கருவுறாமை பிரச்சனைக்கு ஆண், பெண் இருவருமே அல்லது இருவரில் ஒருவர் காரணமாக இருக்கலாம். திருமணமான தம்பதிக்கு குறிப்பிட்ட கால அளவைத் தாண்டியும் குழந்தைப் பேறு ஏற்படாத பட்சத்தில் உரிய மருத்துவ பரிசோதனைகள் நிகழ்த்தப்படுகிறது. அத்தகைய ஆய்வின் முடிவில் பெண்ணுக்கு குறைபாடு உள்ள சூழலில் அது பெண் கருவுறாமை என்று அழைக்கப்படுகிறது.
பொதுவாக 6 ஜோடிகளில் ஏறக்குறைய ஒருவர் கருவுறுதல் பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள் என்று புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இறுதியில், ஐ.வி.எஃப் போன்ற சிகிச்சையின் உதவியுடன் அல்லது இல்லாமல் ஏராளமான தம்பதிகள் குழந்தைகளைப் பெறுகிறார்கள்.
பெண் மலட்டுத்தன்மைக்கான காரணங்கள்
- ஹார்மோன் பிரச்சனைகள்
- ஒழுங்கற்ற மாதவிடாய்
- அண்ட விடுப்பின் போது ஏற்படும் சிக்கல்
- பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்
- மாதவிடாய் இல்லாமல் போவது
- அதிக வயது உடையவர்கள்
- உடல் பருமன் அல்லது குறைவான எடை உடையவர்கள்
- தைராய்டு நோய்
- பிட்யூட்டரி சுரப்பி கோளாறுகள்
- ஃப்லோபியின் குழாய் அடைப்பு சிறுநீரக நோய்
- எண்டோமெட்ரியோசிஸ்
ஆண் மலட்டுத்தன்மைக்கான காரணங்கள்
- விந்தணுக்கள் குறைவாக இருப்பது
- முன் கூட்டியே விந்து வெளிபாடு
- வெரிகோசெல்
- விந்தணுக்களின் வடிவம், இயக்கம் , அது உள் செல்லும் நேரம் போன்ற குறைபாடுகள்
- மரபணு கோளாறுகள்
ஆண்/பெண் கருவுறாமைக்கு பொதுவான காரணம்
வயது
பெண்களின் கருவுறாமை என்பது முட்டைகளின் குறைந்த எண்ணிக்கையும் தரமும் காரணமாக இருக்கலாம். அதிக வயதாகிய பெண்களுக்குக் கருத்தரிப்பது சற்று கடினமாகிறது.
வழக்கமாக 35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் குழந்தைப்பேறு அடைய முயலுகையில் கருத்தரித்தல் சற்று சிரமமாகவே உள்ளது.
புகைபிடித்தல்/மதுஅருந்துதல்
புகைபிடிப்பதாலும் கருவுறாமைப் பிரச்சனை ஏற்படுகிறது. புகைத்தலால் உடலில் சேரும் நிகோட்டின் மற்றும் மற்ற நச்சுக்கள் ஈஸ்ட்ரோஜன் உற்பத்தியை மட்டுப்படுத்தி விடுகின்றன.
அளவுக்கு அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ள பெண்களுக்கும் இந்த பிரச்சனை கூடுதலாகவே காணப்படுகிறது.
உடல் பருமன்
பெண்களின் உடல் எடை அதிகமாக இருந்தாலோ அல்லது குறைவாக இருந்தாலோ அவர்களுக்கு கருவுறாமை பிரச்சினை ஏற்படுகின்றது.
கருவுறாமை ஏற்படுதலுக்கான வாய்ப்பைக் கிட்டத்தட்ட 12 சதவீதம் இந்த எடைப் பிரச்சனை சாத்தியப்படுத்தி விடுகிறது. எனவே பெண்கள் இயன்ற வரை உடல் எடையை சரியான நிலையில் வைத்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.
சுரப்பிகள்
கருவுறுதல் நிகழ சுரப்பிகளின் பங்கு மிகவும் முக்கியமானது. சுரப்பிகள் சீரான வகையில் செயல்படாத போது,கருவுறுதலுக்குத் தேவையான சுரப்பிகள் இரத்தத்தில் கலந்திருக்காது.
இதுவே கருவுறாமையும் ஏற்படுத்திவிடும்.இந்த பிரச்சனை தீர மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுகிறது.
மனஅழுத்தம்
இன்றைய வாழ்க்கையில் பெண்கள் வெளி வேலை மற்றும் கூடுதலாக வீட்டையும் நிர்வகிப்பதால் தங்கள் ஆரோக்கியத்தில் எள்ளளவும் அக்கறை காட்டுவதில்லை.
அதிக நேரம் கணினியின் முன்பாக அமர்ந்திருக்கும் சூழல் இருப்பதால் அவர்கள் அதிக மனச் சோர்வும், மன அழுத்தமும் அடைகின்றனர். இதனால் அவர்களின் சுரப்பிகளின் சுரப்பு அளவு சீரற்ற நிலையை அடைகிறது. அதனால் பெண்கள் அமைதியான மனநிலையோடு இருக்க வேண்டும்.
எப்போது மருத்துவரை சந்திக்க வேண்டும்
தம்பதிகள் பொதுவாக ஒரு வருடங்கள் வரை காத்திருந்தும் கருத்தரிக்கவில்லை என்றால் மருத்துவரை பார்க்க வேண்டும்.
30 வயது அல்லது அதை கடந்தவர்கள் 6 மாதங்கள் காத்திருந்து பின் மருத்துவரை சந்திக்க வேண்டும்.
40 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒழுங்கற்ற மாதவிடாய் காலம் அல்லது மாதவிடாய் காலமே இல்லை என்னும் நிலையில் மருத்துவரை பார்க்கவேண்டும்.
- குழந்தையின்மை பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கும் பெண்கள் மன ரீதியாக வலிமையாக இருக்க வேண்டும். பொறுமையோடும் தளராத மனதோடும் இருக்கும் பெண்கள் கைகளில் நிச்சயம் விரைவில் குழந்தை தவழத் தொடங்கும்.