திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில்

திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில் நவக்கிரகத் தலங்களில் ஏழாவது தலமாகும். நவகிரக தலங்களில் ஒன்று திருநள்ளாறு. இது புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே அமைந்துள்ளது. நள சக்கரவர்த்தியின் துயரை ஆற்றிய ஊர் என்பதால் திருநள்ளாறு என பெயர் பெற்றது. இக்கோயில் தேவாரப் படல் பெற்ற காவிரித் தென்கரைத் தலங்களில் 52 வது தலமாக இருக்கிறது.

மூலவர் தர்ப்பாரண்யேஸ்வரர், திருநள்ளாற்றீஸ்வரர்
அம்மன்/தாயார் பிராணேஸ்வரி, பிராணாம்பிகை, போகமார்த்த பூண்முலையாள்
தல விருட்சம் தர்ப்பை
தீர்த்தம் நளதீர்த்தம், பிரம்மதீர்த்தம், வாணி தீர்த்தம். இது தவிர அன்னதீர்த்தம், கங்கா தீர்த்தம் (நள தீர்த்தக்கரையிலுள்ள நளவிநாயகர் கோயிலில் உள்ள கிணறு), அஷ்டதிக்பாலகர் தீர்த்தங்கள்
அமைத்தவர் சோழர்கள்
ஊர் திருநள்ளாறு
மாவட்டம் காரைக்கால்
மாநிலம் புதுச்சேரி

சனி பகவான்

tirunallar dharbaranyeswarar temple
திருநள்ளாறு சனி பகவான்

சூரியனுக்குரிய மனைவியரில் ஒருத்தி உஷா. இவள் சூரியனின் வெப்பம் தாளாததால் தன் நிழலையே ஒரு பெண்ணாக்கி சாயாதேவி என்ற பெயரில் தங்கியிருந்தாள். சாயாதேவிக்கு சனீஸ்வரன் பிறந்தார். பின்னர் உண்மை தெரிந்த சூரியன் தன்னை ஏமாற்றிய மனைவியைக் கடிந்து கொண்டார். அவளுக்கு பிறந்த சனீஸ்வரனை வெறுத்து ஒதுக்கி விட்டார். சனி காசிக்கு சென்று விஸ்வநாதரை வணங்கி நவக்கிரக மண்டலத்தில் இடம் பெற்றார்.

சனியைப் போல கொடுப்பவருமில்லை. சனியை போல கெடுப்பவரும் இல்லை என்பர். அவ்வளவு சக்தி கொண்ட சனி பகவானின் மிகவும் பிரசித்தி பெற்ற புகழ் வாய்ந்த சனீஸ்வரன் கோயில் அமைந்துள்ள இடம் தான் திருநள்ளாறு.

சனீசுவரரை வணங்கினால் ஏழரை சனி உள்ளிட்ட பல சனிகளின் பிரட்சனை தீரும். நள தீர்த்தத்தில் நீராடி சனீசுவரை தரிசனம் செய்து, இறைவன் தர்ப்பாரண்யேஸ்வரர் வழிபட்டு பேறு பெறுகின்றனர். சனீஸ்வர பகவானின் சக்தி வாய்ந்த திருவருட்சிலையை கொண்ட இக்கோயில் தர்ப்பாரண்யேசுவரர் கோயிலில் ஒரு அங்கம்.

கடுமையான சனிதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பாதிப்பிலிருந்து விடுபட, சனிபகவானை பிரார்த்தித்து, சனிக்கிழமைதோறும் ஒருவேளை உபவாசம் இருத்தல் நல்லது. சனிபகவானுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, கறுப்பு வஸ்திரம், வடைமாலை சாத்தி, எள்ளுச் சாதம் நைவேத்தியம் செய்யலாம்.

சனிபகவானின் அருளினைப் பெற ஆஞ்சநேயர், கணபதியை வணங்கலாம். சனிபகவான் நீதிமான், நியாயவான் என்று போற்றப்பெறுபவர். நமக்குரிய கடமைகளைத் தவறாமல் செய்து, ஈஸ்வரனை வழிபட்டு வந்தால் அதிக பாதிப்பின்றி வாழலாம்.

தல வரலாறு

thirunallaru temple
திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில்

நிடதநாட்டு மன்னன் சேதி நாட்டு இளவரசி தமயந்தியை திருமணம் செய்து கொண்டான். ஆனால் அப்பெண்ணை தேவர்கள் மணந்துகொள்ள விரும்பினார்கள். ஆனால் தமயந்தி அவர்களைத் தவிர்த்து நளனை திருமணம் செய்தாள். இதனால் கோபம் கொண்ட தேவர்கள் சனீஸ்வரனிடம் நளனைத் துன்புறுத்த வற்புறுத்தினார்கள். சனீஸ்வரனும் நளனை துன்பப்படுத்தினார்.

இந்நிலையில் நளன் திருநள்ளாறு நகரில் இருக்கும் தர்ப்பாரண்யேஸ்வரரான சிவபெருமானை வணங்கியதால், சனீஸ்வரன் நளனை தன் துன்பப்பிடியிருந்து விடுவித்தார். இதுவே இத்தலத்தின் வரலாறு.

கோவில் அமைப்பு

திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில்

இக்கோயிலின் வெளிமுற்றம் விசாலமாகப் பரந்து விரிந்துள்ளது. இதன் வடப்புறம் வாகன மண்டபமும் பசுமடமும் உள்ளன. கோவில் சந்நிதியின் வலப்புறம் இடையனின் சந்நிதி உள்ளது. அதில் இடையன், அவன் மனைவி மற்றும் கணக்கனின் சிலைகள் உள்ளன. இதன் பின்புறம் வெளிப்பிரகாரம்.

முற்றவெளியை அடுத்து ஐந்து நிலைகள் கொண்ட இராஜகோபுர வாயில். அதனை அடுத்து, இரண்டாம் பிரகாரம். இதன் வடமேற்கு மூலையில் தியாகேசரின் வசந்த மண்டபம், வடக்கிலும் தெற்கிலும் நந்தவனங்கள், இதன் கீழ்ப்புறம் கட்டைக் கோபுர வாயிலில் கற்பக விநாயகர், இதனை அடுத்து மூன்றாம் பிரகாரம் உள்ளது. இதில் அறுபத்து மூவர், தேவார நால்வர், விநாயகர், தர்ப்பாரண்யேசுவரர் லிங்கம் அமைந்திருக்க, தனியொரு மண்டபத்தில் நளனும் லிங்கத் திருமேனியும் உள்ளது.

கோவிலின் கன்னி மூலையில் சொர்ண விநாயகரை அடுத்து, சோமாஸ்கந்தர், விடங்கத் தலங்களின் திருமேனிகள், அருகினில் நின்ற கோல நெடுமால், பைரவரை அடுத்துத் தனிச் சந்நிதியில் வள்ளி தெய்வானையுடன் முருகன், வடமேற்குக் கோடியில் எண்ணெய்க் காப்பு மண்டபம் அமைந்துள்ளது.

ஈசான மூலையில் சிவகாமியோடு நடராஜர், வடபக்கம் சூரியன் காட்சி. நிதமும் சூரிய பூஜை முடித்தே நாட்கால பூசை தொடங்கப் பெறும். இரண்டாம் கோபுரத்தின் உட்புறம் கொடிமரம் உள்ளது.

இதனை அடுத்து தியாகேசர் மண்டபத்தின் பக்கவாயிலை அடுத்து நள்ளாற்றீசர் சந்நிதி உள்ளது. தெற்கு வாயிலைத் தாண்டிய சந்நிதியில் வெள்ளி விமானத்தில் தியாகேசர், பெட்டகத்தில் மரகத விடங்கர், மூலவருக்கு வடபால் சண்டேசுவரர்.

வெளி வாயிலில் மூலவர் சந்நிதியின் வலப்புறம் இத்தலத்தின் சிறப்பு தெய்வமான சனி பகவான் கட்டைக் கோபுரச் சுவரின் சிறிய மண்டபத்தில் அருள் வழங்குகிறார். அருகினில் தெற்கு நோக்கி அம்பிகை சந்நிதி அமைந்துள்ளது.

தர்ப்பாரண்யேசுவரர்

இத்தலத்தில் உள்ள மூலவர் தர்ப்பாரண்யேசுவரர். இவர் சுயம்புமூர்த்தியாக உள்ளார். தர்ப்பையில் முளைத்தவர் என்பதால் தர்ப்பாரண்யேசுவரர் எனப்படுகிறார். தர்ப்பையில் முளைத்த தழுப்புடன் உள்ளார்.

இவரை திருமால், பிரம்மன், இந்திரன், திசைப்பாலர்கள், அகத்தியர், புலத்தியர், அர்ச்சுனன், நளன் ஆகியோர் வழிபட்டுள்ளனர்.

தல பெருமை

திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர், அம்பிகை பிராணேஸ்வரி குழந்தை இல்லாத தம்பதியருக்கு அருள் புரிவர். திருமாலுக்கு குழந்தை இல்லாத வேளையில் தர்ப்பாரண்யேசுவரரை வணங்கி மன்மதனை மகனாகப் பெற்றார். அதற்கு பரிசாக முருகப்பெருமானை சுவாமி அம்பாள் இடையே அமர்த்தி சோமாஸ்கந்தமூர்த்தி என்ற புதிய வடிவத்தை உருவாக்கினார். இந்த வடிவத்தை தேவாலயத்திற்கு எடுத்து சென்று வழிப்பட்ட இந்திரன், ஜெயந்தன், ஜெயந்தி என்ற குழந்தைகளை பெற்றான்.

ஒரு கட்டத்தில் வாலாசுரன் என்பவன் தேவேந்திரனுடன் போருக்கு வந்த போது முசுகுந்தன் சோழ மன்னன் உதவியுடன் போரில் வெற்றி பெற்றான். இந்திரன் இதற்கு பரிசாக அந்த சோமாஸ்கந்த மூர்த்தியை பெற்று வந்தான். அதை திருவாரூரில் பிரிதிஷ்டை செய்தான். அதே போல் மேலும் ஆறு மூர்த்திகளை படைத்தான். அவற்றில் ஒன்றை திருநள்ளாறில் வைத்தான்.  தியாகவிடங்கருக்கு இத்தலத்தில் தனி சன்னதி உள்ளது. தியாகவிடங்கரை வணங்கி வந்தால் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் அருள்வார் என்று நம்பிக்கை.

சனீஸ்வரனை வணங்கும் முறை

  • நள தீர்த்தத்தில் காலை 5 மணிக்கு நீராடி, கரையிலுள்ள நளவிநாயகர் மற்றும் பைரவரை வணங்க வேண்டும்.
  • கோயிலுக்குள் உள்ள கிணறான கங்காதீர்த்தத்தை தரிசித்து, கோபுர வாசலுக்கு வந்து ராஜகோபுர தரிசனம் முடித்து, உள்ளே நுழையும் போது முதல் படிக்கட்டை வணங்கி முதல் பிரகாரத்திற்கு செல்ல வேண்டும்.
  • இந்த சுவரில் வரையப்பட்டுள்ள நள சரிதத்தை பக்திப்பூர்வமாக பார்த்த பிறகு, காளத்திநாதரை வணங்க வேண்டும்.
  • பின்னர் சுவாமி சன்னதிக்குள் சென்று மூலவர் தர்ப்பாரண்யேஸ்வரரை வணங்கி, தியாகவிடங்கர் சன்னதிக்கு செல்ல வேண்டும். இங்குள்ள மரகதலிங்கத்தை வணங்கிய பிறகு, அர்த்தநாரீஸ்வரர், துர்க்கை, சண்டிகேஸ்வரரை வணங்கிய பின் வெளிப்பிரகாரம் செல்ல வேண்டும். அங்குள்ள தெய்வங்களை தரிசித்து கட்டைக் கோபுர வாசல் சென்று அம்பிகை பிராணேஸ்வரியை வழிபட வேண்டும்.
  • பிறகு தான் சனீஸ்வரர் சன்னதிக்கு செல்ல வேண்டும். சிலர் முதலிலேயே சனீஸ்வரனை தரிசிக்க சென்று விடுகின்றனர். இது சரியான வழிபாட்டு முறையல்ல. இங்குள்ள இறைவனை பார்த்த பிறகு சனீஸ்வரனைக் கண்டால் தான் சனிதோஷ விமோசனம் கிடைக்கும்.

தல சிறப்பு

Sani Bhagavan
தங்கக்கவசம்

சனிபகவானுக்கு உரிய பரிகாரத் தலமாகத் திகழ்கிறது திருநள்ளாறு திருத்தலம். தர்ப்பை அடர்ந்து வளர்ந்திருந்த காரணத்தால், இந்தப் பகுதி தர்ப்பாரண்யம் என்று முதலில் வழங்கப்பட்டது, பின்னர் நகவிடங்கபுரம் என்றும் பெயர் பெற்றது. இங்கு அமர்ந்து இருக்கும் ஈசனின் திருப்பெயர் தர்ப்பாரண்யேஸ்வரர்.

இத்தலத்தில் நந்தியும், பலிபீடமும் சுவாமிக்கு எதிரே இல்லாமல் சற்று ஒதுங்கியிருப்பதைக் காணலாம்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.

தமிழகத்தின் சப்தவிடங்கத் தலங்களில் திருநள்ளாறும் ஒன்று. விடங்க என்றால் ‘செதுக்கப்படாத மூர்த்தி’ என்று பொருள். ஏழு சுயம்புத் தலங்களில் திருநள்ளாறும் ஒன்று.

தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் உள்ள சனிபகவான், ஈசனின் கட்டளைப்படி இங்கு வந்து வணங்கும் பக்தர்களுக்கு நல்வாழ்வினை அளிக்கும் பணியை மேற்கொண்டுள்ளார். சனிபகவானால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தாலும், இந்தத் தலத்துக்கு வந்து ஈசனை வணங்கினால் நல்ல பலன்களைப் பெறலாம்.

ஜன்மச் சனி, கண்ட சனி, அஷ்டமத்து சனி, மத்திய சனி, ஆத்ய சனி, ஏழரை சனி என்று சனிபகவானால் எத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டிருந்தாலும், இந்தத் தலத்துக்கு வந்து பரிகாரம் செய்வது வழக்கம்.

நளதீர்த்ததில் நீராடி, எள் தீபம் ஏற்றி, கருங்குவளை மலர் சாத்தி சனீஸ்வரனை வணங்கினால் தீராத எந்தத் துயரமும் தீரும்.

சனிபகவானின் தோஷம் நீங்க விரும்புபவர்கள், இந்தத் தலத்தில் திருஞானசம்பந்தர் அருளிய “போகமார்த்த பூண்முலையாள்” என்று தொடங்கும் பதிகம் பாடுவது நல்லது.

சனிப்பெயர்ச்சி மற்றும் முக்கிய காலங்களில் சனீஸ்வரன் தங்க காக வாகனத்தில் தங்கக்கவசம் அணிந்து பவனி வருவது கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும். சனீஸ்வரனைக் கண்டால் எல்லாருமே ஓட்டம் பிடிக்கும் நிலைமையில், இங்கே தங்கக்கவச சனீஸ்வரனைத் தரிசிக்க கூட்டம் அலை மோதும்.

தமிழகத்தை தவிர கன்னட மக்களுக்கு சனீஸ்வரன் மீது நம்பிக்கை அதிகம். எனவே, தமிழ் மக்களுக்கு ஈடாக கர்நாடக மாநில மக்களும் இங்கு அதிக அளவில் வருகிறார்கள்.

சனீஸ்வரனுக்கு உரியவை

  • ராசி – மகரம், கும்பம்
  • திசை – மேற்கு
  • நிறம் – கருப்பு
  • வாகனம் – காகம்
  • தானியம் – எள்
  • மலர் – கருங்குவளை
  • ரத்தினம் – நீலமணி
  • நிவேதனம் – எள்ளுப்பொடி சாதம்
  • உலோகம் – இரும்பு.
  • அதிதேவதை – எமன்
  • சமித்து – வன்னி
  • பஞ்சபூதம் – காற்று
  • நோய் – வாதம்

தீர்த்தங்கள்

Thirunallaru nalan theertham

திருநள்ளாறு என்றாலே தீர்த்த ஸ்தலம் என்பதே உண்மை. இக்கோயிலை சுற்றி நளதீர்த்தம், பிரம்மதீர்த்தம், வாணி தீர்த்தம் என்ற தீர்த்த குளங்கள் உள்ளது.

நள தீர்த்தத்தில் குளித்தால் சனித்தொல்லை நீங்கும். பிரம்ம தீர்த்தத்தில் குளித்தால் முந்தைய சாபங்கள் ஒழியும். வாணி தீர்ததம் எனப்படும் சரஸ்வதி தீர்த்தத்தில் நீராடினால் மூடன் கூட கவி பாடுவான் என்று நம்பிக்கை.

அன்னதீர்த்தம், கங்கா தீர்த்தம் (நள தீர்த்தக்கரையிலுள்ள நளவிநாயகர் கோயிலில் உள்ள கிணறு), அஷ்டதிக்பாலகர் தீர்த்தங்கள் எனப்படும் எட்டு தீர்த்தங்கள் இருந்தன. ஒரு காலத்தில் உலகிற்கு ஏதேனும் கேடு நேர இருக்குமானால் கங்கா, பிரம்ம மற்றும் நள தீர்த்தங்களின் நீர் சிவப்பாக மாறிவிடுமாம். இதை எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு தகுந்த பரிகார பூஜைகள் செய்து மக்கள் தப்பித்திருக்கிறார்கள் என்கின்றனர்.

திருநள்ளாறு கோவில் பூஜை நேரங்கள்

பூஜை நேரம்
உஷத் காலம் 6:00 AM TO 7:00 AM
காலசந்தி 8:30 AM TO 9:30 AM
உச்சிக்காலம் 11:00 AM TO 12:30 PM
சாயரட்சை 5:00 PM TO 6:30 PM
ராக்காலம் 7:00 PM TO 8:00 PM
அர்த்த ஜாமம் 8:30 PM TO 9:00 PM

திருவிழாக்கள்

மகா சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை.

பிரார்த்தனை மற்றும் நேர்த்திக்கடன்

சனி தொல்லை நீங்க நள தீர்த்தத்திலும், முந்தைய சாபங்கள் நீங்க பிரம்ம தீர்த்தத்திலும், கவி படும் திறன் பெற வாணி தீர்த்தத்திலும் நீராடி பிராத்தனை செய்கின்றன.

பிராத்தனைகள் நிறைவேறியதும் பகவானுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.

நடை திறந்திருக்கும் நேரம்

காலை 5.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரையும்.

மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரையும் நடை திறந்திருக்கும்.

முகவரி

அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில்,

காரைக்கால் மாவட்டம், புதுச்சேரி – 609 606.

தொலைபேசி எண் : +91 4368 – 236 530,236 505, 94422 36504,223 207

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *