மகா சிவராத்திரி 2024 எப்போது?

மாசிமாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தியன்று அமாவாசைக்கு முதல் நாள் சிவராத்திரி விரதம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சிவபெருமானை வழிபட்டால் கவலைகள் அனைத்தும் நீங்கும். காரிய வெற்றியும் ஏற்படும். இந்த ஆண்டு மகா சிவராத்திரி வரும் 2024 மார்ச் 8ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. மகா சிவராத்திரி இரவு முழுவதும் கண் விழித்து சிவபெருமானை பூஜித்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.

சிவாய நம என்று சிந்தித்திருந்தால் அபாயம் நமக்கு ஏற்படாது, உபாயம் நமக்கு ஏற்படும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். மகா சிவராத்திரி முழுவதும்,ஆறு கால பூஜையிலும் சிவனை நினைத்து வழிபட்டு சிவாலயங்களில் சிவன் சன்னதியில் அமர்ந்து சிவன் பெயரை உச்சரித்து வந்தால் ஒரே நாளில் ஓர் ஆண்டிற்கான பலனும் நமக்கு கிடைக்கும்.

மகாசிவராத்திரி அன்று சிவன் கோயிலில் நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன. முதல் பூஜையில் பிரம்மா சிவபெருமானை வழிபடும் காலம் எனவும், இரண்டாவது கால பூஜையில் பார்வதி தேவி சிவ பெருமானை வழிபடும் காலம் எனவும், மூன்றாம் பூஜையில் தேவர்கள் சிவ பெருமானை வழிபடும் காலம் எனவும், நான்காம் கால பூஜையில் மனிதர்கள் உள்ளிட்ட பிற ஜீவராசிகளும் சிவனை வழிபடுவதாக புராணம் கூறுகிறது.

மகா சிவராத்திரி 2024 தேதி

maha shivarathri 2024

இந்த ஆண்டு மகா சிவராத்திரி மார்ச் 8ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. சதுர்த்தசி திதி மார்ச் 8 அன்று இரவு 8:20 மணிக்கு தொடங்கி மார்ச் 9ம் தேதி மாலை 6 மணிக்கு முடிவடைகிறது. எனவே சிவராத்திரி பூஜையை மார்ச் 8ம் தேதி இரவு 8:30 மணிக்கு மேல் தொடங்க வேண்டும். சூரிய பகவான் கும்ப ராசியில் சஞ்சரிக்கும் மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தி அன்று மாலை முதல் மறுநாள் காலை வரை சிவபெருமானுக்கு தொடர்ந்து நான்கு கால பூஜைகள் நடைபெறும்.

மகா சிவராத்திரி பூஜை காலங்கள்

முதல் கால பூஜை –  இரவு, 6.30 – 9.30 pm;

இரண்டாம் கால பூஜை –  இரவு 9.30 – 12.30pm;

மூன்றாம் கால பூஜை – நள்ளிரவு 12.30 – 3.30 am;

நான்காம் கால பூஜை – அதிகாலை 3.30 – 6.00 am;

மகா சிவராத்திரி விரதம் இருப்பதற்கான காரணங்கள்

maha shivarathri

சிவராத்திரி அல்லது பிரதோஷ நாள் ஒவ்வொரு மாதமும் அமாவாசை நாளில் 14 திதியில் வழிபடப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் கிருஷ்ண பட்ச தினத்தை கொண்டாடுகிறோம். இந்நாளில் சிவன் கோயிலுக்குச் சென்று ஈஸ்வரனை வழிபட்டால் மன அமைதி, வாழ்வில் முன்னேற்றம், தீய சக்திகள் நீங்குதல் போன்ற பலன்கள் கிடைக்கும்.

மாசி மாத அமாவாசையின் 14வது நாளான சதுர்த்தசி அன்று மகா சிவராத்திரி வருகிறது. மகா சிவராத்திரி நாளில் விரதம் இருப்போருக்கு கிடைக்கும் மகத்துவங்கள் என்ன என்பது பற்றி கருட புராணம், கந்த புராணம், பத்ம புராணம், அக்னி புராணம் உள்ளிட்ட பல்வேறு நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிவராத்திரி விரதம் 24 ஆண்டுகள் கடைபிடித்தால் சிவகதி அடைவார்கள். மேலும், அவர்களின் 21 தலை முறைகளும் ஆசீர்வதிக்கப்பட்டு முக்தியடைந்ததாக புராணங்கள் கூறுகின்றன.

மகா சிவராத்திரி விரதம் இருக்கும் முறை

maha shivarathri 2024

மகா சிவராத்திரி நாளில் நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன. சிவராத்திரி அன்று அதிகாலையில் எழுந்து குளிக்கவும். அதன் பிறகு, வீடு முழுவதையும் சுத்தம் செய்து, பூஜை அறையில் விளக்கு ஏற்றவும். சிவன் கோவிலுக்குச் சென்று அங்கு பூஜைகள் செய்து வழிபடுங்கள்.

சிவராத்திரி நாளில் இரவு முழுவதும் விழித்திருந்து, சிவனை வழிபட்டு, அபிஷேகம், ருத்ராபிஷேகம் செய்து, சிவ மந்திரங்களை உச்சரித்து, சிவனின் அருளைப் பெற வேண்டும். மகாசிவராத்திரியில் கோவில் முழுவதும் களைகட்டி காட்சியளிக்கிறது.

மகா சிவராத்திரி சிறப்பு

  • சிவலிங்கத்திற்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்வதும், வில்வ அர்ச்சனை செய்வதும் மிகச்சிறப்பானதாகும்.
  • ஓம் நமசிவாய எனும் சிவாய மந்திரத்தை மனதார உச்சரித்து பூஜிக்க வேண்டும்.
  • ருத்ராபிஷேகம் செய்வதும், கோயில்களில் நடக்கும் ருத்ராபிஷேகத்தில் கலந்து கொள்வதும் மிகவும் சிறப்பானதாகும்.
  • மகா சிவராத்திரி தினத்தில் சிவ பெருமானை மனதுருகி வேண்டினால், வேண்டியது நிச்சயம் கிடைக்கும்.
  • சிவராத்திரியில் விரதம் இருக்க முடியாதவர்கள், வயது முதிர்ந்தவர்கள், உடல் நலக் குறைபாடு உள்ளவர்கள் கோயில்களுக்குச் சென்று மனம் உருகி வழிபட்டாலே போதும். மகா சிவராத்திரி தினத்தில் வழிபட்டால் முன் ஜென்மத்தில் செய்த பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

இதையும் படிக்கலாம் : சிவராத்திரி அன்று விரதம் இருந்து வழிபடுவது எப்படி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *