விஷ்ணு காயத்ரி மந்திரம்

விஷ்ணுவை வழிபடும் போது, விஷ்ணு காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரித்து வரலாம். இந்த மந்திரத்தைச் சொல்வதால், ஆபத்துகளில் இருந்து விடுபடலாம். உலக இன்பங்களை அனுபவிக்கலாம். மறுபிறவி நல்லவிதமாக அமையும். பாவங்கள் அகலும். நல்ல குணமும், அழகும் கொண்ட சந்ததிகள் உருவாகுவார்கள்.

காக்கும் கடவுள் என்று சிறப்பு பெயர் பெற்றவர் மகாவிஷ்ணு. வைணவ சமயத்தின் தலைவனாக விளங்கும் இவர், நீலநிற மேனியை கொண்டவர். வைணவ சமயத்தில் பரமாத்மாவை அடைவது எளிதான முறையாகக் கூறப்பட்டிருக்கிறது. இதில் விக்கிரக ஆராதனைக்கு முக்கியத்துவம் அதிகம். பரிசுத்தமான பக்தியுடன் பெருமாளிடம் சரணாகதி அடைந்தால், அகங்காரம் அழிந்து, ஜீவாத்மா பரமாத்மாவுடன் ஒன்றிவிடுவது சாத்தியமாகும். இதுவே வைணவ சமயத்தின் தத்துவம்.

விஷ்ணு என்பதற்கு எங்கும் நிறைந்திருப்பவன் என்று பொருள். விஷ்ணுவுக்கு நாராயணன் என்ற பெயரும் உண்டு. ‘நாரம்’ என்றால் ‘வெண்ணிற நீர்’, ‘அயனம்’ என்றால் ‘இடம்’ என்று அர்த்தம். வெண்மை நிற பாற்கடலை இருப்பிடமாகக் கொண்டவன் என்பதால் ‘நாராயணன்’ என்று அழைக்கப்படுகிறார். வைணவ சமயத்தில் மந்திரங்கள் மூன்று வகையாக உள்ளன. அவை, அஷ்டாச்சரம் (எட்டெழுத்து), துவய மந்திரம் (சரணாகதி), சரமஸ்லோகம் என்பன. இவற்றில் ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற எட்டெழுத்து மந்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

விஷ்ணு காயத்ரி மந்திரத்திலும் ‘நாராயணாய’ என்ற மந்திரம் வருகிறது. தினமும் இறைவழிபாடு செய்யும்போது, விஷ்ணுவின் பல மந்திரங்களை கூறி வழிபடுகிறோம். அதோடு விஷ்ணு காயத்ரி மந்திரத்தையும் உச்சரித்து வருவது மிகவும் நன்மையளிக்கும்.

விஷ்ணு காயத்ரி மந்திரம்

“ஓம் நாராயணாய வித்மஹே

வாசுதேவாய தீமஹி

தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத்”

பொருள்

பரம்பொருளான நாராயணனை அறிவோம். வாசுதேவன் மீது தியானம் செய்வோம். விஷ்ணுவாகிய அவன் நம்மை காத்து அருள் செய்வான்.

இதையும் படிக்கலாம் : சுதர்சன காயத்ரி மந்திரம்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *