எருக்கு மருத்துவ பயன்கள்..!

milkweed benefits

எருக்கு பொதுவாக காரச்சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டது. எருக்கு இலை வாந்தி உண்டாக்குதல்; பித்தம் பெருக்குதல்; வீக்கம், கட்டிகளைக் கரைத்தல் ஆகிய பண்புகளைக் கொண்டுள்ளது.

எருக்கு பட்டை, பூ ஆகியவை கோழையகற்றும்; பசி உண்டாக்கும்; செரிப்பு உண்டாக்கும்; உடல் உரமாக்கும். எருக்கு பால் புண்களை ஏற்படுத்தும்.

எருக்கு நேராக வளரும் பாலுள்ள பெரிய புதர்ச்செடி. எருக்கின் இலைகள் அகன்று எதிர் எதிர் அடுக்கில் அமைந்ததுள்ளது. எருக்கு செடி முழுவதும் வெண்மையான மாவு படர்ந்தது போலக் காணப்படும்.

எருக்கு மலர்கள் பெரும்பாலும் கத்தரிப்பூ நிறமானவை. அரிதாக வெள்ளை நிறமான பூக்களுடன் காணப்படும். பச்சையான காய்களில் உள்ள விதைகள் மென்மையான வெள்ளைப் பஞ்சுடன் கூடியவை. இவை காற்றில் பறக்கக் கூடியவை.

எருக்க இலை, பட்டை, வேர், பூ, பால் ஆகியவை சிறந்த மருத்துவப் பயன் கொண்டவை. வெப்ப மண்டல நாடுகள் அனைத்திலும் வளர்பவை. தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் தானே வளர்கின்றது.

வெள்ளெருக்கன் செடியின் வேரிலிருந்து விநாயகர் போன்ற சுவாமி விக்கிரகங்கள் செய்து வணங்குவார்கள். வெள்ளெருக்கன் வேர்க் கட்டை வீட்டில் இருந்தால் பூச்சிகள், விஷ வண்டுகள் வராது என்கிற நம்பிக்கை சார்ந்த நடைமுறையும் நமது மக்களிடையே உள்ளது.

பெரியவர்களுக்கான மருத்துவத்தில் மட்டுமே எருக்கு உள் மருந்தாக உபயோகிக்கப்படலாம்.

நன்றாக நெருப்பில் சுட்ட சூடான செங்கல் மீது எருக்கன் பழுப்பு இலைகள் மூன்றை வைத்து அதன் மீது பாதிக்கப்பட்ட குதிகாலை ஐந்து நிமிடங்கள் வரை வைக்க வேண்டும். 3 நாட்கள் இவ்வாறு செய்ய குதிகால் வாதம் குணமாகும்.

எருக்க பூ ஒரு பங்கு, மிளகு ஒரு பங்கு, கிராம்பு அரைப் பங்கு சேர்த்து அரைத்து, மிளகு அளவு உருண்டையாக்கி, காய வைத்து, தேனில் 2 உருண்டைகள் கரைத்து சாப்பிட இரைப்பு நோய் கட்டுப்படும்.

வெள்ளெருக்கன் பூக்களை சேகரித்து, காம்பு உள் நரம்புகள் ஆகியவற்றை நீக்கி, சிறிது மிளகு சேர்த்து அரைத்து மிளகு அளவு மாத்திரைகளாக செய்து கொள்ள வேண்டும். இந்த மாத்திரையில் வேளைக்கு ஒரு மாத்திரை வீதம் மூன்று வேளைகள் தேனில் உரைத்து சாப்பிட மார்பில் கட்டிய கோழை வெளியாகும்.

எருக்க இலையை வதக்கி இளஞ்சூட்டோடு வைத்துக் கட்டினால் கட்டி பழுத்து சீக்கிரமாக உடையும் அல்லது

நன்கு முதிர்ச்சியடைந்த எருக்கு செடியிலிருந்து பழுப்பான இலைகளைச் சேகரித்துக் கொள்ள வேண்டும். இதனை அனலில் இட்டு வதக்கிச் சாறு பிழிந்து அத்துடன் சிறிதளவு சுண்ணாம்பு மற்றும் தேன் கலந்து நன்றாகக் குழைத்துக் கொள்ள வேண்டும். இதனை வெளி உபயோகத்திற்கான பூசு மருந்தாக உபயோகிக்கலாம்.

உலர்த்தி பொடியாக்கிய எருக்க இலையுடன் விளக்கெண்ணெய் சேர்த்துக் தடவ நாள் பட்ட புண்கள் குணமாகும்.

குளவி, தேனீ, தேள் கொட்டு விஷம் முறிய அவை கொட்டிய இடத்தில் எருக்க பாலைத் தடவ விஷம் இறங்கும்.

பல் நோய்,பல் சொத்தை குணமாக எருக்க பாலைத் தொட்டு பாதிக்கப்பட்டுள்ள இடத்தில் பூசலாம்.

3 துளி எருக்க இலைச்சாறு, 10 துளி தேன் விட்டு உள்ளுக்குள் கொடுக்க வயிற்றுப் புழுக்கள் வெளியாகும்.

எருக்கின் வேர் சூரணத்தை ஆமணக்கு எண்ணெய் விட்டு தடவி வர குஷ்ட நோய் கட்டுப்படும்.

இதையும் படிக்கலாம் : அருகம்புல்லின் மருத்துவ பயன்கள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *