மதுரை மீனாட்சி அம்மன் கோவில்      

அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் தமிழகத்தில் மதுரை மாநகரில் அமைந்துள்ளது. சிவபெருமானுக்கு உகந்தது சிதம்பரம் கோவில் என்றால், மீனாட்சி அம்மனுக்கு பெருமை சேர்ப்பது மதுரை.

மூலவர் மீனாட்சி சுந்தரேஸ்வரர், சொக்கநாதர், சோமசுந்தரர்
அம்மன்/தாயார் மீனாட்சி, அங்கயற்கண்ணி
தல விருட்சம் கடம்ப மரம்
தீர்த்தம் பொற்றாமரைக் குளம்,தெப்பக்குளம், வைகை, கிருதமால் ஆறு, புறத்தொட்டி
ஆகமம்/பூஜை காரண ஆகமம்
புராண பெயர் ஆலவாய், கூடல், நான்மாடக்கூடல், கடம்பவனம்
பாடியவர்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்
ஊர் மதுரை
மாவட்டம் மதுரை

வரலாறு

மலயத்துவச பாண்டியன் மனைவி காஞ்சனமாலை இருவருக்கும் குழந்தை இல்லாததால் புத்திரகாமேட்டியாகம் செய்தனர். அப்போது உமாதேவி மூன்று தனங்களையுடைய ஒரு பெண் குழுந்தையாக வேள்விக்குண்டத்தினின்று தோன்றினாள்.

குழந்தையின் தோற்றத்தைக் கண்டு அரசன் வருந்தும் போது இறைவன் அசரீரியாக இக்குழந்தைக்கு கணவன் வரும்போது ஒரு தனம் மறையும் என்று கூறினார். இறைவன் கட்டனைப்படி குழுந்தைக்குத் “தடாதகை’ எனப்பெயரிடப்பட்டது.

குழந்தை சிறப்பாக வளர்ந்து பல கலைகளில் சிறந்து விளங்கியது. மலயத்துவசன் மறைவுக்குப்பின் தடாதகை சிறப்பாக ஆட்சி செய்தாள். கன்னி ஆண்டதால் “கன்னிநாடு’ எனப் பெயர் பெற்றது.

தடாதகை மணப்பருவத்தை அடைந்தாள். நால்வகைப் படைகளுடன் புறப்பட்டுச் சென்று திக்விஐயம் செய்து வென்றாள். இறுதியாகத் திருக்கைலாயத்தை அடைந்து சிவகணங்களுடன் சிவபெருமானையும் கண்டாள். கண்டவுடன் மூன்று தனங்களில் ஒன்று மறைந்தது. முன் அறிவித்தபடி இறைவனே கணவன் என்பது புலப்பட்டது.

திருமணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. திருமால் முதலிய தேவர்களும் முனிவர்களும் வந்திருந்தார்கள். சிவனுக்கு பக்கத்தில் தடாதகை இருந்ததை காண கண் கொள்ளாக்காட்சியாக இருந்தது. பிரமதேவன் உடனிருந்து நடத்தினார். பங்குனி உத்திர நன்னாளில் சிவபெருமான், திருமங்கல நாணைப் பிராட்டியாருக்குச் சூட்டினார். எல்லோரும் கண் பெற்ற  பயனைப் பெற்றனர். தடாதகைப்  பிராட்டியே மீனாட்சி அம்மனாக விளங்குகிறார்.

பெருமான் திருமணஞ் செய்தருளியது, பெருமான் போகியாய் இருந்து, உயிர்களுக்குப் போகத்தை அருளுவதை நினைப்பூட்டும். பின்பு சிவபெருமான் தாம் உலகில் அரசு நடத்திக்காட்ட திருவுளங்கொள்ள, இடபக்கொடி மீன்கொடி ஆகியது.

சோமசுந்தரர் சுந்தரபாண்டியனாய்க் கோலங்கொண்டு விளங்கினார். சிவகணங்கள் மானுடவடிவு கொண்டனர். பாண்டியன் கோலம்பூண்ட சுந்தரப் பெருமாள் மக்களுக்கு அரசனாகவும், பகைவர்களுக்கு சிங்கமாகவும், உலக இன்பங்களை வெறுத்த ஞானிகளுக்கு முழுமுதலாகவும் விளங்கினார்.

கோவில் அமைப்பு

இந்த கோவில் 1,600 ஆண்டு கால பழமை வாய்ந்தது. பொதுவாக எல்லா கோயில்களிலும் ஒன்று அல்லது நான்கு வாசல்கள் இருக்கும். ஆனால், இத்தலத்தில் ஐந்து வாசல்கள் உள்ளன.

அதாவது கிழக்கு பகுதியில் சுவாமி சன்னதிக்கு ஒரு வாசலும், அம்மன் சன்னதிக்கு ஒரு வாசலும் உள்ளன. இத்தகைய அமைப்பு வேறெங்கும் இல்லை.  மீனாட்சிக்கும், சுந்தரேஸ்வரருக்கும் தங்கத்தாலான கோபுரங்களும், நான்கு வாசல் பக்கங்களிலும் ராஜ கோபுரங்களும் உள்ளன. இதில் தெற்கு கோபுரம் தான் மிகவும் உயரமானது.

உயரம் 160 அடி. இதில் 1511 சுதையால் ஆன சிலைகள் உள் ளன. இதை 1559ல் சிராமலை செவ் வந்தி மூர்த்தி செட்டியார் கட்டினார். மேற்கு கோபுரம் 154 அடி உயரம். 1124 சிலைகள் உள்ள இந்த கோபுரம் பராக்கிரம பாண்டியனால் (1315- 1347) கட்டப்பட்டது. வடக்கு கோபுரம் 152 அடி உயரம். இதனை மொட்டைக்கோபுரம் என்பார்கள். இந்த கோபுரம் கிருஷ்ண வீரப்ப நாயக்கரால் (1564-1572) கட்டப்பட்டது.

பொற்றாமரைக்குளத்தின் வட புறம் 7 நிலை சித்திரக்கோபுரம். இத்து டன் வேம்பத்தூரார் கோபுரம், நடுக் கட்டு கோபுரம், இடபக்குறியிட்ட கோபுரம் என மொத்தம் 14 கோபுரங்கள் உள்ளன.

மதுரை மீனாட்சி கோயில், 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இக்கோயில், எட்டுகோபுரங்களையும், இரண்டு விமானங்களையும் உடையது. இங்குள்ள கருவறை விமானங்கள், இந்திர விமானங்கள் என்று அழைக்கப்படுகின்றன. 32 கற்சிங்கங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும், கருவறை விமானங்களைத் தாங்குகின்றன.

இத்திருக்கோயில், கிழக்கு மேற்காக 847 அடியும், தெற்கு வடக்காக 792 அடியும் உடையது. இக்கோவிலின் ஆடி வீதிகளில், நான்கு புறமும் ஒன்பது நிலைகளை உடைய, நான்கு கோபுரங்கள் மிக உயர்ந்த நிலையில் இருக்கின்றன.

கட்டடக் கலை

மதுரை மாநகரின் மத்தியில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு மொத்தம் நான்கு நுழைவு வாயில்கள் உள்ளன. பழங்கால தமிழ் நூல்களின் சான்றுகளின் படி இக்கோவில் மதுரையின் மத்தியிலும் கோவிலை சுற்றி உள்ள தெருக்கள் தாமரை இதழ்கள் வடிவிலும் அமைக்கப்பட்டது.

இந்த கோவிலில் மொத்தம் 12 கோபுரங்கள் உள்ளன. அதில் நான்கு கோபுரங்கள் 4 திசைகளை நோக்கி உள்ள நுழைவுவாயில்கள். இந்த 12 கோபுரங்களுள் தெற்கு கோபுரம் மிக உயரமானது. 9 அடுக்குகளை உடைய தெற்கு கோபுரத்தின் உயரம் 52 மீட்டர்.

இங்குள்ள கோபுரங்கள் பல்வேறு மன்னர்களால் பல்வேறு காலங்களில் கட்டப்பட்டவை. கடைசியில் தேவக்கோட்டை நகரத்தாரால் பழுது பார்க்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது.

மீனாட்சி அம்மன் கோபுரம் காளத்தி முதலியார் என்பவரால் கி.பி.1570-ல் கட்டபெற்று 1963-ம் ஆண்டு சிவகங்கை அரசர் சண்முகத்தால் புதுப்பிக்கப்பட்டது. சுவாமி கோபுரம் கி.பி.1570-ம் ஆண்டு கட்டப்பெற்று திருமலைகுமரர் அறநிலையத்தால் பழுதுபார்க்கப்பட்டது. மேலும் மூவருக்காக இரண்டு கோபுரங்கள் உள்ளன. அவை இரண்டும் தங்கத்தால் வேயப்பட்டது.

அஷ்டசக்தி மண்டபம்

மதுரை மீனாட்சி அம்மன் சந்நிதியின் முன்பகுதியாக, எட்டு சக்தி (அஷ்டசக்தி) மண்டபம் அமைந்துள்ளது. வாயிலில் விநாயகர், முருகன் உருவங்களுக்கு இடையே மீனாட்சி திருக்கல்யாணம் கதை வடிவில் சித்தரிக்கப்பட்டுள்ளன. உள்ளே மண்டபத்தில் அமைந்துள்ள தூண்களில், எட்டு சக்தியின் வடிவங்கள் அழகுற அமைந்துள்ளன.

கம்பத்தடி மண்டபம்

இந்த மண்டபத்திலுள்ள சிற்பங்கள், சிவனின் பல்வேறு வடிவங்களைக் கொண்டுள்ளன. மீனாட்சி திருக்கல்யாணச் சிற்பம் உலகப் புகழ் பெற்றதாகும்.

கம்பத்தடி மண்டபம், நாயக்க மன்னர் முதலாம் கிருஷ்ணப்பர் காலத்தில் (கி.பி.1564–1572) கட்டப்பட்டு, பின் நாட்டுக்கோட்டை நகரத்தார்களால் புதுப்பித்துத் திருப்பணி செய்யப்பட்டது (1877). சுவாமி சந்நிதி முன்னுள்ள நந்தி மண்டபம், ஒரே கல்லினாலானது. இது விஜயநகர காலப் பணியாகும்.

கிழக்கு கோபுரத்திற்கு அருகில் உள்ள புதுமண்டபத்தில் தலவரலாற்றை விளக்கும் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. சுவாமி சன்னதியை சுற்றியுள்ள பிரகாரத்தில் சிவபெருமானின் 64 திருவிளையாடல்களும் சிற்பங்களாக காட்சியளிக்கின்றன.

அடுத்து உள்ள மீனாட்சி நாயக்கர் மண்டபத்தைத் தாண்டி உள்ளே சென்றால், இத்தலத்தின் இறைவி மீனாட்சி அம்மையின் சந்நிதி இருக்கிறது. கருவறையில், அம்மை இரண்டு திருக்கரங்களுடன் ஒரு கையில் கிளியை ஏந்தி அருட்காட்சி தருகிறார். சுவாமி சந்நிதியில், கருவறையில், இறைவன் சுந்தரேசுவரர் சிவலிங்கத் திருமேனியாக அருட்காட்சி தருகிறார்.

ஆயிரங்கால் மண்டபம்

ஆயிரங்கால் மண்டபம், இக்கோயிலில், சுவாமி சன்னதியின் இடப்புறத்தில் அமைந்துள்ளது. இம்மண்டபம், கோயிலில் உள்ள பிற மண்டபங்களை விட அளவில் பெரியது. ஆயிரங்கால் மண்டபம், கிருஷ்ண வீரப்ப நாயக்கரது திருப்பணியாகும்.

மிகச் சிறப்பு பெற்ற இம்மண்டபம், சாலிவாகன ஆண்டு, கி.பி.1494ஆம் ஆண்டில் மதுரையை அரசாண்ட, வீரப்ப நாயக்கர் காலத்தில், அவருடைய அமைச்சர் அரியநாத முதலியாரால் அமைக்கப்பட்டது.

மண்டப வாயிலின் மேல் விதானத்தில் தமிழ் ஆண்டுகள் அறுபதையும் குறிக்கும் சக்கரம் செதுக்கப்பட்டுள்ளது. இம்மண்டபத்தில் சிற்பங்கள் நிறைந்த 985 தூண்கள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. இத்தூண்களை, எந்தக் கோணத்தில் நின்று பார்த்தாலும், ஒரே வரிசையில் அமைந்திருக்கும் காட்சி வியப்பானது. 15 தூண்கள் இருக்குமிடத்தில் சபாபதி சன்னதி அமைந்துள்ளது.

ஆயிரங்கால் மண்டபத்தின் தூண்கள் ஒவ்வொன்றும், அழகாக செதுக்கப்பட்டு, 73 × 76 சதுரமீட்டர் (நீள, அகலம்) உள்ள கூரையைத் தாங்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன. மண்டபத்தில், இன்னிசை ஒலி எழுப்பும் 22 தூண்கள் அமைந்துள்ளன.

கற்சிலைகளைத் தவிர்த்து ஆயிரங்கால் மண்டபத்தில், இறைவன்- இறைவியின் செப்புத் திருமேனிகள், கண்ணாடிப் பேழைகளில் வைக்கப்பட்டுள்ளன.

ஆயிரங்கால் மண்டபத்தில் பல ஒலிகளை தரும் சிலைகள் தூண்களில் செதுக்கப்பட்டுள்ளன. வடக்கு கோபுரத்திற்கு அருகில் 5 இசைத்தூண்கள் உள்ளன. இந்த மண்டபத்தில், குதிரை மீது அமர்ந்திருக்கும் வீரரின் சிலை இவருடையது என்கிறார்கள். சொக்கராவுத்தர் என்றும் இந்தச் சிலை அழைக்கப்படும்.

இம்மண்டபம், கோயில் அருங்காட்சியமாக மாற்றப்பட்டு, பல்வேறு காலத்திய சிற்பங்கள், ஓவியங்கள், பரதக்கலை முத்திரைகள், இசைத் தூண்கள், தியான சித்திரங்கள் என, பல்வேறு சிறப்புப் அம்சங்களாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஆயிரங்கால் மண்டபம், கோயிலின் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டதால், உள்ளே நுழைய, நுழைவுக் கட்டணம் மற்றும் புகைப்படக் கருவிகள் கொண்டு புகைப்படம் எடுப்பதற்கு தனியாக கட்டணம் என்று வசூலிக்கப்படுகிறது.

பொற்றாமரைக் குளம்

விருத்திராசுரன் எனும் அரக்கனை, தேவேந்திரன் போரில் கொன்றான். அதனால் அவனுக்கு ஏற்பட்ட பாவம் நீங்க சிவத்தலங்களாகச் சென்று தரிசனம் செய்து வந்தான். எங்கும் தீராத பாவம், தென் தமிழ்நாட்டில் கடம்பவனத்தை அடைந்தவுடனேயே விலகுவதை உணர்ந்தான்.

அங்கு சுயம்புவாக நின்ற சிவலிங்கத்தைக் கண்டான். இறைவனாரே தனது பாவத்தைத் தீர்த்தவர் என்பதைப் புரிந்துகொண்டு சிவலிங்க பூஜை செய்வதற்கு மலர்கள் இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தான். அதுவும் தங்க மலர்களைக் கொண்டு அர்ச்சித்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணினான்.

அவன் நினைத்த மாத்திரத்தில், அந்தக் குளத்தில் தங்கத் தாமரைகள் தோன்றின. தங்கத் தாமரைகள் தோன்றியதால் அது பொற்றாமரைக் குளம் எனப்பட்டது!

தேவலோகத்தைச் சேர்ந்த ஐராவத யானை, பொற்றாமரைக் குளத்தில் நீராடி, இறைவனை வணங்கிச் சாபம் நீங்கப்பெற்றுத் தன் சுய உருவை மீட்டுக்கொண்டு, தேவலோகம் சென்றது.

ஆற்றங்கரையில் தவம் செய்து வேதம் ஓதிய முனிவர்களைக் கண்டும் அவர்கள் ஓதிய சிவநாமத்தைக் கேட்டும் ஒரு நாரை நல்ல புத்தி கொண்டது. ஆற்றில் சில மீன்களை இரையாகக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தும். முனிவர்கள் நீராடிய தருணத்தில் அவர்களின் திருமேனியில் குதித்து விளையாடியவை என்பதால், அவற்றைப் பிடிக்காமல் விட்டுவிட்டது.

முனிவர்களுடனே மதுரை வந்தது. அவர்கள் பொற்றாமரைக் குளத்தருகில் இருந்தபோதும், குளத்தின் மீன்களைப் பிடிப்பது பாவமென்று கருதி, உண்ணாமலே இருந்து சிவநெறியில் பிறழாது வாழ்ந்த அந்த நாரைக்கு இறைவன் முக்தி கொடுத்த தலமும் இதுவே. இந்தக் குளத்தில் மீன்கள் இருந்து, அவற்றை நாரைகள் தன்னியல்பில் பிடித்துவிட்டால்கூட அவற்றுக்குப் பாவம் வந்து சேருமே என்று பொற்றாமரைக் குளத்தில் மீன்களே இல்லாமல் செய்துவிட்டாராம் ஈசன்.

தருமிக்குப் பொன் தர ஈசன் செய்த திருவிளையாடலில் நக்கீரன் நெற்றிக்கண்ணின் வெப்பம் தாளாமல் வந்து வீழ்ந்த இடம் இந்தப் பொற்றாமரைக்குளம்தான். மேலும் இந்த குளம் நல்ல நூல்களை தேர்ந்தெடுக்கும் சக்தி படைத்தது என்றும் நம்புகிறார்கள். நூல்கள், ஓலைச்சுவடிகளை இந்த குளத்தில் போட வேண்டும். அவை நல்ல நூல்கள் என்றால் மிதக்கும். இல்லையென்றால் மூழ்கிவிடும்.

சன்னிதிகள்

மூலவர்

இக்கோவிலின் மூலவர், சுந்தரேசுவரர். இவர் சுயம்பு மூர்த்தியாவார். இவரை சோமசுந்தரர், சொக்கலிங்கநாதர், சொக்கேசர், ஆலவாய் அண்ணல், சொக்கநாதர் எனவும் அழைக்கின்றனர். இவரை வழிபட்டு, இந்திரன் தன்னுடைய பாவத்தினைத் தீர்த்துக் கொண்டான். அதனால், சுயம்பு லிங்கத்திற்குக் கோயில் எழுப்பினான். மூலவர் விமானம், ‘இந்திர விமானம்’ என்று அழைக்கப்படுகிறது.

இதையும் படிக்கலாம் : பஞ்ச சபை ஸ்தலங்கள்

மரகத மீனாட்சி

இத்தளத்தின் தாயார் மீனாட்சியம்மனாவார். இவரது விக்கிரகம், மரகதக் கல்பச்சைக்கல்லால் ஆனது. அம்பாள் மீனாட்சியின் கருவறையானது, 32 சிங்க உருவங்களும், 64 சிவ கணங்களும், 8 கல்யானைகளும் தாங்கி நிற்கும் அபூர்வமானதாகும்.

இந்தக் கருவறை விமானத்தைத் தேவேந்திரன் அமைத்தான். மீன் போன்ற கண்களைப் பெற்றவர் என்பதால், மீனாட்சி என்று பெயர்பெற்றார். மீன், தன்னுடைய முட்டைகளைத் தனது பார்வையாலேயே தன்மயமாக்குவது போல, மீனாட்சி அம்மன், தனது பக்தர்களை, அருட்கண்ணால் நோக்கி அருள்பாலிக்கிறவள்.

மீனாட்சியம்மன் திருக்கோலத்தில், கிளியும் இடம்பெற்றுள்ளது. பக்தர்களின் கோரிக்கையை, அம்பிகைக்கு நினைவூட்ட, திரும்பத் திரும்ப, கிளி சொல்லிக் கொண்டிருப்பதாக நம்பிக்கையுள்ளது. இந்திரன் சாப விமோசனத்திற்காக, இத்தலத்தினைத் தேடி வந்தபோது, கிளிகளே, சிவவழிபாட்டிற்கு உதவி செய்தன.

மதுரை மீனாட்சி பச்சைதேவி, மரகதவல்லி, தடாதகை, அபிசேகவல்லி, அபிராமவல்லி, கயற்கண்குமாரி, கற்பூரவல்லி, குமரித்துறையவள், கோமகள், சுந்தரவல்லி, பாண்டிப் பிராட்டி, மதுராபுரித் தலைவி, மாணிக்க வல்லி, மும்முலைத்திருவழுதி மகள் போன்ற எண்ணற்றப் பெயர்கள் உள்ளன. மீனாட்சியை, அங்கயற்கண்ணி எனத் தமிழில் அழைக்கின்றனர். இவரைத் ‘தடாதகைப் பிராட்டி’ என்றும் அழைப்பதுண்டு.

இங்கு அருள்பாலிக்கும் மீனாட்சியம்மனின் திருமேனி மரகதக் கல்லால் ஆனது என்கிறார்கள். பச்சைத் திருமேனி; வலது கரத்தில் மலர்; இடது கரம் லோல ஹஸ்தம் (தொங்கு கரம்) வலது தோளில் பச்சைக் கிளி; இடது பக்கம் சாயக் கொண்டை; சின்னஞ்சிறுமியின் முகம் என எழில் கொஞ்சும் திருவடிவாக அருள் காட்சி தருகிறாள் அன்னை மீனாட்சி.

மீனாட்சியம்மன் மதுரையின் அரசியாக இருப்பதால், இவருக்கு நடக்கும் அபிசேகங்களைப் பார்க்க, பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மீனாட்சியம்மனை, அலங்காரம் செய்த பிறகே, பக்தர்கள் பார்க்க முடியும்.

இத்தலத்தில் முதல் பூசை, அம்பிகை மீனாட்சிக்கே செய்யப்படுகின்றன. அதன் பின்பே, மூலவரான சிவபெருமானுக்குப் பூசைகள் செய்யப்படும். இதற்குக் காரணம், மீனாட்சியம்மன் பதிவிரதையாக இருந்து, எப்போதுமே தன்னுடைய கணவருக்குத் தொண்டு செய்ய எண்ணியுள்ளார். அதனால், கணவரை எழுப்பும் முன்பே, மனைவியான அம்பிகை, அபிசேகத்தினை முடித்துத் தயாராகிறாள். இதனால், காலையில் முதல் பூசை, மீனாட்சி அம்மனுக்குச் செய்யப்படுகிறது.

முக்குறுணி விநாயகர்

ஒரு முறை திருமலை நாயக்கருக்கு  தீராத வயிற்று வலி ஏற்பட்டது. வலி நீங்க மீனாட்சிக்கு தெப்பக்குளம் கட்டுவதாக நேர்ந்து கொண்டாராம். அப்படி தெப்பக்குளம் தோண்டும் போது பிரம்மாண்டமான பிள்ளை யார் கிடைத்தார்.

அவரை சுவாமி சன்னதி செல்லும் வழியில் தெற்கு நோக்கியபடி “முக்குறுணி விநாயகர்’ என்ற திருநாமத்துடன் பிரதிஷ்டை செய்தனர். இவருக்கு விநாயகர் சதுர்த் தியன்று 18படி அரிசியில் ஒரே கொழுக்கட்டையாக செய்து படைக் கிறார்கள்.

கோவிலின் சிறப்பு அம்சம்

சிவபெருமான் நடனமாடியதாகச் சொல்லப்படும் ஐந்து முக்கிய தலங்களில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருத்தலமும் ஒன்று. இது ஐம்பெரும் சபைகளில் வெள்ளி சபை என்று போற்றப்படும் சிறப்புடையதாகும். மற்ற எல்லா இடங்களிலும் இடது காலைத் தூக்கி நடனமாடும் நடராசர், இங்கு வலது காலைத் தூக்கி வைத்து நடனமாடுகிறார்.

சுவாமி சந்நிதியில் கருவறையில் இறைவன் சுந்தரேசுவரர் சிவலிங்கத் திருமேனியாக அருட்காட்சி தருகிறார். இது கடம்ப மரத்தடியில் தோன்றிய ஒரு சுயம்பு லிங்கமாகும்.

சிதம்பரம், காசி, திருக்காளத்தி வரிசையில், முக்கியமான 4-ஆவது தலமாகத் திருவாலவாய் உள்ளது. இந்த நகரம் புராண காலத்தில் திருவாலவாய் என்று அழைக்கப்பட்டுள்ளது. இந்தத் தலத்தின் பெயரைக் கேட்டதுமே பேரின்ப நிலை கிடைக்கும். அதனால், சிவபெருமானுடைய முக்தி தலங்களுள் ஒன்றாகவும் இத்தலம் கருதப்படுகிறது

இத்தலம், முக்கியமான சிவத்தலமாக மட்டும் இல்லாமல், அம்பிகையின் 51 சக்தி பீடங்களுள் ஒன்றுமாகும். இதனை, ராஜமாதங்கி சியாமள பீடம் என்று அழைக்கின்றனர்.

இத்தலம் 18 சித்தர்களில் ஒருவரான சுந்தரானந்தரின் சித்தர் பீடமாகவும் உள்ளது. விநாயகரின் அறுபடை வீடுகளில் நான்காவது படைவீடாகவும், சிவபெருமான் மீது பாடப்பெற்ற தேவாரப்பாடல் பெற்ற 274-ஆவது சிவாலயமாகவும், 192-ஆவது தேவாரத்தலமாகவும் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில், பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.

இத்தலத்தில் தரப்படுகின்ற பிரசாதமான தாழம்பூ குங்குமம், பிரசித்தி பெற்றதாகும்.

உலக அதிசயங்களைத் தேர்வு செய்வதற்காக ஒரு இணையதளம் செய்த முயற்சியில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலும் ஒன்றாக இடம் பெற்றிருந்தது.

சிவலிங்கம் பிற தலங்களாகிய மேருமலை, வெள்ளிமலை, திருக்கேதாரம், வாரணாசி மற்றும் பல பெருமை பெற்ற தலங்கள் எல்லாவற்றிலும் உள்ள சிவலிங்கங்கள் எல்லாவற்றிற்கும் முன்னே தோன்றியதாகும். எனவே இதற்கு “மூலலிங்கம்” என்ற பெயரும் உண்டு.

நவக்கிரங்களில் புதனுக்குரியதாக கூறப்படுகிறார் சுந்தரேசுவரர், சொக்கநாதர் என்றும் அறியப்படுகிறார். புதனுக்கான பரிகாரங்களை இக்கோவிலில் உள்ள சிவனுக்கு செய்வது வழக்கமாக இருக்கிறது.

பெண்மைக்கு முக்கியத்துவம்

மதுரை மீனாட்சி மூலஸ்தானத்தில் நின்ற கோலத்தில் இடைநெளித்து கையில் கிளி ஏந்தி அழகே உருவாக மரகத மேனியாக அருள்பாலிக்கிறார். சுவாமி சுந்தரேஸ்வரர் கருவறை யில் சுயம்புலிங்கமாக வீற்றிருக்கிறார்.

கடம்பம், வில்வம் இரண்டும் தல விருட்சங்களாக உள்ளன. பொற்றா மரை, வைகை ஆகிய தீர்த்தங்கள் இத்தலத்திற்கு சிறப்பு சேர்க்கின்றன. இத்தலத்தை பொறுத்தவரை  பெண் மைக்கு முக்கியத்துவம் தரும் வகை யில், அம்மனின் இடப்பக்கம் சுவாமி வீற்றிருக்கிறார்.

கால் மாறி ஆடிய நடராஜர்

சுவாமி சன்னதி நுழையும் போது வலது புறத்தில் இருக்கும் நடராஜர். மற்ற கோயில்களில் இருப்பதைப் போன்று இல்லாமல் இடது காலுக்குப் பதில், வலது கால் தூக்கு நடன மாடுகிறார்.

மதுரையை ஆண்ட ராஜசேகர பாண்டியன் நடனங்கலையை கற்று வந்தார். அவர் சுவாமியை தரிசித்த போது, “இறைவா நான் நடனம் கற்பதற்கு மிகவும் சிரமப்பட்டேன். ஆனால் காலம் காலமாக வலதுகால் ஊன்றி, இடதுகால் தூக்கி ஆடுகின்றாயே. எனக்காக இடது கால் ஊன்றி வலது கால் தூக்கி, கால் மாறி ஆடக் கூடாதா?… அப்படி நீ இதை செய்யாவிட்டால் நான் என் உயிரை இங்கேயே துறப்பேன்” என்றார்.

மன்னனின் வேண்டுகோளை ஏற்ற நடராஜர் தன்  இடது காலை ஊன்றி, வலது கால் தூக்கி ஆடி அருளினார். நடராஜர் இருக்கும் இடம் பஞ்ச சபைகளுள் ஒன்றான வெள்ளி சபை ஆகும்.

விநாயகரின் நான்காவது படை வீடு

விநாயகருக்கும் 6 படை வீடு இருக்கிறது. இத்தலத்தில் அம்மன் சன்னதி நுழைவு வாயிலின் இடது பக்கம் உள்ள சித்தி விநாயகர் சன்னதி விநாயகரின் நான்காவது படை வீடாகும்.

தங்கத் தேர்

அன்னை மீனாட்சிக்கு 1981ல் தங்கத் தால் தேர் செய்யப்பட்டது. இந்த தங்க தேர் இழுப்பதற்கு அலுவலகத் தில் பணம் கட்ட வேண்டும். ஆனால் ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பன்றும் இலவசமாக தங்கத்தேர் இழுக்கலாம்.

இத்தேரின் அப்போதைய மதிப்பு ரூ.14,07,093.80. 14.5அடி உயரத் தில் செய்யப்பட்ட இந்த ரதத்தில் 6.964 கிலோ தங்கமும், 87.667 கிலோ வெள்ளியும், 222.400 கிலோ தாமிரமும் சேர்க்கப்பட்டுள்ளது.

மீனாட்சியம்மன் கிளி ரகசியம்

மீனாட்சியம்மன் என்றதுமே கிளி நினைவிற்கு வரும். தன்னை வேண்டும் பக்தர்களின் கோரிக்கைகளை அம்பிகைக்கு, கிளி திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்குமாம்.

மதுரை மீனாட்சி இடம் கிளி இருப்பதற்கான இன்னொரு காரணத்தையும் தெரிந்து கொள்ளுங்கள். இந்திரன் சாப விமோசனத்திற்காக பூலோகம் வந்தபோது இத்தலத்திற்கு வந்தான். அப்போது சொக்கநாதர் லிங்கமாக எழுந்தருளியிருந்த இடத்தின் மேலே பல கிளிகள் வட்டமிட்டபடி அவரது திருநாமத்தைச் சொல்லிக்கொண்டு பறந்து கொண்டிருந்தன. இதைக்கண்டு ஆச்சரியமடைந்த இந்திரன், சொக்கநாதரை வணங்கி விமோசனம் பெற்றான். இவ்வாறு இந்திரன் இங்கு சிவவழிபாடு செய்வதற்கு கிளிகள் வழிகாட்டியதன் அடிப்படையில் மதுரை தலத்தில் கிளி முக்கியத்துவம் பெற்று விட்டது.

எட்டுகால பூஜை

தாய்மையின் பூரணத்துவம் பொங்கிடும் கண்களால் நம்மையெல்லாம் கடைத்தேற்றும் ஜகன்மாதாவாக அவள் திகழ்கிறாள். ஒவ்வொரு நாளும் மீனாட்சியம்மன் பல்வேறு திருக்கோலங்களில் அருள்பாலிப்பதாக ஐதீகம். திருவனந்தல், விளாபூஜை, காலசந்தி,  திரிகாலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம், பள்ளியறை பூஜை என தினமும் எட்டுகால பூஜை நடக்கிறது. இந்த எட்டு காலங்களில் முறையே மஹாஷோடசி, புவனை, மாதங்கி, பஞ்சதசாட்சரி, பாலா, சியாமளா, சோடஷி ஆகிய திருக்கோலங்களில் அம்பிகையை பாவித்து வழிபடுவது இத்தலத்திற்கே உரிய ஒன்றாகும்.

இப்பூஜைகள், திருமலை நாயக்கரின் அமைச்சராகப் பணிபுரிந்த நீலகண்ட தீட்சிதர் வகுத்து வைத்தபடி நடந்து வருகிறது. இங்கு காரண, காமிக ஆகமங்கள் பின்பற்றப்படுகின்றன.

திருவிழாக்கள்

இங்கு நடைபெறும் சித்திரைத் திருவிழா மிக பிரசித்தி பெற்றது. ஆனி மாதம் ஊஞ்சல் உற்சவம், ஆவணி மூலம், நவராத்திரி விழா, கார்த்திகை தீபத் திருவிழா, மார்கழி உற்சவம், தை தெப்பம், பங்குனி உத்திரம் ஆகிய திருவிழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

சித்திரை திருவிழா கோவிலின் தலவரலாற்றை எடுத்துரைக்கும் திருவிழாவாகும்.

பிரார்த்தனை மற்றும் நேர்த்திக்கடன்

மீனாட்சி அம்மன் தாயுள்ளம் கொண்டவள். இங்கு யார் எதை வணங்கினாலும், அவர்களுக்கு அதை அருளுவதோடு, சகல ஐஸ்வர்யங்களையும் வழங்கக் கூடியவர்.

கல்யாணம், குழந்தை பாக்கியம் ஆகியவை அம்பாளை வேண்டினால் அமைகிறது. வேண்டும் வரமெல்லாம் தரும் அன்னையாக மீனாட்சி இருப்பதால் இத்தலத்தில் பக்தர்கள் தங்கள் எல்லாவிதமான வேண்டுதல்களையும் அம்பாளிடம் வைக்கின்றனர்.

இறைவன் சொக்கநாதரை வணங்கினால் மனதுக்கு அமைதியும் கிடைக்கும், முக்தியும் கிடைக்கும். இங்குள்ள சுவாமி பிராகரத்தில் அமர்ந்து தியானம் செய்யலாம், அத்தனை அமைதி வாய்ந்த ஒம் என்ற நாதம் மட்டுமே நம் காதுகளுக்கு ஒலிக்கும் அளவுக்கு மிகவும் நிசப்தமான பிரகாரம் அது.

இங்கு எப்போதும் பக்தர்கள் தியானத்தில் அமர்ந்திருப்பதை நாம் கோயிலை வலம் வரும்போது காணலாம். தவம், தியானம் செய்ய ஏற்ற தலம் இது.

சுவாமிக்கு பால், எண்ணெய், இளநீர் சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யலாம். அம்பாளுக்கு பட்டுப்புடவை சாத்துதல், சுவாமிக்கு உலர்ந்த தூய ஆடை அணிவித்தல், தங்களால் முடிந்த அபிஷேக ஆராதனைகள் இங்கு இறைவனுக்கும், அம்மனுக்கும் பக்தர்களால் செலுத்தப்படுகிறது.

கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைக்கலாம். சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகிக்கலாம். சங்காபிஷேகம், கலசாபிஷேகம் ஆகியவற்றை செய்யலாம். தவிர யாகம் செய்தும் வழிபடலாம்.

நடை திறந்திருக்கும் நேரம்

காலை 5.00 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும்.

மாலை 4.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையும் நடை திறந்திருக்கும்.

முகவரி

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்,

மதுரை மாவட்டம் – 625001

தொலைபேசி எண் : 04522344360

மேலும் படிக்க

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருப்பரங்குன்றம்
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், சோலைமலை
சிதம்பரம் நடராஜர் திருக்கோயில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *