடல் பலம் பெருகும்.
  • கமலா பழம் (ஆரஞ்சு) சாப்பிட்டால் உடல் உஷ்ணத்தை தணிக்கும்.
  • நத்தைசூரி விதையை வறுத்து பொடித்து காய்ச்சி கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர கல்லடைப்பு தீரும்.
  • எலுமிச்சை இலையை மோரில் ஊறவைத்து அந்த மோரை உணவில் பயன்படுத்தி வந்தால் பித்த சூடு தணியும்.
  • அரச மரக் குச்சியை சிறு துண்டுகளாக வெட்டி சட்டியில் போட்டு காய்ச்சி ஆறவைத்து, அந்த நீரில் தேன் கலந்து குடித்தால் ரத்தத்தில் உள்ள பித்தமும் குறையும்.

இதையும் படிக்கலாம் : அஜீரணம் நீங்க இதை செய்தாலே போதும்..! 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *