அரியலூர் மாவட்டம் (Ariyalur District)  

Ariyalur District

அரியலூர் மாவட்டம் ஜனவரி 1, 2001-இல் பெரம்பலூர் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டது. ஆனால் மார்ச் 31, 2002இல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் பொருளாதாரத்தை காரணம் கூறி அரியலூர் மாவட்டம் மீண்டும் பெரம்பலூர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.

பின்னர் மீண்டும் பெரம்பலூர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, தமிழகத்தின் 31-வது மாவட்டமாக அரியலூர் மாவட்டம் நவம்பர் 23, 2007இல் உருவாக்கப்பட்டது.

நாடு இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
தலைநகரம் அரியலூர்
பகுதி மத்திய மாவட்டம்
பரப்பளவு 1,949.31 ச.கி.மீ
மக்கள் தொகை 754,894 (2011)
மக்கள் நெருக்கம் 1 ச.கீ.மீ – க்கு 389
வாகனப் பதிவு TN 61

வரலாறு

அரியலூர் மாவட்டத்திற்கு தொன்மையான மற்றும் புகழ்வாய்ந்த வரலாறு ஒன்று உள்ளது. இதன் காலங்கள் 2 இலட்ச வருடங்களுக்கும் முன்னுள்ள வரலாற்றுக்கு முந்தைய நாகரீகத்திற்குக் கொண்டு செல்கிறது.

மனித இனம் தோன்றுவதற்கு முன், இந்நிலம், கடலுக்கு அடியில் மூழ்கியிருந்தது. பின் காலநிலைமாற்றங்களால், கடல்நீர் கிழக்கு நோக்கி நகர்ந்து ஜெனிஸ் (gneiss) குடும்பத்தைச் சார்ந்த உருமாறிய பாறைகளால் ஆன தற்போதைய நிலம் வெளிப்பட்டது.

இந்த பாறை வகைகள் வண்டல் மற்றும் ஜிப்சம் பாறைகளால் வெவ்வேறு புவியியல் காலகட்டங்களில் உருவானவை. 15 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட இம்மாற்றங்களின் காலத்தை புவியியலாளர்கள் ‘கிரிட்டாசியஸ்’ காலம் என குறிப்பிடுகின்றனர்.

கடல் விலகியதால் ஏற்பட்ட மாற்றங்களைத் தொடர்ந்து, கடல் மற்றும் கடற்கரையிலே வாழ்ந்த பல்வேறு இனங்கள், சகதி மற்றும் சதுப்புநிலத்தில் மூழ்கி படிமங்கள் ஆகின. எனவே அரியலூர் மாவட்டம் ஒரு தொல்லுயிர் விலங்கியல் பூங்காவாகத் திகழ்வதுடன் ‘புவியியல் ஆராயச்சியாளர்களின் மெக்கா’ எனும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறது.

மரம், விலங்கு மற்றும் தாவர இனங்களின் பல்வேறு வகையான படிமங்கள் இம்மாவட்டத்தில் காணக்கிடைக்கின்றன. டைனோசர் முட்டைகள் கல்லங்குறிச்சி மற்றும் நிண்ணியூர் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இக்காரணங்களால், இம்மாவட்டம் பழங்கால உயிரின படிமப் புதையல்களின் இருப்பிடமாக உள்ளது.

வரலாற்றுக்கு முந்தைய கால (கி.மு.2,00,000 இருந்து கி.பி 300 வரை) மக்கள் வாழ்ந்த பகுதி இம்மாவட்டத்தை உள்ளடக்கியது. நிண்ணியூர் , ஓட்டகோவில், விளாங்குடி, விக்கிரமங்கலம், அரியலூர், கீழக்கொளத்தூர், ஏலாக்குறிச்சி, திருமழபாடி, தத்தனூர் பொட்டகொல்லை,குணமங்கலம், மேலப்பழுவூர், கண்டிராதீர்த்தம், துளார் ஆகிய கிராமங்களில் கண்டுபிடிக்கப்பட்ட பழைய கற்கால மற்றும் புதிய கற்கால கருவிகள், பெருங்கற்களாலான பாத்திரங்கள் மற்றும் மண்பாண்டங்கள் வடிவில் உள்ளவை பண்பாட்டுத் தடயங்களாகின்றன.

அரியலூர், சங்க காலத்தில்(கி.மு.500 இருந்து கி.பி 300 வரை) உறையூரை ஆண்ட சோழர்கள், கொல்லிமலையை ஆண்ட வில்வித்தையில் சிறந்தவரான மழவர் தலைவன் ஒரி ஆகியோரின் ஆட்சியின் கீழ் இருந்தது. மழவர் குல மக்கள், திருமழபாடி பகுதியில் மழவர் தலைவனின் படை முகாமில் பணியாற்றி வாழ்ந்து வந்தனர்.

மழவர்கள் திருமழபாடி மற்றும் ஒரியூரில் அரியலூர் மீதான தங்களது ஆட்சியை நிலைப்படுத்தினர். சங்க கால கடைசி அரசனான கோச்செங்கணானால் தோற்கடிக்கப்பட்ட விளந்தைவேல் அரசனின் தலைநகரமாக உடையார்பாளையம் வட்டத்திலுள்ள விளந்தை இருந்தது. இத்தலைநகரம், கரிகாலசோழனின் சமகாலத்திய, பிடவூர் இருங்கோவேள் ஆண்ட இருங்கோளப்பாடியின் ஒரு பகுதியாகிய விளந்தைகுர்ரமின் தலைமை இடமாக இருந்தது.

இன்றைய அரியலூர் மாவட்டம் பல்லவ பேரரசின் (கி.பி 6-9’வது நூற்றாண்டு) ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டது. மகேந்திரவர்ம பல்லவர் கால நாணயங்கள், அரியலூர் அருகே கோவிந்தபுரம் எனுமிடத்தில் கிடைத்தது.

பல்லவர்கள் காலத்திய ஸ்ரீவத்சம் எனும் (லட்சுமி) ஒரு கல் சிற்பம், அரியலூரில் உள்ள கோதண்டராமசாமி கோவிலில் பாதுகாக்கப்படுகிறது. மகேந்திரவர்மன் மற்றும் நரசிம்மவர்மன் காலத்தில் வாழ்ந்த, தேவார மூவர்களான அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோர் கீழபழுவூர், திருமழபாடி, கோவிந்தப்புத்தூர் ஆகிய இடங்களில் உள்ள கோவில்களை வழிபட்டு, தேவாரப் பாடல்கள் பாடியுள்ளனர்.

அரியலூர் மாவட்டம், பெருமைமிகு சோழர்களின் தொடக்க காலம்  (கி.பி 850-1279) முதல் இறுதி காலம் வரை அவர்களது ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது. சோழ அரசர்களான முதலாம் ஆதித்யன் (871-907) முதல் மூன்றாம் இராஜேந்திரன் (1246-1279) வரையிலான காலங்களில் பொறிக்கப்பட்ட 450 க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் இம்மாவட்டத்தில் கிடைக்கபெற்றுள்ளன. இவை சோழர்கால ஆட்சியின் அரசியல், சமூகம், பொருளாதாரம், மதம் மற்றும் பண்பாட்டு வாழ்க்கையை பிரதிபலிக்கின்றன.

சோழ அரசர்களான முதலாம் ஆதித்யன் முதல் முதலாம் இராஜேந்திரன் வரை இவர்களின் ஆட்சியின் கீழ், நிலக்கிழார்களாக இருந்த பழுவேட்டரையர்கள் மேலப்பழுவூரை தலைநகராகக் கொண்டு அரியலூரை ஆண்டு வந்தனர்.

முதலாம் இராஜேந்திரன் காலத்திலிருந்து உடையார்பாளையம் வட்டத்திலுள்ள கங்கைகொண்டசோழபுரம் சோழப்பேரரசின் தலைநகரமாக இருந்தது. கி.பி 1027 இருந்து கி.பி 1279 வரை, முதலாம் இராஜேந்திரன் முதல் மூன்றாம் இராஜேந்திரன் வரை ஆண்ட 16 சோழ மன்னர்களின் ஆட்சியில், கங்கைகொண்டசோழபுரம் தென்னிந்தியா முழுமைக்கும் பெருமைமிகு தலைநகரமாக விளங்கியது.

திருமழபாடி மற்றும் விக்கிரமசோழபுரம் (தற்போதைய விக்கிரமங்கலம்) , சோழர்களின் ஓய்வு எடுக்கும் அரண்மனையாக இருந்தது. இராஜகம்பீரசோழபுரம் (தற்போதைய இராயம்புரம்), ஜெயங்கொண்டசோழபுரம், கொல்லாபுரம்,ஆவணிகந்தர்வபுரம் (தற்போதைய கீழையூர்), மதுராந்தகபுரம் (தற்போதைய பெரியதிருக்கோணம்) போன்ற பல வாணிப நகரங்கள் இருந்தன. மணிகிராமம், ஐநூறுவர், வலஞ்சியர் மற்றும் அஞ்சுவண்ணம் ஆகியவை, ஊர் ஊராகச் சென்று வாணிபம் செய்பவர்களின் மையங்களாகத் திகழ்ந்தன.

இம்மாவட்டத்தில் உள்ள கோவில்களில் பெரும்பாலானவை, சோழர் காலத்தில் கட்டப்பட்டவை. இவற்றிற்கு திருமழபாடி, கீழையூர்(முதலாம் ஆதித்யன்), கீழபழுவூர்(முதலாம் பராந்தகன்), காமரசவல்லி(சுந்தரசோழன்), கோவிந்தப்புத்தூர்(உத்தமசோழன்), செந்துறை(முதலாம் இராஜராஜன்), சென்னிவனம், பெரியதிருக்கோணம், கங்கைகொண்டசோழபுரம் (முதலாம் இராஜேந்திரன்) மற்றும் ஸ்ரீபுரந்தான்(மூன்றாம் இராஜராஜன்) ஆகிய ஊர்களில் உள்ள கோவில்கள் அழகிய எடுத்துக்காட்டுகளாகும்.

ஜடாவர்மன் சுந்தரபாண்டியன், சோழ நாட்டின் மீது படையெடுத்து அதைக் கைப்பற்றினான். மாறவர்மன் முதலாம் குலசேகர பாண்டியன் (1268-1318) கி.பி 1279 இல் தலைநகரான கங்கைகொண்டசோழபுரத்தைக் கைப்பற்றி தனது ஆட்சியின்கீழ் கொண்டு வந்தான். கி.பி.1255 முதல் 1370 வரை பாண்டியர்கள் இப்பகுதியை ஆண்டார்கள் என்பதை 49 கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.

கொய்சள மன்னர்களான வீரநரசிம்மன், வீரசோமேஸ்வரன், ராமநாதன் ஆகியோர் சில காலம் இங்கு ஆட்சி செய்து சோழ மன்னன் மூன்றாம் ராஜராஜனுக்குப் பாண்டியர்களின் தாக்குதலை எதிர்கொள்ள உதவினர். திருமழபாடி மற்றும் காமரசவல்லி ஆகிய இடங்கள் கொய்சளர்களின் படைமுகாமாக இருந்தன.

60 க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் இந்த பகுதியில் விஜயநகர மன்னர்கள் ஆட்சி(கி.பி 1371 – 1685) செய்ததைத் தெரிவிக்கின்றன. விஜயநகர அரசரான காம்பனா, முட்டுவாஞ்சேரியில் இருந்து இந்த மாவட்டத்தை ஆட்சி செய்ததை கி.பி 1372-ஆம் வருட குறிப்பு காட்டுகிறது.

விஜய நகர அரசர்களின் கீழ், விளந்தையின் கச்சிராயர்கள் தொடர்ச்சியாக 7 அரசர்களுக்கு மேல் அரியலூர் பகுதியை ஆண்டு வந்தனர். கி.பி 1573 இல் விஜயநகரத்தின் செஞ்சி நாயக்கன் மற்றும் முதலாம் ஸ்ரீரங்கன் ஆகிய அரசர்களின் கீழ் அரசு நிலையிட்ட கிருஷ்ணப்ப மழவராயர், அரியலூர் பாளையத்தை ஆண்டார். கி.பி 1817 வரை 16 மன்னர்கள் அரியலூரில் ஆட்சி செய்தனர். அவர்கள் பல கோவில்களைக் கட்டி, கலை மற்றும் ஓவியங்கள் வளர பங்காற்றினர்.

இதேபோல் சின்ன நல்ல காலாட்கள் தோழ உடையார் உடையார்பாளையத்தில் பாளையக்காரர் அரசைத் தோற்றுவித்தார். அவர்கள் உடையார்பாளையத்தில் அழகிய கோவில்கள் மற்றும் அரண்மனைகளைக் கட்டி கலை மற்றும் ஓவியங்கள் வளர ஆதரவு அளித்தனர். இவை இன்றளவும் அவர்களது குடும்பத்தின் பெருமைமிகு ஆட்சியை நினைவுபடுத்துகின்றன.

பீஜப்பூர் சுல்தான்கள், இப்பகுதியை சில காலம் ஆண்டனர். ஷேர்கான் லோதி வாலிகண்டபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இப்பகுதியை ஆண்டு வந்தார். பின்னர் மராட்டிய அரசன் சிவாஜியால் கி.பி 1677 ஆம் ஆண்டு தோற்கடிக்கப்பட்டார். சிவாஜி திருமழபாடியில் சில காலம் முகாமிட்டு, பிற்காலத்தில் தஞ்சாவூரின் அரசராக இருந்த, தன் சகோதரர் ஈகோஜியுடனான முரண்பாடுகளைத் தீர்த்துக்கொண்டார்.

மொகலாய அரசன் ஔரங்கசீப் மராட்டியர்களிடமிருந்து கர்நாடகத்தைக் கைப்பற்றி, சுல்பிர்கான் மற்றும் சததுல்லா ஆகியோரை கர்நாடக நவாப்பாக நியமித்தான். அவர்கள் பாளையக்காரர் வசமிருந்த அரியலூர், தஞ்சாவூர், திருச்சி ஆகிய பகுதிகளைக் கைப்பற்றினர். விஜய ஒப்பில்லாத மழவராயர் நவாப்புகளின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டார்.

கி.பி 1755 மற்றும் கி.பி 1757 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற கர்நாடகப் போர்களில், பிரெஞ்சுக்காரர்கள் அரியலூரைத் தாக்கினர். ஆனால், ஆங்கிலேயர்கள் அரியலூர் பாளையக்காரர்களைக் காப்பாற்ற படைகளை அனுப்பினர்.

கி.பி. 1780 இல் இரு பாளையக்காரர்கள் ஹைதர் அலியின் உதவியை நாடி, நவாப்புகளின் பிடியிலிருந்து விடுபட்டனர். ஆங்கிலேயர்களால் ஹைதர் அலி தோற்கடிக்கப்பட்ட பின், பாளையக்காரர்கள் ஆங்கிலேயரின் ஆட்சியை ஏற்று அவர்களுக்குக் கப்பம் செலுத்தினர். இறுதியில் ஆங்கிலேயர்கள் கி.பி. 1801 இல் கர்நாடக அரசை வெற்றி கொண்ட பிறகு, அரியலூர் மற்றும் உடையார்பாளையம் பாளையக்காரர்கள் அவர்களின் கீழ் ஜமீன்தார்களாக ஆனார்கள். சுதந்திரத்திற்குப்பிறகு கி.பி 1950 இல் ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டது.

சுதந்திரப் போராட்டத்தில் அரியலூர்

சுதந்திரப் போராட்டத்தில், அரியலூர் மாவட்டம் மிகவும் முக்கிய பங்கு வகித்தது. அரியலூர் சபாபதி பிள்ளை, நடேச அய்யர், கணபதி ரெட்டியார், நடராஜன் பிள்ளை, எரவாங்குடி பத்மநாதன், அரியலூர் மானோஜிராவ், குப்புசாமி, அபரஞ்சி, அப்பாசாமி, வீரபத்திரன், ரங்கராஜன், விக்கிரமங்கலம் அழகேசம் பிள்ளை, மணக்கால் சதாசிவம் பிள்ளை ஆகியோர் இந்த மாவட்டத்தில் இருந்த முக்கிய சுதந்திரப் போராளிகளில் சில ராவர்.

மாவட்ட வருவாய் நிர்வாகம்

அரியலூர், உடையார்பாளையம் ஆகிய 2 வருவாய் கோட்டங்களும், அரியலூர், செந்துறை, உடையார்பாளையம், ஆண்டிமடம் ஆகிய 4 வருவாய் வட்டங்களும், 15 உள்வட்டங்களும், 195 வருவாய் கிராமங்களும் கொண்டது.

உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சி நிர்வாகம்

12 உறுப்பினர்கள் கொண்ட ஒரு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையும், 6 ஊராட்சி ஒன்றியங்களும், 201 கிராம ஊராட்சிகளும், அரியலூர் & ஜெயங்கொண்டம் என 2 நகராட்சிகளும், வரதராஜன்பேட்டை மற்றும் உடையார்பாளையம் என 2 பேரூராட்சிகளும் கொண்டது.

அரியலூர் மாவட்ட எல்லைகள்

வடக்கு வடகிழக்கு மற்றும் கிழக்கில் : கடலூர் மாவட்டம்

தெற்கு மற்றும் தென்கிழக்கில் : தஞ்சாவூர் மாவட்டம்

தென்மேற்கே : திருச்சிராப்பள்ளி மாவட்டம்

மேற்கு மற்றும் வடமேற்கில் : பெரம்பலூர் மாவட்டம்

புவியியல்

அரியலூர் மாவட்டத்தின் மூன்று முக்கிய நதிகள் : கொள்ளிடம், மருதையாறு, வெள்ளாறு.

அரியலூர் மாவட்டத்தின் மூன்று முக்கிய நகரங்கள் : அரியலூர், உடையார்பாளையம், ஜெயங்கொண்டம்.

அரசியல்

அரியலூர், குன்னம், ஜெயங்கொண்டம் என மூன்று சட்டமன்றத் தொகுதிகளை கொண்டது.

அரியலூர் மாவட்டத்தின் பகுதிகள் சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் உள்ளது.

சுற்றுலா மற்றும் வழிபாட்டுத் தலங்கள்

அரியலூர் மாவட்டத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மற்றும் கோவில்கள் பல உள்ளன.

மேலப்பழுவூர் & கீழையூர்

இந்த கிராமத்தின் பழைய பெயர் மன்னுபெரும்பழுவூர், பெரியபழுவூர மற்றும் மேலைப்பழுவூர் என இருந்தது. சோழ அரசர்களாகிய முதலாம் ஆதித்யன் முதல், முதலாம் இராஜேந்திர சோழன் வரையிலான இவர்களது காலங்களில் கேரளாவிலிருந்து வந்த பழுவேட்டரையர்கள், நிலக்கிழார்களாக இருந்து இக்கிராமத்தை தலைநகராகக் கொண்டு அரியலூர் பகுதியை ஆண்டு வந்தனர்.

குமரன் கந்தன், குமரன் மறவன், கந்தன் அமுதன், மறவன் கந்தன் போன்றோர் பழுவேட்டரையர்கள் குடும்பத்தில் மன்னர்களாக இருந்தனர். இவ்வூரிலுள்ள சுந்தரேஸ்வரர் கோவில், முதலாம் ஆதித்ய சோழன் காலத்திற்குப் பிற்பட்டதாகும். இதன் பெயர் பகைவிடை ஈஸ்வரம்.

கிராமத்தின் கிழக்குப்பகுதியிலுள்ள கீழையூர், சோழர்களின் காலத்தில் ஆவணி கந்தர்வபுரம் என அழைக்கப்பட்டது. இது ஊர் ஊராய்ச் சென்று வணிகம் செய்பவர்களின் ஒரு வாணிக நகரமாக இருந்தது. ஆவணி கந்தர்வ ஈஸ்வரம் என அழைக்கப்பட்ட கீழையூரில் முதலாம் ஆதித்யா மன்னனின் 13 ஆவது வயதில் கி.பி 884 ஆம் ஆண்டு குமரன் கந்தன் பழுவேட்டரையரால் சிவன் கோவில் கட்டப்பட்டது. சோழர் கால கோவில்களில் ஒன்றான இந்த கோவில் மிகச் சிறந்த கல் கோவில்களில் ஒன்று.

அழகான சிற்பங்களை வரிசையாகக் கொண்டு வெவ்வேறு கட்டிடக்கலை முறையில் இருப்பதால் சிறந்த முறையில் பாதுகாக்கப்படுகிறது. சோழ மன்னர்கள், பழுவேட்டரையர்கள் குடும்பத்துடன் திருமண உறவுகள் கொண்டிருந்தார்கள். பராந்தக சோழன், குமரன் மறவன் பழுவேட்டரையர் மகளான அருண்மொழிநங்கையை மணந்து, அரிஞ்சய சோழனை ஈன்றார்.

உத்தம சோழரும் (970-986) பழுவேட்டரையர்கள் குடும்பத்தைச் சேர்ந்த இளவரசியை மணந்தார். முதலாம் இராஜராஜனின் மனைவியாகிய, பஞ்சவன்மாதேவி, ஆவணி கந்தவபுரத்தைச் சேர்ந்தவர். சோழர்கள், இத்தலைநகரத்தில் நாணயத் தொழிற்சாலையை வைத்திருந்ததாகத் தெரிய வருகிறது.

கீழப்பழுவூர்

கீழப்பழுவூர், பழுவேட்டரையர்களின் தலைநகரத்தின் ஒரு பகுதியாக அமைக்கப்பட்டது. குன்றக்குர்ரமில் உள்ள பிரம்மதேய கிராமமான இது, சிறுபழுவூர் என அழைக்கப்பட்டது. திருஞானசம்பந்தர், கி.பி 7 ஆம் நூற்றாண்டில் ஆலந்துறையார் கோவிலைப்பற்றி பாடல்கள் பாடியுள்ளார். பரசுராம முனிவர் தன் தாயைக் கொன்ற பாவத்தை, இங்கு தவமிருந்து நீக்கிக் கொண்டார் என சொல்லப்படுகிறது. துறவி சம்பந்தர் காலத்தில், இக்கோவில் மலையாள பிராமணர்களால் வழிபாடு செய்யப்பட்டது. இக்கோவில் முதலாம் பராந்தக சோழன், உத்தம சோழன் ஆகியோர் காலத்தில் கற்களால் கட்டப்பட்டது.

திருமழப்பாடி – வைத்தியநாத சுவாமி திருக்கோயில்

திருமழப்பாடியின் வரலாறு ஆனது சங்க காலத்திலிருந்து தொடங்குகிறது. இது சங்க கால மழவர் பரம்பரையினரின் இராணுவ முகாமாக இருந்ததால், மழவர்பாடி என்று அழைக்கப்பட்டு பின்னர் திருமழப்பாடி என்றானது.

இந்த இடத்தில் உள்ள வைத்தியநாத சுவாமி என்று அழைக்கப்படும் சிவன் கோவிலானது தேவார நாயன்மார்களான அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோர்களால் வழிபாடு செய்யப்பட்டு, பாடல் பெற்ற இடமானது.

இது அய்யடிகள் காடவர்கோன் அவர்களால் வணங்கப்பட்டு அவரது க்ஷேத்திர வெண்பாவில் குறிப்பிடப்பட்டு பாராட்டப்பட்டுள்ளது. இம்முனிவர், மகேந்திரவர்ம பல்லவனின்(598-630) பாட்டனார் சிம்மவர்ம பல்லவனால்(540-558) அடையாளம் காணப்பட்டார்.

இந்த இடத்தின் தெய்வம், சுந்தரரின் கனவில் தோன்றி, தன்னுடைய இடத்தைப் பார்வையிட்டுத் தன்னை துதிக்குமாறு கூறியதாக நம்பப்படுகிறது. அதன்படி சுந்தரர் இக்கோவிலுக்கு வந்து வழிபட்டு, புகழ்பெற்ற தேவாரப் பாடலாக ‘பொன்னார் மேனியனே’ என்று தொடங்கி பாடியுள்ளார்.

இச்சிவன் கோவில், முதலாம் ஆதித்ய சோழன் (871-907) காலத்தில் கற்களால் கட்டப்பட்டது. பின்னர் முதலாம் இராஜராஜ சோழனின் ஆணையின்படி, இக்கோவில் அவரது மகன் முதலாம் இராஜேந்திர சோழனால் புதுப்பிக்கப்பட்டு பணி முடிக்கப்பட்டது.

ஹொய்சள மன்னன் வீரநரசிம்மனால் கி.பி 1235-36 இல் மீண்டும் சீரமைக்கப்பட்டது. முதலாம் ஆதித்யா , முதலாம் இராஜராஜன் மற்றும் முதலாம் இராஜேந்திரன் ஆகிய மன்னர்களின் அரசிகளால் ஆபரணங்களும், நிலங்களும் இக்கோவிலுக்குப் பரிசாக வழங்கப்பட்டன.

முதல் மற்றும் இரண்டாவது கோபுரங்கள் முறையே பாண்டியர் மற்றும் சோழர் காலங்களில் கட்டப்பட்டன. இந்த கோவிலின் புகழ்பெற்ற திருவிழா, நந்தி (நந்தி கல்யாணம்) திருமணம் ஆகும். இத்திருமணவிழாவை காண்பதன் மூலம் திருமணத்தடைகள் நீங்குவதாக பரவலான நம்பிக்கை இப்பகுதியில் உள்ளது.

காமரசவல்லி – வாலாம்பாள் அம்மன் உடனுறை சுந்தரேஸ்வரர் கோவில்

காமரசவல்லி உள்ள வாலாம்பாள் அம்மன் உடனுறை சுந்தரேஸ்வரர் கோவில், சுந்தர சோழன் காலத்தில் கி.பி.962 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இங்கு ரதி தவமிருந்து தன் கணவன் மன்மதனை மீட்டதால் இவ்வூர் காமரதிவல்லி என பெயர் பெற்றதாக உள்ளூர் மரபுவழிக் கதைகள் கூறுகின்றன. இவ்வூரின் கிழக்குப்பகுதியில் அழகியமணவாளம் என்னும் ஊர் உள்ளது. இது ரதியின் அழகிய கணவன் பெயரால் அழகியமணவாளம் (அழகிய கணவன் – மன்மதன்) என்று அழைக்கப்பட்டது. ரதியின் ஒரு அழகான வெண்கல உருவச்சிலை இக்கோயிலில் பாதுகாக்கப்படுகிறது.

நாக அரசன் கார்க்கோடகன், தனது சாபம் நீங்க, இங்குள்ள சிவனை வழிபட்டதால் இக்கோவில் கார்கோடக ஈஸ்வரம் என வழங்கப்பட்டதாக ஒரு கதை சொல்லப்படுகிறது. இக்கதையை விளக்கும் படங்களுடனான கல்வெட்டுப்பலகை ஒன்று இக்கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்கு 40 க்கும் மேற்பட்ட சோழ, பாண்டிய, ஹொய்சளர்களின் காலத்திய கல்வெட்டுகள் உள்ளன. இக்கோவிலுக்கு திருநல்லூர் ஸ்ரீகோவில் மகாதேவர், திருநல்லூர் பரமேஸ்வரர், திருகார்க்கோடக ஈஸ்வரத்து மகாதேவர் கோவில் எனவும் பெயர்கள் உள்ளதாக கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. இவ்வூருக்கு காமரசவல்லிசதுர்வேதிமங்கலம் என்ற பெயரும் உள்ளதாக கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இக்கோவிலில் சோழர் காலத்திய சிற்பங்களும், வெண்கலச்சிலைகளும் உள்ளன.

கோவிந்தப்புத்தூர் – கங்க ஜகதீஸ்வரர் கோவில்

கோவிந்தப்புத்தூர், உடையார்பாளையம் வட்டத்தில், கொள்ளிடம் ஆற்றின் வடக்குக் கரையில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள சிவன் கோவில் கங்க ஜகதீஸ்வரர் கோவில் என அழைக்கப்படுகிறது.

மகேந்திரவர்ம பல்லவன் காலத்திய, அப்பர் மற்றும் சம்பந்தர் ஆகியோர் தங்களது தேவார திரட்டுகளில் இக்கோவிலைப் பற்றிப் புகழ்ந்து பாடியுள்ளனர். இங்கு பார்த்தன் (விஜயன் – மகாபாரத பாண்டுவின் மகன்) சிவனை வழிபட்டு, ஒரு வரம் பெற்றதாக இவர்களது பாடல்கள் மூலம் தெரிய வருகிறது. காமதேனு பசு, சிவலிங்கத்தின் மீது பாலைச் சொரிந்து வழிபட்டதால் ‘கோ-கறந்த-புத்தூர்’ என அழைக்கப்பட்டு பின்னர் கோவிந்தப்புத்தூர் என மருவியது. சோழ, பாண்டிய மற்றும் விஜய நகர மன்னர்களின் கல்வெட்டுக்கள் இக்கோவில் சுவர்களில் பொறிக்கப்பட்டுள்ளன.

தற்போதுள்ள கோவில், உத்தம சோழன் காலத்தில் கி.பி 980 இல் அவரது ஆணையின்படி, குவலாலபுரம் ( கோலார், கர்நாடகா) ஊரைச் சேர்ந்த அம்பலவாண பழுவூர் நாயக்கரால் கட்டப்பட்டது. இக்கோவிலில் முற்காலச் சோழர் காலத்திய சிற்பங்களும், வெண்கலச்சிலைகளும் உள்ளன.

ஸ்ரீபராந்தகசதுர்வேதிமங்கலத்தில் உள்ள கல்வெட்டு இவ்விடத்தை, விஜயமங்கலம் என குறிப்பிடுகிறது. மூன்றாம் இராஜேந்திர சோழனின் சாதனைகள் பற்றிய குறிப்பு இக்கோவிலில் பொறிக்கபட்டுள்ளதை சம்பந்தர், தேவாரப் பாடல்களில் குறிப்பிட்டுள்ளார்.

விக்கிரமங்கலம்

முதலாம் இராஜேந்திர சோழன் ஆட்சிக் காலத்தில் இக்கிராமம் நிறுவப்பட்டு அவரது குடும்பப் பெயரால் விக்கிரமசோழபுரம் என அழைக்கப்பட்டது. இந்த இடம் சோழ மன்னர்களின் துணை நகரமாக விளங்கியதாக விக்கிரமசோழன், இரண்டாம் குலோத்துங்க சோழன் மற்றும் மூன்றாம் குலோத்துங்க சோழன் ஆகியோரின் காலத்திய கல்வெட்டுக்கள் கூறுகிறது.

இவ்விடத்திலிருந்து சோழ நாட்டின் பல கோவில்களுக்கு நிலங்களை தானமாக வழங்க ஆணை பிறப்பித்தனர்.சோழர் காலத்தில் விக்கிரமசோழபுரம், ஒரு புகழ்பெற்ற வர்த்தக மற்றும் வாணிப மையமாக இருந்தது. சோழர் காலத்திய அழகிய ஜெயின் மற்றும் புத்தர் சிற்பங்கள் இந்த கிராமத்தில் பாதுகாக்கப்படுகிறது. இராஜேந்திர சோழீஸ்வரம் எனப்படும் இச்சிவன் கோவில் முதலாம் இராஜேந்திர சோழன் (1012-1044) காலத்திற்கு அழைத்துச் செல்கிறது.

செந்துறை, சென்னிவனம், ஸ்ரீபுரந்தான்

கல்வெட்டு ஆதாரங்களின்படி, செந்துறை, சென்னிவனம் மற்றும் ஸ்ரீபுரந்தானில் உள்ள சிவன் கோவில்கள், முறையே முதலாம் இராஜராஜன் (985-1014), முதலாம் இராஜேந்திரன் (1012-1044) மற்றும் மூன்றாம் குலோத்துங்கன் (1178-1218) ஆகியோரின் காலத்தில் கட்டப்பட்டவை.

கங்கைகொண்டசோழபுரம்

கி.பி 1023 இல், கங்கை சமவெளியை வெற்றி கொண்ட பின்னர் முதலாம் இராஜேந்திர சோழனால், கங்கைகொண்டசோழபுரம் எனும் நகரமும் கங்கைகொண்டசோழீச்சரம் எனும் சிவன் கோவிலும் சோழ கங்கம் எனும் ஏரியும் வெற்றியின் நினைவாக அமைக்கப்பட்டது. இம்மூன்றும், கங்கை நதிகரையில் சோழர்களின் புலிக்கொடியை ஏற்றிய தமிழர்களுடைய வீரத்தின் நினைவுச்சின்னங்களாக இன்றும் விளங்குகின்றன.

அவன் தனது தலைநகரத்தை தஞ்சாவூரிலிருந்து புதிதாகக் கட்டப்பட்ட இங்கு மாற்றினான். அவனது காலத்திலிருந்து, கி.பி 1279 இல் ஆட்சி செய்த சோழர் வம்சத்தின் இறுதி வரை, சோழ சாம்ராஜ்யத்தின் தலைநகராக 256 ஆண்டுகள் இருந்தது.

இன்றளவும் வாழும் வரலாறாக உள்ள இக்கற்கோவில், முதலாம் இராஜேந்திர சோழனின் காலம் முதல் சோழர்களின் கலை மற்றும் கட்டிடக்கலைகளின் அழகிய தொகுப்பாக உள்ளது. ஆந்திரா, கர்நாடகா மற்றும் வங்காளம் ஆகிய இடங்களிலிருந்து எடுத்து வந்த பல சிற்பங்கள்,போர் நினைவுப் பரிசாக இக்கோவிலிலும், அருகிலுள்ள கிராமங்களிலும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

சந்தேஷ்வர அனுக்கிரக மூர்த்தி மற்றும் சரஸ்வதி ஆகியவை இக்கோவிலுள்ள அழகிய சிற்பங்கள் ஆகும். இந்த நகரம் ஒட்டக்கூத்தரின் மூவர் உலா, ஜெயங்கொண்டாரின் கலிங்கத்துப்பரணி ஆகிய இலக்கியங்களில் புகழ்ந்து பாடப்பட்டுள்ளது.

இராஜேந்திர சோழனின் கங்கை பயணம் அவனது ஆட்சியின் 11 வது ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது. சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஏசாலம் செப்புத்தகடுகள் மூலம் கி.பி 1036 இல் முதலாம் இராஜேந்திர சோழனால் கங்கைகொண்டசோழீச்சரம் கோவில் கட்டப்பட்டதாக உறுதியான ஆதாரங்கள் கிடைக்கப்பெறுகிறது.

இக்கோவில் இந்திய தொல்லியல் துறை மற்றும் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. சமீபத்தில் யுனெஸ்கோ உலக பாரம்பரிய நினைவுச்சின்னங்களுள் ஒன்றாக இதனை அறிவித்துள்ளது.

அரியலூர்- கோதண்டராமசாமி கோவில்

இக்கோவிலின் மூலவர் ஸ்ரீனிவாசப்பெருமாளாக இருந்தாலும், இது ராமன், லக்ஷ்மணன் மற்றும் சீதை ஆகியோர் கோவில் கொண்டுள்ளதால் கோதண்டராமசாமி கோவில் என்றே அழைக்கப்படுகிறது.

கிழக்கு நோக்கியுள்ள இச்சன்னதியில், ஸ்ரீனிவாச பெருமாள், ஸ்ரீதேவி மற்றும் பூதேவி ஆகிய இரு மனைவியருடன் காட்சி தருகின்றார்.

இங்கு கர்ப்பகிரஹம் 15 சதுர அடியிலும்,அர்த்தமண்டபம் 17 அடி நீளத்திலும் மற்றும் மகா மண்டபமும் உள்ளன.

தெற்கு நோக்கியுள்ள, பிற்காலத்தில் சுண்ணாம்புக்கல்லால் கட்டப்பட்ட கோதண்டராமசாமி கோவிலின் சன்னதி, அர்த்தமண்டபத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

விக்கிரமங்ககலம் அருகே கொள்ளிடம் ஆற்றின் கரையிலிருந்து அரியலூர் அரசரால் ராமன், லக்ஷ்மணன் மற்றும் சீதையின் கற்சிலைகள் கொண்டு வரப்பட்டு பித்தளை மற்றும் வெண்கலக்கவசங்கள் அணிவிக்கப்பட்டு இச்சன்னதியில் நிறுவப்பட்டுள்ளது.

தசாவதார மண்டபம் எனப்படும் 20 அடி உயரமுள்ள 10 தூண்கள் உள்ள நான்கு வரிசை கொண்ட பரந்த மண்டபம் கோயிலின் முன்பகுதியில் உள்ளது. 6.6 அடி உயரமுள்ள விஷ்ணுவின் 10 அவதாரங்கள் இத்தூண்களில் செதுக்கப்பட்டுள்ளன.

90 அடி உயரமும் 6 அடுக்குகளும் உள்ள கோபுரம் முன்பகுதியில் கட்டப்பட்டுள்ளது. கோபுரத்தின் அடித்தளம் சுண்ணாம்பு கற்களாலும், மேற்பகுதி செங்கல் மற்றும் சுண்ணாம்புக்கலவையாலும் கட்டப்பட்டுள்ளது.

கோபுரத்தின் முன்பகுதியில் கருடன் சன்னதியும், தென்பகுதியில் கோதண்ட புஷ்கரணி எனும் குளமும் உள்ளது.

வேட்டக்குடி- கரையவெட்டி பறவைகள் சரணாலயம்

வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972 பிரிவு 18(1) இன் படியும் அரசு ஆணை எண். 219,சுற்றுச்சூழல் மற்றும் வனத்(FR.VI) துறை, நாள் 10.06.1997 இன் படியும் கரையவெட்டி பறவைகள் சரணாலயம் 453.71 ஹெக்டேர் பரப்பளவில் அமைக்க அறிவிக்கப்பட்டது .

இச்சரணாலயம், புலம்பெயரும் நீர்ப்பறவைகளுக்கான, தமிழ்நாட்டிலுள்ள மிக முக்கியமான நன்னீர் ஏரிகளுள் ஒன்றாக விளங்குகிறது. மாநிலத்தின் பெரிய ஏரிகளுள் இதுவும் ஒன்று.

இந்த ஏரி, மாநிலத்தின் மிக அதிக அளவிலான நீர்ப்பறவைகள் வந்து கூடும் இடமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இச்சரணாலயத்தில் உள்ள 188 பறவை இனங்களில் 82 இனங்கள் நீர்ப்பறவைகளாகும். அருகிவரும் பட்டைதலை வாத்து, இந்த ஏரியின் முக்கிய வருகையாளர்களுள் ஒன்றாகும்.

இச்சரணாலயத்தைப் பார்வையிட ஏற்ற காலம் செப்டம்பர் – மார்ச்.

ஏலாக்குறிச்சி

அடைக்கல மாதா ஏலாக்குறிச்சி,அரியலூர் மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற இடங்களில் ஒன்றாகும்.

ரோமன் கத்தோலிக்கர்களுக்கான ஒரு புனித வழிபாட்டு தலமாகும். இத்தாலியிலிருந்து அரியலூர் பகுதிக்கு வந்த வீரமாமுனிவர் என அழைக்கப்படும்.

கான்ஸ்டாண்டினோபிள் ஜோசப் பெஸ்கி கி.பி 1710 முதல் 1742 ஆண்டு வரையிலான காலங்களில் கிருத்துவ மதத்தைப் பரப்பினார்.

இங்குள்ள அடைக்கல மாதா ஆலயம் இவரால் கட்டப்பட்டது. இவர், பாளையக்காரர் ஒருவரின் கொடிய நோயினை, அன்னை மாதா ஆசிர்வாதத்துடன் குணப்படுத்தினார்.

வீரமா முனிவரின் சேவையைக் கண்டு மகிழ்ந்த பாளையக்காரர், 60 ஏக்கர் நிலங்களை இக்கோவிலுக்கு வழங்கினார்.

இக்கொடை பற்றிய குறிப்புகள் கி.பி 1763 இல் கல்வெட்டில் பொறிக்கப்பட்டு, இந்த ஆலயத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

பொருளாதாரம்

அரியலூர் மாவட்டத்தில் சுண்ணாம்புக் கல் மிகுதியாக கிடைப்பதால் இங்கு தமிழகத்திலேயே அதிகமான எண்ணிக்கையில் சிமெண்ட் ஆலைகள் உள்ளன.

இதனால் அரியலூர் சிமெண்ட் சிட்டி (Cement city) என்றும் பரவலாக அழைக்கப்படுகிறது.

சிமெண்ட் தவிர நிலக்கரி அதிக அளவில் கிடைக்கிறது. தமிழகத்தில் நெய்வேலிக்கு அடுத்தபடியாக ஜெயங்கொண்டம் பகுதியில் அதிக அளவில் படிமங்களாகக் கிடைக்கிறது.

இதனையடுத்து தமிழக அரசும் ஜெயங்கொண்டம் அனல் மின்நிலைய திட்டம் என்ற ஒரு திட்டத்தை ஆரம்பித்து அதற்கான பூர்வாங்கப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

இது தவிர இம்மாவட்டத்தில் செம்மண் மிகுந்து காணப்படுவதால் முந்திரி அதிக அளவில் பயிரிடப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *