தூக்கத்தில் யாரோ மேல் ஏறி அழுத்துவது போல் இருக்கிறதா?

sleep paralysis

இரவு நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது, யாரோ உங்கள் மேல் ஏறி அழுத்துவது போல் இருக்கும். உங்களால் கண்ணைத் திறக்க முடியாது.

கத்தலாம் என்றாலும் குரல் வெளியே வராது. சரி, திரும்பிப் படுக்கலாம் என்று நினைத்தாலும் திரும்பி படுக்க முடியாது. ஒரு நிமிடம் கழித்துத்தான் உங்களால் எதுவும் செய்யமுடியும். எழுந்து பார்த்தால் யாரும் அருகில் இருக்கமாட்டார்கள்.என்னடா இது என்று திகைத்திருப்பீர்கள். இதுதான் அமுக்குவான் பேய்.

உயிரைக் கொல்லும் அளவுக்கு கொடூரமான பேய் இல்லை என்றாலும், இதுவும் ஒரு முக்கியமான பேயாக கிரேக்கப் புராணங்களில் கூறப்படுகிறது. பொதுவாய் அமுக்குவான் பேய்கள் மற்ற பேய்கள் போல் புளியமரத்திலோ வேப்பமரத்தின் உச்சியிலோ இருக்காது. பூச்சிகளின் இராஜாவான இது வீட்டின் சிலந்திகளின் கூட்டிற்குள், எறும்புகளின் குறிப்பாக சிவப்பு எறும்புகளின் புற்றில், கரப்பான் பூச்சிகளின் பொந்துகளில் தான் வாழும்.

இது உலவும் நேரம் பெரும்பாலும் சூரியன் உதிப்பதற்கு சற்று முன்பாக மூன்று மணியில் இருந்து நாலு மணி வரை ஆனால் சில சமயம் அவை பகலில் கூட வரும்.

நம்மூரில் அமுக்குவான் பேய் என்று சொல்லப்படுவது உண்மையில் தூக்கபக்கவாதம் என்கிற கோளாறு.

சில சமயம் மூளை விழித்துக்கொண்ட பிறகும் உடல் தூங்கிக் கொண்டே இருக்கும். அதனால் தான் எழவோ, பேசவோ, கண்களைத் திறக்கவோ முடியாது.

இந்தக் கோளாறு தூக்கத்தில் ஏற்படும் இடையூறினால் இது வருகிறது. துயில் மயக்க நோய், ஒற்றைத் தலைவலி, ஏக்க நோய்கள், மற்றும் தூக்கத்தில் மூச்சுத் திணறல் ஆகிய கோளாறுகளுக்கும் இதற்கும் தொடர்புகள் உண்டு.

இதை தனிமைத் தூக்கபக்கவாதம், தொடர்தனிமைத் தூக்கபக்கவாதம் என்று இரண்டு வகைகளாகப் பிரிக்கிறார்கள்.

இதில் தனிமைத் தூக்கபக்கவாதம் என்பது ஒரு நபரின் வாழ்க்கையில் எப்போதாவது இரு நிமிடங்களுக்கும் குறைந்த நேரத்தில்தான் நிகழும். இது ஒன்றும் பிரச்னைக்குரியது அல்ல.

தொடர் தனிமைத் தூக்கபக்கவாதம் பேருக்கு ஏற்றபடி அடிக்கடி ஏற்படும். மேலும் இது ஒரு மணி நேரம் வரைக்கும் கூட இருக்கும். சில சமயம் அந்தரத்தில் பறப்பது போல்கூட தோன்றும். இதற்கு மருத்துவர்களிடம் (மந்திரவாதிகளிடம் அல்ல) சென்றே ஆகவேண்டும்.

துயில் மயக்க நோய் உடையவர்களுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களில் 50 சதவீதம் பேருக்கு இப்பிரச்னை ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், இன்றும் பெரும் அளவில் மக்கள் இது ஏதோ பில்லி சூனியத்தின் வேலை என்று நினைத்துக் கொண்டு மந்திரவாதிகளைத் தேடி ஓடிக்கொண்டிருக்கின்றனர். இந்த மாதிரி மூட நம்பிக்கைகளில் இருந்து மக்கள் விடுபடும் காலம் என்றுதான் வருமோ..!!

இதையும் படிக்கலாம் : அவசர உதவி தொலைபேசி எண்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *