முருகனுக்கு காவடி எடுப்பது ஏன்..?

muruganuku kavadi

தெய்வங்கள் பலவாக இருந்தாலும், வேறு எந்த தெய்வத்திற்கும் இல்லாத நிலையில் காவடி எடுப்பது முருகனுக்கு மட்டும் உரிய சிறப்பாகும். முருகனுக்கு மட்டுமே காவடி எடுக்க வேண்டும். ஒவ்வொரு தெய்வங்களுக்கும் ஒவ்வொரு விசேச வழிபாட்டு முறைகள் உண்டு. அந்த முறையில்தான் முருகப் பெருமானுக்குக் காவடி எடுப்பது விசேச முறை பெற்றுள்ளது.

முருகன், அழகன், குமரன், வேலன், ஆறுமுகன், கார்த்திகேயன், கந்தன் என்று பல பெயர்களில் அழைக்கப்படும் ஆறுபடை வீடு கொண்ட முருகனுக்கு பக்தர்கள் காவடி எடுத்து வழிபடுகிறார்கள். முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?

அகத்திருக்கு உதவிய இடும்பன்

அகஸ்திய முனிவரின் சீடர்களில் ஒருவரான இடும்பனை அழைத்து, தனது வழிபாட்டிற்காக கயிலை சென்று அங்கு முருகனுக்கான கந்த மலையிலுள்ள சிவசக்தி சொரூபமான சிவகிரி, சக்திகிரி என்னும் இரு சிகரங்களையும் கொண்டு வரும்படி கூறினார்.

அகஸ்தியரின் கட்டளைக்கிணங்க இடும்பனும் கயிலை சென்று இவ்விருமலைகளையும் இருபுறமும் தொங்க, காவடியாகக்கட்டி எடுத்துக் கொண்டு வந்தான். முருகன் இவ்விருகிரிகளையும் திருவாவினன்குடியில் நிலைபெறச் செய்யவும், இடும்பனுக்கு அருளவும் விரும்பி ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினார்.

இடும்பன் வழி தெரியாமல் திகைத்த போது, முருகன் குதிரை மேல் செல்லும் அரசனைப்போல் தோன்றி இடும்பனை திருவாவினன்குடிக்கு அழைத்து வந்து சற்று ஓய்வெடுத்து செல்லும்படி கூறுகிறார்.

இடும்பனும் காவடியை இறக்கி வைத்து ஓய்வெடுத்து விட்டு புறப்படும் போது காவடியை தூக்க முடியாமல் திண்டாடினான். ஏன் இப்படி காவடியை தூக்க முடியாமல் போனது என்று சுற்றிப் பார்க்கும் போது சிவகிரியின் மேல் ஒரு சிறுவன் கோவணாண்டியாய் கையில் தண்டுடன் நிற்பதைக்கண்டான். இடும்பனும் சிறுவனை மலையிலிருந்து கீழே இறங்கும்படி வேண்டினான்.

ஆனால் அந்த சிறுவன் இந்த மலை ‘தனக்கே சொந்தம்” என்று உரிமை கொண்டாட, கோபமுற்ற இடும்பன் அச்சிறுவனை தாக்க முயன்றான். அப்போது இடும்பன் வேரற்ற மரம் போல் கீழே சரிந்து விழுந்தான்.

இதைக்கண்ட அகஸ்தியர், இடும்பன் மனைவியுடன் சென்று வேண்ட, முருகன் இடும்பனுக்கு அருளாசி புரிந்ததுடன் இடும்பனை தனது காவல் தெய்வமாகவும் நியமித்தார். அப்போது முருகன், இடும்பன் போல் காவடியேந்தி சந்தனம், பால், மலர் போன்ற அபிஷேகப் பொருட்களை தன் சன்னதிக்கு எடுத்து வருபவர்களுக்கு அருள் பாலிப்பதாக வாக்களித்தார்.

நான் குமரக்கடவுள் அடிமை

இடும்பன் பிறப்பினால் அசுரனாக இருந்தாலும், இறை பக்தி மிகுந்தவன். அவன் சிவபெருமானை நோக்கி தவமிருந்தான். அவனுடைய தவத்தை மெச்சிய ஈசன், என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். அதற்கு இடும்பன், ‘எம்பெருமானே, சூரபத்மனை சம்ஹாரம் செய்த கந்தவேள் குமரனின் அடியோனாக யாம் வாழ தாங்கள் அருள்புரிய வேண்டுகிறேன்’ என்று வேண்டினான். ஈசனும் அவ்வாறே ஆகுக என்று அருள் புரிந்தார். சிவபெருமான், இடும்பனுக்கு அருள்புரிந்த இடமானது, தற்போது இடும்பாவனம் என அழைக்கப்படுகிறது. அந்த இடம் திருவாரூரில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் ரயில் மார்க்கத்தில், கோவிலூர் என்ற இடத்தில் உள்ளது.

காவடி சுமக்கும் பக்தர்கள்

முருகப்பெருமான் இட்ட கட்டளையின் படியே, இடும்பன் பழனி மலையின் அடிவாரத்தில் இருந்துகொண்டு காவல் புரிந்து வருகிறான். பழனி முருகனைக் காணவரும் பக்தர்கள், முதலில் இடும்பனை வணங்கி வழிபட்ட பின்பே, மலையேறிச் சென்று பழனி மலை தண்டாயுதபாணியை வணங்கி வழிபடும் வழக்கம் இன்றும் இருந்து வருகிறது. வரும் பிப்ரவரி 8ஆம் தேதியன்று தைப்பூச திருநாள் வருகிறது. அன்றைக்கு வேண்டியவர்க்கு வேண்டும் வரமருளும் முருகப்பெருமானை வணங்கி வாழ்வில் வளம் பெருவோம்.

மயில் தோகைகள், மாவிலைகள், தர்ப்பைப்புல் முதலியவற்றைக் கட்டி, விபூதி, சந்தனம், குங்குமம் ஆகியவை இடப்பட்டு, மலர்மாலைகள் சாத்தப்பட்டு அழகுபடுத்தப்பட்டன. காலம் செல்லச்செல்லக் காவடியின் அமைப்பும் அழகும் வளர்ந்து புதிய, புதியப் பரிமாணங்களை அடைந்தன. இன்று பால் காவடிகள், பன்னீர் காவடிகள், புஷ்பக் காவடிகள், சந்தனக் காவடிகள், பண்டியல் காவடிகள், இளநீர்க் காவடிகள், தீர்த்தக் காவடிகள், அபிஷேகக் காவடிகள், மச்சக் காவடிகள், மயில் காவடிகள், சர்ப்பக் காவடிகள், பறவைக் காவடிகள், தூக்குக் காவடிகள் என்று பலவகைகள் இருக்கின்றன.

அதன் காரணமாக பக்தகோடிகள் தற்போது முருகனுக்கு காவடி எடுத்து வந்து வழிபட்டு குமரனை தரிசித்து செல்கின்றனர். வேலுண்டு வினையில்லை! மயிலுண்டு பயமில்லை! குகனுண்டு குறையில்லை! வேலவனை வேண்டி வாழ்வில் வெற்றி பெறுவோமாக!

இதையும் படிக்கலாம் : முருகனின் பெயருக்கு விளக்கம்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *