மதுரை மாவட்டம் (Madurai district)

Madurai district

மதுரை தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு தொன்மையான நகரம் ஆகும். தமிழ்நாட்டில் உள்ள பெருநகரங்களில், இதுவும் ஒன்றாகும். இது தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளிக்கு அடுத்த நகர்புற பரப்பளவு அடிப்படையில், நான்காவது பெரிய நகரமும் ஆகும்.

இந்நகரம், மக்கள்தொகை அடிப்படையில், தமிழகத்தின் மூன்றாவது பெரிய நகரமாகும். இந்தியாவில், பத்து இலட்சத்துக்கு மேல் மக்கட்தொகை கொண்ட இந்திய மாநகரங்களின் பட்டியலில், இது 44 ஆவது பெரிய நகரம் ஆகும்.

இந்தியத் துணைக்கண்டத்தில், தொன்மையான வரலாற்றைக் கொண்ட மதுரை நகரம், சுமார் 2500 ஆண்டுகள் பழமையான, தொடர்ந்து மக்கள் வசித்து வரும் உலகின் சில நகரங்களுள் ஒன்று. பாண்டிய மன்னர்களின் தலைமையிடமாக விளங்கிய மதுரை, தமிழ் மொழியுடன் நெருங்கிய தொடர்புடையது. சங்க காலம் எனக் குறிக்கப்படும் கி.மு.

4 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தில், தமிழ் மொழி அறிஞர்களைக் கொண்டு மூன்றாம் தமிழ்ச் சங்கம் அமைக்கப்பட்டு, தமிழை வளர்த்த பெருமையுடைய நகரம் மதுரை.

நாடு இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
தலைநகரம் மதுரை
பகுதி பாண்டிய நாடு
பரப்பளவு 147.99 கி.மீ.2
மக்கள் தொகை 3038252(2011)
மக்கள் நெருக்கம் 1 ச.கீ.மீ – க்கு 823
அஞ்சல் குறியீடு 625xxx
தொலைபேசிக் குறியீடு 0452
வாகனப் பதிவு TN-58(தெற்கு), TN-59(வடக்கு), TN-64(மத்தி)
Contents
 1. பெயர்க் காரணம்
 2. வரலாறு
 3. நகரமைப்பு
 4. மாவட்ட வருவாய் நிர்வாகம்
  1. வருவாய் கோட்டங்கள்
  2. வருவாய் வட்டங்கள்
 5. உள்ளாட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம்
  1. மாநகராட்சி
  2. நகராட்சிகள்
  3. பேரூராட்சிகள்
 6. மதுரை மாவட்ட எல்லைகள்
 7. புவியியல்
 8. அரசியல்
  1. மக்களவைத் தொகுதிகள்
  2. சட்டமன்றத் தொகுதிகள்
 9. சுற்றுலா மற்றும் வழிபாட்டுத் தலங்கள்
  1. மீனாட்சியம்மன் கோயில்
  2. ஆதிசொக்கநாதர் கோயில்
  3. தென்திருவாலவாய் கோயில்
  4. இம்மையிலும் நன்மை தருவார் கோயில்
  5. செல்லத்தம்மன், கண்ணகி கோயில்
  6. கூடல் அழகர் கோவில்
  7. திருப்பரங்குன்றம் முருகன் கோவில்
  8. பழமுதிர்சோலை
  9. திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில்
  10. திருவாதவூர் திருமறைநாதர் கோயில்
  11. நரசிங்கம் யோகநரசிங்கப் பெருமாள் கோயில்
  12. திருப்பரங்குன்றம் தர்கா
  13. கோரிப்பாளையம் தர்கா
  14. குட்லாடம்பட்டி அருவி
  15. திருமலை நாயக்கர் அரண்மனை
 10. சித்திரைத் திருவிழா

பெயர்க் காரணம்

இந்நகரம், மதுரை, கூடல், மல்லிகை மாநகர், நான்மாடக்கூடல், திரு ஆலவாய் போன்ற பல்வேறு பெயர்களால் குறிக்கப்படுகிறது. மருதத் துறை மதுரை, மருத மரங்கள் மிகுதியாகவிருந்ததால் மருதத் துறை என்பது மருவி மதுரை என ஆனது என ஒரு கருத்தும், இந்துக் கடவுள் சிவனின் தலையிலிருந்து பொழிந்த மதுரத்தால்(இனிப்பு) இப்பெயர் பெற்றது என மற்றொரு கருத்தும் நிலவுகிறது.

7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பரஞ்சோதி முனிவரால் இயற்றப்பட்ட திருவிளையாடற் புராணத்தில், மதுரையின் பல்வேறு பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. கூடல் என்ற பெயர் மதுரையில் இருந்த மூன்று தமிழ்ச் சங்கங்களையும், நான்மாடக்கூடல் என்ற பெயர் மதுரையைச் சூழ்ந்துள்ள நான்கு கோயில் கோபுரங்களையும் குறிக்கிறது.

சிவனடியார்கள், மதுரையைத் திரு ஆலவாய் எனக் குறிப்பிடுகின்றனர். தமிழகக் கல்வெட்டியலாளர் ஐராவதம் மகாதேவன் அவர்களின் குறிப்பின் படி, கி.மு. 2 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த தமிழ்ப் பிராமி கல்வெட்டு ஒன்று மதிரை எனக் குறிக்கிறது. இதற்கு மதிலால் சூழப்பட்ட நகரம் என்பது பொருள்.

வரலாறு

மதுரையின் பழமையான வரலாற்றைக் கூறும் காவியமாந்தா்கள் “மதுரை என்பது கடம்பவனம்” என்னும் காட்டுப்பகுதி என்பா். முன்னொரு நாளில் தனஞ்சயன் என்னும் வணிகன் இந்தக் காட்டுப்பகுதியை இரவில் கடந்து சென்றபோது, அங்குள்ள கடம்பமரத்தின் கீழ் இருந்த சுயம்பு லிங்கத்தை விண்ணகத்தலைவனாகிய தேவேந்திரன், தனது தேவா் கூட்டத்தாருடன் சோ்ந்து வழிபட்டு மீண்டும் வானில் சென்றதைக் கண்டு அதிசயித்தான். உடனே விரைந்து சென்று குலசேகர பாண்டிய அரசனிடம் இந்த அற்புதக் காட்சியை விவரித்தான்.

குலசேகரன் உடனடியாகத் தனது பரிவாரங்களை அனுப்பி காட்டைத் திருத்தி “சுயம்பு லிங்கத்தை” மையமாக்கி கற்கோவில் ஒன்றை எழுப்பினான். அப்போது சிவபெருமான் தோன்றி தனது சடாமுடிக் கற்றையிலிருந்து “அமுதத்துளி” சிந்தியருள, அதன் காரணத்தால், அப்பகுதி “மதுரை” என்னும் பெயா் பெற்றது. “மதுரம்” என்றால் தமிழில் “இனிமை” என்பது பொருள் ஆகும்.

மதுரைக்கு மிகச் சிறந்த வரலாற்றுப் பின்னணி உண்டு. மண் சுமந்த கடவுளாகிய சிவபெருமான் இந்நகரில் அறுபத்தி நான்கு அற்புதத் திருவிளையாடல்களை நிகழ்த்தி உள்ளார்.

கி.மு. 3ஆம் நூற்றாண்டில் மெகஸ்தனீஸ் எனும் வரலாற்று ஆய்வாளா், மதுரைக்கு வருகை தந்துள்ளார். அவரைப் போன்றே, மிக அதிகமான அறிஞா்கள் ரோம், கிரீஸ் நாடுகளிலிருந்து வந்து சென்றுள்ள வரலாற்றுப் பெருமை உடையது. இத்தகு நகரத்தைப் பாண்டிய மன்னா்கள் மிகச் சிறப்பாக விரிவுபடுத்தினா். கி.பி. 10ஆம் நூற்றாண்டின்போது, பாண்டியர்களின் பரம வைரிகளான, சோழ மன்னா்கள் மதுரையைக் கைப்பற்றினா்.

கி.பி. 920 முதல் 13ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை சோழராட்சி நடைபெற்றது. கி.பி. 1223இல் பாண்டியா்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி சோழர்களை விரட்டினா். பாண்டிய மன்னா்கள் “தமிழ்” மொழியின் வளா்ச்சிக்கும் பெரிதும் வழிவகுத்தனா். அவா்தம் ஆட்சிக்காலத்தில், மிகச் சிறந்த காவியங்கள் தமிழில் உருவாயின.

கணவனாகிய கோவலன் “கள்வன்” என்று குற்றம் சாட்டப்பட்டு, பாண்டிய மன்னனால் கொலையுண்ட செய்தி அறிந்த கண்ணகி, அரசனின் அநீதிக்கு எதிராக தன் கற்புத்திறத்தால், மதுரையை எரியச் செய்த வரலாறு கூறும் “சிலப்பதிகாரம்” எனும் காவியம் தோன்றியது.

கி.பி. 1311ஆம் ஆண்டின்போது, டெல்லியை ஆண்டுகொண்டிருந்த அலாவுதீன் கில்ஜியின் தளபதியான மாலிக்கபூா், மதுரைக்கு வந்து களஞ்சியத்திலிருந்த விலைமதிப்பற்ற நவரத்தினங்களையும், பொன் ஆபரணங்களையும், அரிதாக உள்ள பொக்கிஷங்களையும் கொள்ளையடித்துச் சென்றார். அதேபோல் மேலும் சில முஸ்லீம் சுல்தான்கள் வந்து அபகரித்து சென்றனா். கி.பி. 1323 ஆம் ஆண்டில், மதுரை உட்பட பாண்டிய சாம்ராஜ்யம் தில்லி பேரரசின் ஒரு மாகாணமாக, துக்ளக் ஆட்சியின் கீழ் மாறியது.

அதன்பின், 1371இல் விஜயநகர சாம்ராஜ்ய பரம்பரையைச் சார்ந்த “ஹம்பி” என்பவா், மதுரையை கைப்பற்றி விஜயநகர ஆட்சிக்குட்படுத்தினார். இந்த பரம்பரையை சார்ந்த ஆட்சியாளா்கள் தாம் கைபற்றிய இடங்களுக்கு “நாயக்கா்களை” கவா்னா்களாக நியமித்து ஆண்டனா். அவா்கள் திறமையான நிர்வாகம் மேற்கொண்டனா்.

நாயக்கா் மன்னா்கள் ஆண்டுதோறும் குறிப்பிட்ட தொகையை கப்பமாகச் செலுத்தினா். கி.பி. 1530இல் விஜயநகரப் பேரரசின் “கிருஷ்ணதேவராயா்” இறந்துவிட, நாயக்க மன்னா்கள் சுதந்திரமாக தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதிகளை ஆட்சி செய்யத் துவங்கினர். நாயக்கா் வம்சத்தில் தோன்றிய திருமலைநாயக்கா் என்பவா் கி.பி. 1623-1659 வரை மதுரையை ஆட்சி செய்தார்.

நகரமைப்பு

பண்டைய மதுரை நகரத்தின் புவியியல் மற்றும் வழிபாட்டு மையமாக விளங்கிய மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றி மதுரை நகரமானது கட்டப்பட்டுள்ளது. நகரமானது பொது மையத்தைக் கொண்ட நான்கு நாற்கர வடிவமுடைய தெருக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பானது மதுரையை ஆண்ட நாயக்கர்களின் முதல் நாயக்கரான விசுவநாத நாயக்கரால் (கி. பி. 1159–64) சதுர மண்டல முறையில் கட்டப்பட்டதாகும்.

இந்த தெருக்கள் அவற்றில் திருவிழாக்கள் கொண்டாடப்படும் தமிழ் மாதங்களின் பெயர்களால் ஆடி, சித்திரை, ஆவணி – மூல, மாசி வீதிகள் என தற்போதும் அழைக்கப்படுகின்றன. கோயில் பிரகாரத்திலும் அதனைச் சுற்றி அமைந்துள்ள தெருக்களிலும் திருவிழாக்களானது கொண்டாடப்படுவதுடன், தேரோட்டமும் நடைபெறுகிறது. நகர மையமும், அதனைச் சூழ்ந்துள்ள தெருக்களும் தாமரை மலர் மற்றும் அதன் இதழ் போன்ற தோற்றம் கொண்டதாக பழைய இலக்கியங்கள் கூறுகின்றன.

நகரத்தின் அச்சானது காந்த ஊசிகளின் அச்சுடன் பொருந்தும் வண்ணம் அமைந்து, கோவிலின் நான்கு வாசல்களும் அதன் முனைகள் போல் உள்ளன. இந்த அமைப்பில் உயர்சாதியினர் கோவிலுக்கு அருகிலுள்ள தெருக்களிலும், ஏழை மற்றும் பிற்பட்ட படிநிலை மக்கள் தொலைவிலுள்ள தெருக்களிலும் குடியிருந்தனர்.

பின் 19 ஆன் நூற்றாண்டில் ஆங்கிலேயரின் வருகை, தொழில் துறை வளர்ச்சி மற்றும் நகரமயாமாதல் காரணமாக மதுரை நகரின் அமைப்பில் மாறுதல்கள் ஏற்பட்டு தற்போது அனைத்து படிநிலை மக்களும் ஒன்றிணைந்து வாழுகின்றனர். மதுரையின் கிழக்கு குடவரை கோவில் குன்னத்துார்(திருக்குன்றத்துார்) அமைந்துள்ளது. மாறவர்ம சுந்தரபாண்டியன் மற்றும் பலர் சிவலிங்க திருமேனியை மலையை குடைந்து உருவாக்கி உள்ளனர். இது கி.பி 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். இது மதுரையிலிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ளது.

மாவட்ட வருவாய் நிர்வாகம்

மதுரை மாவட்டம் 4 வருவாய் கோட்டங்களையும், 11 வருவாய் வட்டங்களையும், 51 வருவாய் குறுவட்டம், 665 வருவாய் கிராமங்களையும் கொண்டுள்ளது

வருவாய் கோட்டங்கள்

 • மதுரை
 • மேலூர்
 • உசிலம்பட்டி
 • திருமங்கலம்

வருவாய் வட்டங்கள்

 • மதுரை வடக்கு
 • மதுரை மேற்கு
 • வாடிப்பட்டி
 • மேலூர்
 • மதுரை கிழக்கு
 • மதுரை தெற்கு
 • உசிலம்பட்டி
 • பேரையூர்
 • திருமங்கலம்
 • திருப்பரங்குன்றம்
 • கள்ளிக்குடி

உள்ளாட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம்

மதுரை மாவட்டம் 1 மாநகராட்சியையும், 3 நகராட்சியையும், 9 பேரூராட்சிகளையும் கொண்டுள்ளது.

மாநகராட்சி

 • மதுரை

நகராட்சிகள்

 • மேலூர்
 • திருமங்கலம்
 • உசிலம்பட்டி

பேரூராட்சிகள்

 • அ.வல்லாளபட்டி
 • அலங்காநல்லூர்
 • எழுமலை
 • பாலமேடு
 • பரவை
 • பேரையூர்
 • சோழவந்தான்
 • தே.கல்லுப்பட்டி
 • வாடிப்பட்டி

மதுரை மாவட்ட எல்லைகள்

மதுரை மாவட்டத்திற்கு வடக்கில் திண்டுக்கல் மாவட்டமும், கிழக்கில் சிவகங்கை மாவட்டமும், தெற்கில் விருதுநகர் மாவட்டமும், மேற்கில் தேனி மாவட்டமும் எல்லைகளாக உள்ளன.

புவியியல்

கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 101 மீட்டர் உயரத்தில் வளமான வைகை ஆற்றின் சமவெளியில் அமைந்துள்ளது. வைகை ஆறு நகரின் வடமேற்கு-தென்கிழக்காக ஒடி நகரை ஏறக்குறைய இரு சமபகுதிகளாகப் பிரிக்கிறது. நகரின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதியில் சிறுமலை மற்றும் நாகமலைக் குன்றுகளும், வடகிழக்கே யானைமலைக் குன்றும் அமைந்துள்ளன.

அரசியல்

இம்மாவட்டம் 10 சட்டமன்றத் தொகுதிகளையும், 3 மக்களவைத் தொகுதிகளையும் கொண்டுள்ளது.

மக்களவைத் தொகுதிகள்

 • மதுரை
 • தேனி
 • விருதுநகா்

சட்டமன்றத் தொகுதிகள்

 • மேலூா்
 • மதுரை கிழக்கு
 • சோழவந்தான் (தனி)
 • மதுரை வடக்கு
 • மதுரை தெற்கு
 • மதுரை மத்தியம்
 • மதுரை மேற்கு
 • திருப்பரங்குன்றம்
 • திருமங்கலம்
 • உசிலம்பட்டி

சுற்றுலா மற்றும் வழிபாட்டுத் தலங்கள்

மதுரை நகரமானது இரவிலும் செயல்பாட்டில் இருப்பதால் “தூங்கா நகரம்” என பரவலாக அறியப்படுகிறது. மதுரை அதிக அளவு சுற்றுலா பயணிகளைக் கவரும் நகரங்களுள் ஒன்று. 2010 ஆம் ஆண்டில் மட்டும் 91,00,000 சுற்றுலா பயணிகள் மதுரை நகருக்கு வருகை தந்துள்ளனர். இவர்களில் 5,24,000 வெளிநாட்டினரும் அடக்கம். மருத்துவச் சுற்றுலாப் பயணிகளும் தற்போது மதுரைக்கு பெருமளவு வருகின்றனர்.

மீனாட்சியம்மன் கோயில்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் என்பது வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள, கோயில் நகரமான மதுரையின் மத்தியில், அமைந்துள்ள சிவன் ஆலயமாகும். இச்சிவ ஆலயத்தின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை மீனாட்சியம்மன். இக்கோயிலை மதுரை மீனாட்சியம்மன் கோயில் என்றும் அழைக்கின்றனர். இக்கோயிலே, தமிழகத்தில் உள்ள 366 மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்களின் மூலக்கோயிலாக உள்ளது. இத்தலத்தில், முதல் பூசை, அம்பிகை மீனாட்சிக்கே செய்யப்படுகிறது.

சிதம்பரம், காசி, திருக்காளத்தி வரிசையில், முக்கியமான 4-ஆவது தலமாகத் திருவாலவாய் உள்ளது. இந்த நகரம் புராண காலத்தில் திருவாலவாய் என்று அழைக்கப்பட்டுள்ளது. இந்தத் தலத்தின் பெயரைக் கேட்டதுமே பேரின்ப நிலை கிடைக்கும். அதனால், சிவபெருமானுடைய முக்தி தலங்களுள் ஒன்றாகவும் இத்தலம் கருதப்படுகிறது. இத்தலத்தினைச் “சிவன் முக்திபுரம்” என்றும் அழைக்கின்றனர்.

இத்தலம், முக்கியமான சிவத்தலமாக மட்டும் இல்லாமல், அம்பிகையின் 51 சக்தி பீடங்களுள் ஒன்றுமாகும். இதனை, ராஜமாதங்கி சியாமள பீடம் என்று அழைக்கின்றனர். இத்தலம் 18 சித்தர்களில் ஒருவரான சுந்தரானந்தரின் சித்தர் பீடமாகவும் உள்ளது. விநாயகரின் அறுபடை வீடுகளில் நான்காவது படைவீடாகவும், சிவபெருமான்

 மீது பாடப்பெற்ற தேவாரப்பாடல் பெற்ற 274-ஆவது சிவாலயமாகவும், 192-ஆவது தேவாரத்தலமாகவும் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில், பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.

தேவலோகத்தின் அரசனான இந்திரனால், இக்கோயில் கட்டப்பட்டது என்பது நம்பிக்கை. இராமர், இலட்சுமணன், வருணன், இந்திரன், தேவர்கள் மற்றும் முனிவர்கள் போன்றவர்களால் இச்சிவாலயம் வழிபடப்பட்டுள்ளது. இத்தலத்தில் தரப்படுகின்ற பிரசாதமான தாழம்பூ குங்குமம், பிரசித்தி பெற்றதாகும்.

ஆதிசொக்கநாதர் கோயில்

ஆதிசொக்கநாதர் கோயில், மதுரை சிம்மக்கல் பகுதியில் மீனாட்சியம்மன் உடனுறை சிவபெருமான் கோயில் ஆகும். குபேரன் தன்னிடம் உள்ள செல்வம் மேன்மேலும் பெருக சொக்கநாதரை வழிபட்டு, பிரதிட்டை செய்த இலிங்கமே ஆதிசொக்கநாதர் ஆவார் என்பது தொன்நம்பிக்கையாகும். நவக்கிரகங்களில் புதன் சொக்கநாதரை வழிபட்டதால் இத்தலம் புதன் சேத்திரமாக விளங்குகிறது. இக்கோயிலுக்குப் பழைய சொக்கநாதர் கோயில் என்றும் வடதிருவாலவாய் கோயில் என்றும் பெயருண்டு.

தென்திருவாலவாய் கோயில்

தென்திருவாலவாய் கோயில் அல்லது தென் திரு ஆலவாய் கோயில் என்பது, மதுரை மாநகரில், தெற்கு மாசி வீதியில் அமைந்துள்ள மீனாட்சியம்மன் உடனுறை சிவபெருமான் கோயில் ஆகும். மூலவர் பெயர் சொக்கநாதர். அம்பாள் பெயர் மீனாட்சி. இங்குள்ள சிவமூர்த்தி அளவில் பெரியவர். இது தெற்கு திசைக்குத் தலைவனாகிய எமன் வழிபட்ட கோயில். இக்கோயில் மதுரையில் உள்ள பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகும். திருவிளையாடற் புராணக் கதைகளில் ஒன்றான மதுரைக்கு எல்லை கட்டிய படலம் நிகழப்பெற்ற கோயில்.

 • திருவிளையாடற் புராணக் கதைகளில் ஒன்றான மதுரைக்கு எல்லை கட்டிய படலம் நிகழப்பெற்ற கோயில் இது.
 • திருநீற்றுப்பதிகம் பாடப்பெற்ற தலம்.
 • தென் திருவாலவாய் சுவாமியை வணங்கினால் நோய் நொடிகள் நீங்கப்பெறுவதாக தொன் நம்பிக்கை.
 • இக்கோயிலில் உள்ள அரசமரத்தை 108 முறை வலம் வந்து திருவாலவாய சுவாமியை நினைத்து உள்ளம் உருகி வேண்டி நின்றால் மரணத்துன்பம் நீங்குகிறது.

இங்குள்ள மூர்த்தி மதுரையில் உள்ள தலங்களில் அளவில் பெரியவர். மதுரையில் உள்ள பழைய சொக்கநாதரை வழிபட்டால் செல்வம் செழிக்கும். இம்மையிலும் நன்மை தருவாருரை வணங்கினால் பதவி கிடைக்கும், தென்திருவாலவாய சுவாமியை வணங்கினால் மரண துன்பம் நீங்கும் என்று புராணங்கள் கூறுகின்றன. தவிர இந்த நான்கு ‌‌கோயில்களுக்கும் நடுவில் அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேசுவரரை வழிபட்டால் இந்நான்கும் பலன்களும் ஒருசேர கிடைக்கும்.

இம்மையிலும் நன்மை தருவார் கோயில்

இம்மையிலும் நன்மை தருவார் கோயில், மதுரை நகரின் மையப் பகுதியில், தெற்கு மாசி வீதி – மேலமாசி வீதி சந்திப்பில் அமைந்துள்ளது. கிழக்கு பார்த்த நிலையில் அமைந்த லிங்கத்திற்கு பின்புறத்தில் சிவனும் பார்வதியும் அமர்ந்த கோலத்தில் மேற்கு நோக்கி காட்சியளிக்கின்றனர்.

இத்தலம் பூலோக கைலாயம் என வழங்கப்படுகிறது. இக்கோவிலின் மூலவர் பெயர் சொக்கநாதர். அம்பாள் பெயர் மத்தியபுரி நாயகி. உற்சவ மூர்த்தி சோமாஸ்கந்தர் ஆவார். தல விருட்சம் வில்வம் மரம் ஆகும். இக்கோயில் மேற்கு திக்கு நோக்கி அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பிறப்பில் செய்த பாவங்களை இப்பிறப்பிலேயே மன்னித்து நன்மை தருவதால், இக்கோயில் மூலவர் சொக்கநாதரை இம்மையிலும் நன்மை தருவார் என்று அழைக்கப்படுகிறார்.

செல்லத்தம்மன், கண்ணகி கோயில்

செல்லத்தம்மன் – கண்ணகி கோயில், மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து 2 கி. மீ., தொலைவில் சிம்மக்கல் பகுதியில், வடக்கு மாசி வீதியில் அமைந்துள்ளது. செல்லத்தம்மன் மணி, அரிவாள், கத்தி, சூலாயுதம், கபாலம், தவலாம், உடுக்கை ஆகிய ஆயுதங்களுடன் அபய வரத எட்டுக் கரங்களுடன் அமர்ந்த நிலையில் தனது வலது காலை மடக்கி, இடது காலில் அரக்கனை தலையில் மிதித்த நிலையில் உள்ளாள். கையில் கொன்றை மலர் வைத்திருக்கிறாள் தேவி செல்லத்தம்மன். செல்லத்தம்மனுக்கு பூஜைகள் நடத்தி முடித்த பின், கண்ணகிக்கும் பூஜைகள் செய்யப்படுகின்றன.

இக்கோயிலில் கண்ணகிக்கும் தனிச்சந்நதி உள்ளது. இடது கையில் சிலம்பும் வலது கையில் செண்டும் ஏந்திய நிலையில் அருள் புரிகிறார். கண்ணகிக்கு அடைக்கலம் கொடுத்த ஆயர் குலப்பெண் மாதரி இடைச்சி அம்மனாக வடக்கு நோக்கி காட்சி தருகிறாள். இக்கோயில் 1500 வருடங்கள் பழமையானது. தல மரம் வில்வமரம் மற்றும் அரசமரம், தீர்த்தம் வைகை.

 • கோப குணம் மறைய, கணவன் – மனைவியரிடையே ஒற்றுமை அதிகரிக்க, திருமண பாக்கியம் கிடைக்க இங்கு வேண்டிக் கொள்கிறார்கள். பகைவர்களால் ஏற்படும் தொல்லைகள் நீங்கி குடும்பப் பிரச்னைகள் அகலவும் வேண்டுதல் நடக்கிறது.
 • நாக தோசம் மற்றும் ராகு, கேது தோஷம் புத்திர தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள நாகராஜருக்கு பால், மஞ்சள் அபிஷேகம் செய்து குங்குமம் தடவிய பஞ்சுத்திரி மாலை அணிவிக்கின்றனர்.
 • இங்குள்ள வன பேச்சி அம்மனிடம் வேண்டிக் கொண்டு குடும்ப சண்டை- பங்காளி சண்டை நீங்கி ஒற்றுமையாக இருக்க விபூதி வாங்கிச் செல்கிறார்கள்.
 • அம்மனுக்கு அபிசேகம் செய்து, துணி அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். கண்ணகிக்கு எலுமிச்சை மாலை, தாலிப்பொட்டு அணிவித்து பெண்கள் வழிபடுகின்றனர்.

கூடல் அழகர் கோவில்

கூடல் அழகர் கோவில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. இதற்கு ஆழ்வார் பாடல்கள் உள்ளன. இக் கோயிலின் கருவறையில் உள்ள பெருமாள் பெயர் ‘கூடலழகர்’. மாடத்தில் பள்ளிகொண்டிருக்கும் கோலம் அந்தர வானத்து எம்பெருமான் என்னும் பெயருடையது.

 • மூன்று தளங்களும் 5 சிகரங்களும் கொண்ட அஷ்டாங்க விமானம்.இதன் நிழல் தரையில் விழுவதில்லை.
 • பாண்டியனின் ஐயம் தீர்த்து மதுரையில் பொற்கிழி அறுத்த[8] பெரியாழ்வார் இக்கோயிலில் இருந்த அந்தர வானத்து எம்பெருமானின் கோலம் கண்டே திருப்பல்லாண்டு பாடினார்.

திருப்பரங்குன்றம் முருகன் கோவில்

முருகனின் ஆறுபடை வீடுகளில், முதல் படை வீடாகத் திகழ்கின்றது. இந்தக் கோயில், மதுரைக்கு தென்மேற்கில் சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ள திருப்பரங்குன்றம் என்னும் ஊரில் உள்ளது. இங்குதான் முருகன், தெய்வானையைத் திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நடந்ததாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. இக்கோவிலில் முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார்.

 • முருகப் பெருமானின் அறுபடை வீட்டு கோயில்களில், இக்கோயில் அளவில் பெரியதாகும்.
 • லிங்க வடிவில் இருக்கும் இம்மலையைப் பற்றி சைவ சமயக் குரவர்களில் சுந்தரமூர்த்தி நாயனார், திருஞானசம்பந்தப் பெருமான் ஆகியோர் இவ்வூருக்கு வந்து ஆலய வழிபாடு செய்து பதிகங்கள் பல பாடியுள்ளனர்.
 • சங்ககாலப் புலவரான நக்கீரர் இத்தலத்து முருகப் பெருமானை வழிபட்டு தனது குறை நீக்கிக் கொண்ட திருத்தலம்.

பழமுதிர்சோலை

முருகனின் ஆறுபடை வீடுகளில், ஆறாவது படை வீடாகத் திகழ்கின்றது. இது இந்தியாவில், தமிழ்நாடு மாநிலத்தில், மதுரையிலிருந்து பதினைந்து மைல் தொலைவில் அமைந்துள்ளது. முருகன் சிறுவனாய் வந்து ஔவையாரை சோதித்தது இங்குதான் என்று நம்பப்படுகிறது. விஷ்ணு கோயிலான அழகர் கோவில் இதற்கு அண்மையில் அமைந்துள்ளது. அருணகிரிநாதர் இத்தலம் மீது திருப்புகழ் பாடியுள்ளார்.

சோலைமலை என்ற பெயரும் இதற்கு உண்டு. இங்குள்ள முருகன் வெற்றிவேல் முருகன் என்று அழைக்கப்படுகிறார். பழமுதிர்சோலை என்பதற்கு “பழங்கள் உதிர்க்கப் பெற்ற சோலை” என்று பொருள் எடுத்துக் கொள்ளலாம்.

திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில்

திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். இக்கோயிலிலுள்ள பல மண்டபங்கள் சிவகங்கையை ஆட்சிபுரிந்த மருது பாண்டியர் திருப்பணியாகும். மூலவர் காளமேகப் பெருமாளின் சந்நிதி உயரமான அதிட்டானத்தின்மீது அமைக்கப்பட்டுள்ள கட்டுமான கற்கோவிலாகும். தாயார் மோகனவல்லி எனப்படுகிறார்.

திருவாதவூர் திருமறைநாதர் கோயில்

சிவபெருமான் சனி பகவானின் வாத நோயைத் தீர்த்த தலம் என்பதால், இந்தத்தலம் ‘வாதவூர்’ என்று பெயர் பெற்றது. இத்தல ஈசனை வழிபட்டால் கை, கால் முடம், பக்கவாதம் உள்ளிட்ட அனைத்து வகையான வாத நோய்களும் தீரும் என்று கூறப்படுகிறது.

ஒரு சமயம் திருக்கயிலையில் பைரவரின் வாகனமான சுவானத்தை (நாய்) மறைக்கச் செய்தார் சிவபெருமான். இதனால் பைரவர், ஈசனிடம் தனது நாய் வாகனம் வேண்டினார். ‘திருவாதவூர் சென்று வழிபட தொலைந்த வாகனம் கிடைக்கும்’ என்று அருளினார். கயிலாய மலையில் இருந்து திருவாதவூர் வந்த பைரவர் இங்கு ஒரு தீர்த்தம் அமைத்தார். அது பைரவர் தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.

இங்குள்ள பைரவர் தீர்த்தத்தில் நீராடி திருமறை நாதரை வழிபட்டு தனது நாய் வாகனத்தை மீட்டார். இத்தல பைரவரைத் தொடர்ந்து 8 அஷ்டமி தினங்களில் வழிபட்டு வந்தால் தொலைந்து வாகனங்கள் மீண்டும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இத்தல சனி, பைரவர் மற்றும் திருமறைநாதரை 5 நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் சகல விதமான தோஷங்களும் அகன்றுவிடும்.

நரசிங்கம் யோகநரசிங்கப் பெருமாள் கோயில்

ரோமச முனிவர் என்பவர் தனக்கு குழந்தை வரம் வேண்டி யானைமலையிலுள்ள சக்கர தீர்த்ததில் நீராடி யாகம் செய்தார். அப்போது நரசிம்ம பெருமாள் அவதாரத்தில் இருந்ததைப் போல கண்ணுற ஆசை கொண்டார். அதனால் பெருமாள் மீண்டும் உக்கிர நரசிம்மராக தோன்றினார். அவருடைய கோபத்தால் உலகம் வெப்பமயமானது. பின் தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி பிரகலாதனும், மகாலட்சுமியும் நரசிம்மரின் உக்கிரத்தினை தணித்தனர்.

திருப்பரங்குன்றம் தர்கா

திருப்பரங்குன்றம் தர்கா, திருப்பரங்குன்றம் மலையின் மீது அமைந்துள்ள இசுலாமியத் துறவியான அசரத்து சுல்தான் சிக்கந்தர் பாதுசா அவர்களின் கல்லறையாகும். 12 ஆம் நூற்றாண்டில் ஜித்தா நகரின் ஆளுநரான சிக்கந்தர் பாதுசா, அசரத்து சையது இபுறாகீம் பாதுசாவுடன் தமிழ்நாட்டின் ஏர்வாடி நகருக்கு வந்தனர்.

அவர்கள் இருவரும் திருப்பாண்டியனுடன் போரிட்டு மதுரை மற்றும் அதன் ஆட்சிப்பகுதிகளைக் கைப்பற்றினாலும், பின் திருப்பாண்டியனின் மறு தாக்குதலில் திருப்பரங்குன்றம் மலை மீது மரணமடைந்தார்.

அவர் மரணத்திற்கு பின், பாண்டிய மன்னருக்கு கண்பார்வை பறிபோனதாகவும், அசரத்து அவர்களின் அடக்கத்தலத்தில் மன்னிப்பு பெற்று மீண்டும் கண்பார்வை பெற்றதாகவும் நம்பப்படுகிறது. மதுரை மக்பராவில் அடக்கம் செய்யப்பட்டுள்ள மூன்றாவது மதுரை அசரத்தான சையது அப்துல் சலாம் அவர்கள், அசரத்து சுல்தான் சிக்கந்தர் பாதுசாவினைக் குறித்து புகழ் பாக்கள் இயற்றியுள்ளார்.

கோரிப்பாளையம் தர்கா

கோரிப்பாளையம் என்ற பெயர் பாரசீக வார்த்தையான கோர் என்பதிலிருந்து வந்தது. இதற்கு கல்லறை என்பது பொருள். எனவே தான் இப்பகுதி கோரிப்பாளையம் என அழைக்கப்படுகிறது. வைகையின் வடகரையில் அமைந்துள்ள இக்கல்லறைகள் வைகை ஆற்றின் பாலத்தின் மீது செல்லும் போதே தென்படும் வண்ணம் உயரமானவை.

காசிமார் பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் அமைந்துள்ள மதுரை மக்பராவின் வெளிப்புறச் சுவரில் காணப்படும் பண்டைய தமிழ் கல்வெட்டு இத்தர்காவின் பழமைக்குச் சான்றாக உள்ளது.

குட்லாடம்பட்டி அருவி

குட்லாடம்பட்டி அருவி, மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை அடுத்த குட்லாடம்பட்டி கிராமத்திற்கு வடக்கே சிறுமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. சிறுமலையில் மழை பெய்யும் காலங்களில், இந்த அருவியில் தண்ணீர் கொட்டும். இதுபோன்ற நேரங்களில் சுற்றுலா பயணிகள் ஏராளமான அளவில் இங்கு குவிகின்றனர். இந்த அருவியில் வருடத்தில் ஐந்து முதல் எட்டு மாதங்கள் வரை தண்ணீர் வரத்து இருக்கும்.

திருமலை நாயக்கர் அரண்மனை

திருமலை நாயக்கர் மகால் என அழைக்கப்படும் அரண்மனை, மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களில் ஒருவரான திருமலை நாயக்கரால் கி.பி. 1636 ஆம் ஆண்டில் கட்டுவிக்கப்பட்டது. மதுரையில் அமைந்துள்ள. இத்தாலியக் கட்டிடக் கலைஞர் ஒருவரால் இந்தோ சரசனிக் பாணி கட்டிட கலைநயத்தில் வடிவமைக்கப்பட்டதாகக் கருதப்படும்

இக்கட்டிடத்தின் நான்கில் ஒரு பகுதியே, தற்போது எஞ்சியுள்ளதாகக் கருதப்படுகின்றது. பிரித்தானிய இந்தியாவின் சென்னை ஆளுநர், பிரான்சிஸ் நேப்பியர் கி.பி.1872-இல் இவ்வரண்மனையைப் புதுப்பித்தார்.

சித்திரைத் திருவிழா

மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் சித்திரைத் திருவிழா, மீனாட்சி திருக்கல்யாணம், மீனாட்சி அம்மன் பட்டாபிசேகம், மீனாட்சியம்மன் தேரோட்டம், புட்டுத் திருவிழா ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மேலும் இந்தக் கோயிலில் தமிழ் மாதம் ஒவ்வொன்றிலும் சிறப்பு விழாக்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

 • மதுரை மாநகரையே குலுங்க வைக்கும் விழா, சித்திரை திருவிழா. குலுங்க வைக்கும் எனும் சொல்லும் போதே தெரியும் அது நம் கள்ளழகர் வைகையில் இறங்குவது தான். அந்தளவிற்கு தமிழகம் மட்டுமின்றி உலகின் பிற பகுதிகளிலும் இவ்விழா பிரபலமடைந்துள்ளது.
 • முழுதாக ஒரு மாதம் எடுத்துக் கொண்டு உலகிலேயே அதிக நாட்கள் கொண்டாடப்படும் பிரமாண்ட பண்டிகை இதுவாகத்தான் இருக்கும்.
 • மதுரை மற்றும் அதை சுற்றி உள்ள அனைத்து கிராமங்களும் இந்த திருவிழாவை மிக விமர்சையாக கொண்டாடுகின்றனர்.
 • இப்பெருவிழாவின் முதல் 15 நாட்கள் மீனாட்சி அம்மனுக்கும் அடுத்த 15 நாட்கள் அழகருக்கும் விழா நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *