வடபழனி முருகன் ஆலயம்  அரிய தகவல்கள்

vadapalani murugan temple

சுமார் 150 அல்லது 200 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் சென்னையில் அண்ணாஸ்வாமி நாயகர் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் முருக பக்தர். அவர் தினமும் முருக பூஜை செய்த பின்னரே தனது கடமைகளைத் துவக்குவாராம்.

அவர் கனவில் ஒருமுறை முருகன் தோன்றி தன்னை திருத்தணிக்கு வந்து வணங்குமாறு கூற அவரும் திருத்தணியில் இருந்த சுப்பிரமணியர் ஆலயத்துக்குச் சென்று அவரை வணங்கினார். அப்போது அவர் தன்னை மறந்து அமர்ந்து இருந்தார். அவர் அங்கு அமர்ந்து இருப்பதை கவனிக்காத குருக்கள் அவரை ஆலயத்துக்குள் வைத்து பூட்டிவிட்டுச் சென்றார். சற்று நேரம் பொறுத்து தன் நிலைக்கு வந்த அண்ணாஸ்வாமிகள் தான் தனிமையில் உள்ளே இருந்ததை உணர்ந்தார்.

ஆகவே முருகனிடம் தனக்கு வாசன சித்தி தருமாறு வேண்டிக் கொண்டு தன் நாக்கை அறுத்துக் கொண்டாராம். வாசன சித்தியை வேண்டுபவர்கள் தமது நாக்கை அறுத்துக் கொண்டே காணிக்கை செலுத்துவார்கள். வாசன சித்தி பெற்றால் அவர்கள் கூறுவது நடக்கும் என்ற நிலை ஏற்படும் .

அதே நேரத்தில் குருக்களுக்கு தான் எவரையோ ஆலயத்தில் வைத்துப் பூட்டிவிட்டதான நினைப்பு வர ஆலயத்துக்கு மீண்டும் சென்று கதவை திறந்து பார்த்தார். அங்கு நாக்கு அறுந்த நிலையில் இருந்த அண்ணாஸ்வாமியை கண்டுபிடித்து அவரை மருத்துவரிடம் அழைத்துச் சென்று மருத்துவ சிகிச்சை செய்தார். விரைவில் அண்ணாஸ்வாமியின் அறுந்த நாக்கும் வளர்ந்ததாம்.

அவர் சென்னைக்கு வந்து வடபழனியில் தங்கினார். இடையில் ஒருமுறை அவர் பழனிக்குச் சென்று இருந்தார். அங்கு முருகனை தரிசித்தவாறு இருந்தபோது ஒரு கடையில் அழகிய முருகன் படத்தைப் பார்த்தார். அதை வாங்க பணம் இல்லை. அன்று இரவு அந்த கடைகாரர் கனவில் முருகன் தோன்றி அண்ணாஸ்வாமியின் அடையாளங்களைக் கூறி மறுநாள் அதை அண்ணாஸ்வாமிக்கு இலவசமாகத் அந்தப் படத்தைத் தருமாறு கூறினார்.

அதே நேரம் அண்ணாஸ்வாமி கனவிலும் முருகன் தோன்றி மறுநாள் அந்த கடைக்குச் சென்று அந்த படத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு கூறினார். கனவில் கிடைத்த ஆணையை ஏற்று மறுநாள் அந்த கடைக்கு அண்ணாஸ்வாமி செல்ல இருவரும் தத்தம் கனவினைப் பற்றி கூறிக் கொண்டப் பின்னர் அந்த படத்தை கடைக்காரர் அண்ணாஸ்வாமிக்குத் தந்தார். அதை எடுத்து வந்தவர் தனது வீட்டில் அதை வைத்து அதற்கு பூஜைகளை செய்து வந்தார்.

சில நாட்களில் தன் வீட்டில் ஒரு அறையில் வண்ணமயமான முருகன் படத்தை வரையச் செய்து அந்த வீட்டையே ஆலயம் போல மாற்றி அந்த படத்தை வணங்கியவாறு குறி சொல்ல ஆரம்பிக்க அவர் கூறியது பலவும் நடந்ததினால் பலர் அவரிடம் வரத் துவங்கினார்கள்.

காலப்போக்கில் அவரிடம் இரண்டு சிஷ்யர்களும் சேர்ந்தனர்.ஆலயமும் அதன் அருகில் உள்ள தெப்பக் குளமும் அவர்களில் ஒருவரான ரத்னவேல் செட்டியார் என்பவர் அண்ணாஸ்வாமியின் மறைவுக்குப் பின்னர் அவருடைய இடத்தில் அமர்ந்தார். அவரே தற்சமயம் ஆலயத்தில் உள்ள முருகன் சிலையை ஒரு சிற்பியை வரவழைத்து பழனியில் உள்ள முருகனைப் போலவே உருவாக்கியவர். அவருக்குப் பின்னர் வந்த பாக்கியலிங்கத் தம்பிரான் என்பவரே, பல வகைகளில் உழைத்து பணம் சேர்த்து மிகச் சிறிய அளவில் இருந்த அந்த ஆலயத்தை பெரிய ஆலயமாக மாற்றி அமைத்தார்

ஆலயத்துக்கு பக்தர்கள் காவடி எடுத்துச் செல்லும் காட்சி இன்று சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டு உள்ள வடபழனி ஆலயம் பழனி ஆலயத்தைப் போலவே புகழ் பெற்று விளங்குகின்றது. ஆலயத்தில் உள்ள முருகன் சிலைக்கூட பழனி முருகரைப் போலவே உள்ளது.

ஆலயத்தில் எந்த நாளிலும் கூட்டம் நிரம்பியே வழிகின்றது. சென்னையில் புகழ் பெற்றது மட்டும் அல்ல, மிகவும் முக்கியமான ஆலயம் இது. ஆண்டுதோறும் சுமார் ஐயாயிரம் ஜோடிகள் இங்கு வந்து திருமணம் செய்து கொள்வதாகக் கூறுகிறார்கள்.

இதையும் படிக்கலாம் : முருகன் வித்தியாசமான தோற்றத்தில் காட்சி தரும் தலங்கள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *