கடலூர் மாவட்டம் (Cuddalore district)

Cuddalore district

கடலூர் மாவட்டம் (Cuddalore district) இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் கடலூர் ஆகும். இது பண்டைய, வரலாற்று மாவட்டங்களில் ஒன்றாகும். தற்போது கடலூர் மாவட்டம் தென் ஆற்காடு மாவட்டத்திலிருந்து 1993 செப்டெம்பர் 30 அன்று பிரிக்கப்பட்டது. கடலூர் நகரம் , மாவட்டத்தின் தலைநகரமாக இருக்கிற்து. இந்த மாவட்டத்திற்கு இன்நகரத்தின் பெயரினையே பெயரிடப்பட்டுள்ளது. புராணத்தில் இந்த மாவட்டம் ஸ்ரீராமபகுதியாக விவரிக்க குறிப்பிடபட்டுள்ளது.

சோழர் கால வரலாற்றுப் புதினம் பொன்னியின்செல்வன் படி அக்காலத்தில் இவ்வூரின் பெயர் கடம்பூர் என்று அழைக்கப்பட்டது. அந்த பெயரே கடலூர் என ஆகியிருக்கலாம் என கருதப்படுகிறது. இம்மாவட்டத்திற்கு திருப்பாதிரிப்புலியூர் என்ற பெயரும் உள்ளது.ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்த பெயரை உச்சரிக்க அவர்களுக்கு கடினமாக இருந்ததால் இவ்வூருக்கு ‘கடலூர்’ என பெயரிட்டனர்.

நாடு இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
தலைநகரம் கடலூர்
பகுதி மத்திய மாவட்டம்
பரப்பளவு 3703 ச.கி.மீ
மக்கள் தொகை 26,05,914 (2011)
மக்கள் நெருக்கம் 1 ச.கீ.மீ – க்கு 704
அஞ்சல் குறியீடு 607xxx
தொலைபேசிக் குறியீடு 04142
வாகனப் பதிவு TN-31, TN-91
Contents
  1. வரலாறு
  2. மாவட்ட வருவாய் நிர்வாகம்
    1. வருவாய் கோட்டங்கள்
    2. வருவாய் வட்டங்கள்
    3. உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சி நிர்வாகம்
  3. கடலூர் மாவட்ட எல்லைகள்
  4. புவியியல்
    1. ஆறுகள்
    2. அணைக்கட்டுகள்
  5. அரசியல்
    1. சட்டமன்றத் தொகுதிகள்
    2. நாடாளுமன்றத் தொகுதிகள்
  6. சுற்றுலா மற்றும் வழிபாட்டுத் தலங்கள்
    1. வெள்ளி கடற்கரை
    2. புனித டேவிட் கோட்டை
    3. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்
    4. பிச்சாவரம்
    5. வீராணம் ஏரி
    6. திருப்பாதிரிப்புலியூர் பாடலேசுவரர் கோயில்
    7. திருவந்திபுரம் தேவநாதப் பெருமாள் கோயில்
    8. சிதம்பரம் நடராசர் கோயில்
    9. திருமுட்டம் பூவராக சுவாமி கோயில்
    10. வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபை
    11. விருத்தாச்சலம் பழமலைநாதர் கோயில்
  7. கடலூர் சிறைச்சாலை
  8. பொருளாதாரம்
    1. கடலூர் துறைமுகம்

வரலாறு

இந்தியாவுக்கு வாணிபம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் செஞ்சியை ஆண்ட மன்னர்களிடம் இருந்து கடலூரில் இருந்த புனித டேவிட் கோட்டையை வாங்கினார்கள். சென்னை புனித ஜார்ஜ் கோட்டையை பிரெஞ்சுக்காரர்கள் கைப்பற்றிய போது புனித டேவிட் கோட்டைக்கு தங்கள் மாகாணத் தலைநகரை மாற்றி இந்தியாவின் தென் பிராந்தியத்தை இந்தக் கோட்டையில் இருந்து ஆண்டு வந்தார்கள். ஆங்கிலேயர்கள் தங்கள் நாட்டுடனான வாணிபத் தொடர்புகளுக்கு, கடலூர் துறைமுகத்தை அதிக அளவில் பயன்படுத்தியதாக சரித்திரக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

கடலூரில், கடலூர் முதுநகர் மற்றும் கடலூர் புதுநகர் என இரண்டு முக்கிய பகுதிகள் உள்ளன. 1866 வரை நகராட்சி அலுவலகம் போன்ற அரசு அலுவலகங்கள் முதுநகர் பகுதியிலேயே இருந்தன. 1866க்கு பிறகு அவை புதுநகர் பகுதியில் உள்ள மஞ்சக்குப்பம் எனப்படும் இடத்திற்கு மாற்றப்பட்டது.

சரித்திரக் குறிப்புகள் படி இவ்வூர் சோழர், பல்லவர், முகலாயர் மற்றும் ஆங்கிலேயர் ஆகியோரால் ஆட்சி செய்யப்பட்டுள்ளது. பாரம்பரியப்படி சைவ சமயக் கோட்பாடுகள் இங்கு பின்பற்றப்படுவதன் மூலம் சோழர்கள் இப்பகுதியை ஆட்சி செய்துள்ளது புலனாகிறது.

முன்பு தமிழ்நாட்டில் மொத்தம் எட்டு மாவட்டங்களே இருந்த காலத்தில் கடலூர் மாவட்டத்தின் பெயர் தென்னாற்காடு மாவட்டம் என இருந்தது. அப்போது விழுப்புரம் மாவட்டமும் இம்மாவட்டத்திலேயே அடங்கி இருந்தது. இந்நிலையில் 1993 செப்டம்பர் 30 அன்று தென் ஆற்காடு மாவட்டமானது, தென் ஆற்காடு வள்ளளார் மற்றும் விழுப்புரம் இராமசாமி படையாட்சியார் மாவட்டம் என இரு மாவட்டங்களா உருவாக்கப்பட்டன. மற்ற மாவட்டங்கள் அப்போது பெரும்பாலும் மாவட்டத் தலைநகரங்களின் பெயராலேயே அழைக்கப்பட்டு வந்தன. அதன்பிறகு மாவட்டங்களுக்குப் பெரியோரின் பெயர்களைச்சூட்டி அழைக்கும் முறையால், சில சிக்கல்கள் ஏற்பட்டதால் மீண்டும் மாவட்டத் தலைநகரங்களின் பெயராலேயே அழைக்கப்படும் மாற்றம் வந்ததையடுத்துத் தற்போது கடலூர் மாவட்டம் என அழைக்கப்படுகிறது.

  • தமிழகத்தின் முதல் வங்கி இம்பிரியல் வங்கி இங்கு தான் செயல்ப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
  • தமிழகத்தின் இரண்டாவது பள்ளிகூடம் புனித டேவிட் பள்ளி கி.பி 1717 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

மாவட்ட வருவாய் நிர்வாகம்

கடலூர் மாவட்டம் 3 வருவாய் கோட்டங்களையும், 10 வருவாய் வட்டங்களையும், 905 வருவாய் கிராமங்களையும் கொண்டது.

வருவாய் கோட்டங்கள்

  1. கடலூர்
  2. சிதம்பரம்
  3. விருத்தாசலம்

வருவாய் வட்டங்கள்

கடலூர் பண்ருட்டி
விருத்தாச்சலம் சிதம்பரம்
காட்டுமன்னார்கோயில் திட்டக்குடி
குறிஞ்சிப்பாடி வேப்பூர்
புவனகிரி ஸ்ரீமுஷ்ணம்

உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சி நிர்வாகம்

கடலூர் மாவட்ட உள்ளாட்சி அமைப்பில் 1 கடலூர் மாநகராட்சி 7 நகராட்சிகளும், 14 பேரூராட்சிகளும் கொண்டது. இம்மாவட்ட ஊரக வளர்ச்சி அமைப்பில் 13 ஊராட்சி ஒன்றியங்களையும், 683 கிராம ஊராட்சிகளையும் கொண்டுள்ளது.

கடலூர் மாவட்ட எல்லைகள்

மேற்கே: கள்ளக்குறிச்சி மாவட்டமும்

தெற்கே: மயிலாடுதுறை மாவட்டமும்

தென்மேற்கே: தஞ்சாவூர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டமும்

கிழக்கே: வங்காள விரிகுடா கடலும்

வடமேற்கே: விழுப்புரம் மாவட்டமும்

வடக்கே: புதுச்சேரி மாநிலமும்

புவியியல்

ஆறுகள்

கெடிலம் ஆறு, பெண்ணையாறு, பரவனாறு, கொள்ளிடம் மற்றும் மணிமுத்தாறு,வெள்ளாறு (வடக்கு) ஆகிய ஆறுகள் பாய்கின்றன.

அணைக்கட்டுகள்

திருவதிகை அணை, வானமாதேவி அணை மற்றும் திருவஹீந்திரபுரம் அணை சேத்தியாதோப்பு அணை பெலாந்துறை ஆகிய அணைகள் அமைந்துள்ளன.

அரசியல்

இம்மாவட்டம் 9 சட்டமன்றத் தொகுதிகளையும், இரண்டு மக்களவைத் தொகுதிகளையும் கொண்டுள்ளது.

சட்டமன்றத் தொகுதிகள்

  1. திட்டக்குடி (தனி)
  2. விருத்தாச்சலம்
  3. நெய்வேலி
  4. பண்ருட்டி
  5. கடலூர்
  6. குறிஞ்சிப்பாடி
  7. புவனகிரி
  8. சிதம்பரம்
  9. காட்டுமன்னார்கோயில் (தனி)

நாடாளுமன்றத் தொகுதிகள்

  1. கடலூர் மக்களவைத் தொகுதி
  2. சிதம்பரம் மக்களவைத் தொகுதி

சுற்றுலா மற்றும் வழிபாட்டுத் தலங்கள்

கடலூர் மாவட்டத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மற்றும் கோவில்கள் பல உள்ளன.

வெள்ளி கடற்கரை

வெள்ளி கடற்கரை கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கடற்கரை ஆகும். கடலூரிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த கடற்கரையில் நூற்றாண்டு வயதான கலங்கரை விளக்கம் உள்ளது. அடர்ந்த அலையாத்திக் காடுகள் அமைந்துள்ளன. வெள்ளி கடற்கரை பகுதியில் ஆங்கிலேயர்கள் உருவாக்கிய முக்கிய புனித டேவிட் கோட்டை உள்ளது. பெரியார் அரசு கலைக் கல்லூரி, இந்த கடற்கரை அருகே அமைந்துள்ளது.

புனித டேவிட் கோட்டை

கெடிலம் ஆற்றங்கரையில் அழிபாடுகளாக உள்ள புனித டேவிட் கோட்டை குறிப்பிடத்தக்க வரலாற்றை உடையது.செஞ்சி மன்னர்களால் கட்டப்பட்ட சிறிய கோட்டையாயிருந்த இது 1677 இல் செஞ்சிக் கோட்டையை சிவாஜி கைப்பற்றிய பின்னர் மராட்டியரின் கைக்கு வந்தது. மராத்தியர்களிடமிருந்து பிரித்தானியரால் 1690 ஆம் ஆண்டு இந்தக் கோட்டையும் மற்றும் சுற்றிலும் அவர்கள் கட்டுப்பாட்டிலிருந்த நகரங்கள் மற்றும் கிராமங்களும் மொத்தமாக வாங்கப்பட்டன.

இக்கோட்டைக்கு சென்னை ஆளுநரான எலிகு யேல், புனித டேவிட் கோட்டை என்று பெயரிட்டார். மேலும் கோட்டையை வலுப்படுத்தானார். கோட்டை, மற்றுமுள்ள இடங்களின் எல்லைகளை வரையறை செய்வதற்காக விநோதமான வழிமுறை கையாளப்பட்டது.கோட்டையில் இருந்து வானை நோக்கி ஒரு பீரங்கிக் குண்டு சுடப்பட்டு, அந்த பீரங்கிக் குண்டு விழுந்த இடம் வரை கோட்டைக்குச் சொந்தமான பகுதியாக கைக்கொள்ளப்பட்டது. இன்றும் அந்தக் கிராமங்கள் ‘பீரங்கிக்குண்டு கிராமங்கள்’ என்றே அழைக்கப்படுகின்றன. 1693, 1698, 1702, 1725, 1740, 1745 ஆகிய ஆண்டுகளில் மேலும் மேலும் படிப்படியாக கோட்டை விரிவுபடுத்தப்பட்டதோடு வலுப்படுத்தவும் பட்டு வந்தது. 1745இல் ராபர்ட் கிளைவ் இதன் காவலில் நன்கு கவனம் செலுத்தினார்.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் இந்திய அரசுக்குச் சொந்தமான ஒரு பழுப்பு நிலக்கரிச் சுரங்க நிறுவனம். இந்தியப் பொது நிறுவனங்களில் நவரத்னா வகையினைச் சேர்ந்தது. தமிழ் நாடு, நெய்வேலியில் அமைந்துள்ள இது வருடத்துக்கு 30.6 மில்லியன் டன் பழுப்பு-எரிபொருள் உற்பத்தி செய்கிறது. மேலும் இதன் மின்சார உற்பத்தி நிறுவுதிறன் வருடத்திற்கு 5192.56 மெகாவாட்.

பிச்சாவரம்

பிச்சாவரம் தமிழ்நாட்டில் சிதம்பரத்துக்கு அருகே வங்கக் கடலை ஒட்டிய ஒரு பகுதி. இப்பகுதி கடலூர் மாவட்டத்தில் உள்ளது.பித்தர்புரம் என்ற பெயரே, பிச்சாவரம் என்று மருவியது.

இவ்வூரில் அலையாத்திக் காடுகள் (சதுப்புநிலக்காடுகள், மாங்குரோவ் காடுகள்) மிகுந்துள்ளன. இங்குள்ள அலையாத்திக் காடே உலகின் இரண்டாவது பெரிய அலையாத்திக் காடு ஆகும்.பிச்சாவரம் காட்டுப்பகுதியின் பரப்பளவு 2800 ஏக்கர்கள். இப்பகுதி சிறுசிறு தீவுகள் நிறைந்து காணப்படுகிறது. இக்காடுகளுக்கு நிறைய பறவைகள் வலசையாக வருகின்றன. மொத்தம் 41 குடும்பங்களைச் சேர்ந்த 177 வகையான பறவைகள் வருவதாகக் கண்டறியப் பட்டுள்ளது.

வீராணம் ஏரி

வீராணம் ஏரி 907-955 கி.மு. முதலாம்  சோழா்கள் காலத்தில் பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இது வட தமிழகத்தில் 16 கி.மீ. நீளமான அணை. இது ராஜாதித்ய சோழனால் உருவாக்கப்பட்டது. அவர் தனது தந்தை பராந்தக I சோழன் பெற்ற பெயரைப் சூட்டினார். இந்த ஏரி வடவார் ஆற்றின் வழியே கொள்ளிடம் ஆற்றிலிருந்து இருந்து தண்ணீர் பெறுகிறது. வருடத்தின் பெரும்பகுதி இந்த ஏரி வறண்ட நிலையில் உள்ளது.

பொன்னியின் செல்வன் கல்கி புத்தகத்தின் தொடக்க அத்தியாயம் வீர நாராயண ஏரியின் கரையில் அமைந்துள்ள  ஏரியின் அம்சங்களை விரிவாக விவரிக்கிறது மற்றும் ஏராளமான ஆறுகள் ஏரிக்குள் பாய்ந்து வருகின்றன. சோழ இளவரசி குந்தவை வசந்த காலத்தில்  வீராணம் ஏரியின் கரையோரத்தில் புத்துணர்வு பெருவதற்காக இங்கு வந்தார். 64 பீடங்களின் எண்ணிக்கையில் ராமானுஜச்சாரியா்  64 சிம்கசாந்திபதிகள் அடிப்படையில் 64 திறப்புகள் திறக்கப்பட்டுள்ளன. இது வீரராணம் ஏரி தான் முன்பு வீரநாராயணபுரம் ஏரி என தெரியவருகிறது.

திருப்பாதிரிப்புலியூர் பாடலேசுவரர் கோயில்

திருப்பாதிரிப்புலியூர் பாடலேசுவரர் கோயில் கடலூர் மாவட்டத்தில் கடலூர் நகரில் திருப்பாதிரிப்புலியூர் என்னுமிடத்தில் அமைந்துள்ள, சம்பந்தர், அப்பர் போன்றோரால் பாடல் பெற்ற தலமாகும். 274 சிவாலயங்களில் இது 229 வது தேவாரத்தலம் ஆகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும்.

  1. மகேந்திரவர்ம மன்னன் திருநாவுக்கரசரை கல்லில் கட்டிக் கடலில் போட்ட போது கல் தெப்பமாக மாறி திருப்பாதிரிப்புலியூரிலேயே கரை சேர்ந்ததாகக் கூறப்படுகின்றது. இதன் காரணத்தால் இவ்விடம்கரையேறவிட்ட குப்பம் எனவும் அழைக்கப்படுகின்றது. “ஈன்றாளுமாய் எனக்கு எந்தையுமாய்” எனும் பதிகத்தை திருநாவுக்கரசர் இன்று பாடினார்.
  2. அகத்தியர், வியாக்ரபாதர், மங்கணமுனிவர் , உபமன்னியர், ஆதிராசன் ஆகியோர் பூஜித்து பேறு பெற்ற தலம் ஆகும்.
  3. காசியில் உள்ள இறைவனை 16 முறை வணங்குவதும் இத்தலத்தில் ஒரு முறை வணங்குவது இணையானது அதாவது சமனானது எனும் ஒருவித நம்பிக்கை இங்கு காணப்படுகின்றது.
  4. திருவண்ணாமலையில் 08 முறை வணங்குவதும் சிதம்பரத்தில் 03 முறை வணங்குவதும் இங்கு ஒருமுறை வணங்குவதற்குச் சமனாகும்.
  5. பள்ளியறை சுவாமி கோயிலில் உள்ளது. இறைவி, பள்ளியறைக்கு எழுந்தருளுவது இங்குள்ள தனிச்சிறப்பாகும்.

திருவந்திபுரம் தேவநாதப் பெருமாள் கோயில்

திருவந்திபுரம் தேவநாதப் பெருமாள் கோயில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இக்கோயில், கடலூரிலிருந்து பண்ருட்டி செல்லும் வழியில் சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது. திருவஹிந்திரபுரம் என்று அழைக்கப்பட்ட இத்தலம் தற்காலத்தில் அயிந்தை என்று வழங்கப்படுகிறது. நடு நாட்டுத் திருப்பதிகள் இரண்டில் இது ஒன்றாகும். இக்கோயிலில் தேவநாத சுவாமி , அயக்கிரீவர் சன்னதிகள் அமைந்துள்ளன. இறைவன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் தேவ நாதன் என்றும் தெய்வநாயகன் என்றும் அழைக்கப்படுகிறார்.இறைவி வைகுண்ட நாயகி, ஹேமாம்புஜ வல்லித்தாயார்(பார்க்கவி).

சிதம்பரம் நடராசர் கோயில்

நடராசர் கோயில் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய சமயக் குரவர் நால்வராலும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவேரி வடகரை சிவத்தலங்கள் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் ஒன்றாகும். இத்தலம் சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில் என்றும் சிதம்பரம் தில்லை கூத்தன் கோயில் என்றும் சிதம்பரம் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலம் சைவ இலக்கியங்களில் கோயில் என்ற பெயராலேயே அழைக்கப்பெறுகிறது. அத்துடன் பூலோக கைலாசம் என்றும் கைலாயம் என்றும் அறியப்பெறுகிறது.

  1. இவ்வூரானது தில்லை என்று பழங்காலத்தில் வழங்கப்பட்டுள்ளது. இத்தலம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தோற்றம் பெற்றதாக நம்பப்படுகிறது.
  2. இத்தலத்தின் மூலவர்: திருமூலநாதர்(பொன்னம்பலநாதா்)
  3. உற்சவர்: நடராசர்(கனகசபைநாதா்)
  4. தாயார்: உமையாம்பிகை, (சிவகாமசுந்தரி) இத்தலத்தின் தலவிருட்சமாக தில்லை மரமும், தீர்த்தமாக சிவகங்கை, பரமானந்த கூபம், வியாக்கிரபாத தீர்த்தம், அனந்த தீர்த்தம், நாகச்சேரி, பிரம தீர்த்தம், சிவப்பிரியை, புலிமேடு, குய்ய தீர்த்தம், திருப்பாற்கடல் தீர்த்தங்களும் உள்ளன. இத்தலமானது பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான ஆகாயத் தலமாகும். இத்தலம் திருநீலகண்ட நாயனார் அவதாரத் தலம் எனவும் கூறப்படுகின்றது. முன்னைக் காலங்களிலே இத்தலம் சோழர், பல்லவர், விஜய நகர அரசுகளாலே புனரமைக்கப்பட்டு வந்துள்ளதோடு மட்டுமன்றி இவ்வரசுகளிடமிருந்து இத்தலத்திற்கு மானியங்களும் வழங்கப்பட்டுள்ளன.
  5. சிதம்பரம் திருமூலராலும், பதஞ்சலி மற்றும் வியாக்கியபாதர் எனும் முனிவர்களாலும் வணங்கப்பட்டுள்ளது. 275 பாடல் பெற்ற சிவத்தலங்களில் முதல் முக்கிய இடம் வகிக்கும் தலம் இதுவே ஆகும். திருவாசகத் திருத்தலங்களில் ஒன்றாகும். அவ்வாறே திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும்.

திருமுட்டம் பூவராக சுவாமி கோயில்

பூவராக சுவாமி கோயில், ஸ்ரீமுஷ்ணத்தில் அமைந்துள்ள ஒரு இந்து கோவிலாகும். திராவிடக் கட்டிடக்கலையில் கட்டப்பட்ட இந்த கோயிலானது விஷ்ணுவின் பன்றி அவதாரமான, வராகர் மற்றும் அவரது துணைவியார் அம்புஜவல்லி தாயார் (லட்சுமி) ஆகியோருக்கு அமைக்கபட்டுள்ளது.இந்த கோவிலில் 10 ஆம் நூற்றாண்டின் இடைக்கால சோழர்களின் திருப்பணிகள் இருந்தன. பின்னர் தஞ்சை நாயக்க மன்னரான அச்சுதப்ப நாயக்கரால் விரிவாக்கபட்டது.

வைணவத் தலங்களுக்குள் இத்தலம் ஒரு தனிச்சிறப்பானது. சுயம்புலிங்கம் போல, சிற்றுளி கொண்டு செய்யப்படாது தானாகவே தோன்றிய தலங்கள் எட்டு என்பர். அவை திருரங்கம், ஸ்ரீமுஷ்ணம், திருவேங்கடம், ஸாளக்கிராமம், நைமி, சாரண்யம், வானவாமலை, புஷ்கரம், நாராயணம் என்றும் கூறுவர்.

வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபை

சத்ய ஞான சபை தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் வடலூர் அருகே அமைந்துள்ள சமரச சன்மார்க்கச் சங்கம், திருவருட்பா அருளிய வள்ளலார் இந்த சமரச சன்மார்க்கச் சங்கத்தை தோற்றுவித்தார். இறைவன் ஜோதி வடிவானவன் என்ற கொள்கையுடைய வள்ளலார் தை மாத பூச நட்சத்திரத்தில் விழா எடுத்து மக்களுக்கு ஜோதி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்தார். மற்ற ஒவ்வொரு மாத பூச நட்சத்திரத்திலும் ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது. அன்று ஏராளமான மக்கள் அன்னதானம் செய்வார்கள்.

விருத்தாச்சலம் பழமலைநாதர் கோயில்

பழமலைநாதர் கோயில் கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாசலத்தில் அமைந்துள்ள சைவசமய சிவன் கோயிலாகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும்.

  1. இந்தக்கோயில் மிக முக்கிய சிறப்பு 5 என்கிற எண்ணாகும். இந்த கோயிலில் 5 கோபுரம், 5 நந்தி, 5 தேர், 5 கொடிமரம் என எல்லாமே ஐந்து ஐந்தாக அமைந்துள்ளது.
  2. இந்தக்கோயிலில் உள்ள ஆழத்து விநாயகர், விநாயகரின் ஆறுபடை வீடுகளில் ஒன்று.
  3. காசியை விட வீசம்(தமிழ் அளவை) புண்ணியம் அதிகம் என தல வரலாறு குறிப்பிடுகிறது. இதனால் விருத்தகாசி என்கிற சிறப்புப்பெயரும் இவ்வூருக்கு உண்டு.
  4. 63 நாயன்மார்கள் சிலை காண்பதற்கு அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அது வரலாற்றின் சிறப்பை உணர்த்துகிறது.

கடலூர் சிறைச்சாலை

கடலூரில் மத்திய சிறைச்சாலை ஒன்று உள்ளது. இந்த சிறைச்சாலையானது ஆங்கிலேயரால் கட்டப்பட்ட மிகவும் பழமையான சிறைச்சாலை ஆகும். இச்சிறைச்சாலையில் செப்டம்பர் 1918 முதல் 14 திசம்பர் 1918 வரை விடுதலைப் போராட்டத்தின் போது கவிஞரான சுப்பிரமணிய பாரதியார் அடைக்கப்பட்டிருந்தார்.

பொருளாதாரம்

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் இந்தியாவிற்கான மின்சாரத்தேவையை நிறைவேற்றுவதில் முதன்மையானது. மாவட்டத்திற்கு தேவையான உணவு பொருட்கள் பெரும்பாலும் விவசாயத்தின் மூலம் இங்கேயே, உற்பத்தி செய்யப்படுகிறது. கரும்பு, நெல் இங்கு முக்கிய பயிராக நடவு செய்யப்படுகிறது. இம்மாவட்டத்தின் நெல்லிக்குப்பம், திட்டக்குடி, நல்லூர் மற்றும் சேத்தியாத்தோப்பு ஆகிய இடங்களில் 3 தனியார் சர்க்கரை ஆலைகளும், ஒரு கூட்டுறவு சர்க்கரை ஆலையும் உள்ளது. பெண்ணாடத்தில் ராம்கோ சிமெண்ட் ஆலை உள்ளது. பண்ருட்டி மற்றும் நெய்வேலி பகுதியில் முந்திரி, பலா அதிகளவில் விளைகிறது மற்றும் கொய்யா, சப்போட்டா பழ வகைகளும் பயிர் செய்யப்படுகிறது.

கடலூர் துறைமுகம்

200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கடலூர் இயற்கைத் துறைமுகம், இந்தியாவுக்கு வாணிபம் செய்ய வந்த ஆங்கிலேயர்களின் தென் இந்தியாவின் முதல் தலைநகரமாக விளங்கியது. தங்கள் நாட்டுடனான வாணிபத் தொடர்புகளுக்கு, கடலூர் துறைமுகத்தை அதிக அளவில் பயன்படுத்தியதாக சரித்திரக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் ராபர்ட் கிளைவ் தங்கியிருந்தது கடலூர் தான். இன்றும் கடலூர் துறைமுகத்தில் கிளைவ் தெரு, சைமன் கார்டன், கிங் ஜான் பேட்டை, லாரன்ஸ் ரோடு, புரூகிஸ் பேட்டை, இன்றும் நிலவில் உள்ளது. பரங்கிப்பேட்டையில் இருந்த இரும்பு உருக்கு ஆலைகளில் தயாரிக்கப்பட்ட இரும்புத் தளவாடங்கள், கடலூர் துறைமுகத்தில் இருந்து கப்பல்கள் மூலம் இங்கிலாந்துக்கு கொண்டு செல்லப்பட்டன. சுதந்திரத்துக்குப் பின் கடலூர் துறைமுகத்தில் இருந்து, சேலத்தில் வெட்டி எடுக்கப்பட்ட இரும்புக் கனிமங்கள், வெள்ளைக் கற்கள் போன்றவை கப்பல்கள் மூலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

கடலூர் துறைமுகம் தவிர பல துறைமுகங்கள் கடலூர் மாவட்டத்தில் உள்ளன.

  1. திருச்சோபுரம் துறைமுகம்
  2. சிலம்பிமங்களம் துறைமுகம்
  3. பரங்கிபேட்டை துறைமுகம

மேலும் படிக்க

சிதம்பரம் நடராஜர் திருக்கோயில்
தமிழ்நாட்டின் மாவட்டங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *