நாச்சியார் திருமொழி – தையொரு திங்கள்

தையொரு திங்களும் தரை விளக்கித் தண் மண்டலமிட்டு மாசி முன்னாள்
ஐய நுண்மணற் கொண்டு தெருவணிந்து அழகினுக்கு அலங்கரித்து அனங்க தேவா
உய்யவுமாங்கொலோ என்று சொல்லி உன்னையும் உம்பியையும் தொழுதேன்
வெய்யதோர் தழல் உமிழ் சக்கரக் கை வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே (1)

வெள்ளை நுண்மணல் கொண்டு தெருவணிந்து வெள்வரைப்பதன் முன்னம் துறை படிந்து
முள்ளுமில்லாச் சுள்ளி எரிமடுத்து முயன்று உன்னை நோற்கின்றேன் காம தேவா
கள்ளவிழ் பூங்கணை தொடுத்துக் கொண்டு கடல்வண்ணன் என்பதோர் பேர் எழுதி
புள்ளினை வாய் பிளந்தான் என்பதோர் இலக்கினில் புக என்னை எய்கிற்றியே (2)

மத்தநன் நறுமலர் முருக்கமலர் கொண்டு முப்போதும் உன்னடி வணங்கி
தத்துவமிலி என்று நெஞ்செரிந்து வாசகத்தழித்து உன்னை வைதிடாமே
கொத்தலர் பூங்கணை தொடுத்துக் கொண்டு கோவிந்தன் என்பதோர் பேர் எழுதி
வித்தகன் வேங்கடவாணன் என்னும் விளக்கினில் புக என்னை விதிக்கிற்றியே (3)

சுவரில் புராண! நின் பேர் எழுதிச்சுறவநற் கொடிக்களும் துரங்கங்களும்
கவரிப் பிணாக்களும் கருப்பு வில்லும் காட்டித் தந்தேன் கன்டாய் காம தேவா!
அவரைப் பிராயம் தொடங்கி என்றும் ஆதரித்து எழுந்த என் தடமுலைகள்
துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத் தொழுது வைத்தேன் ஒல்லை விதிக்கிற்றியே (4)

வானிடை வாழும் அவ்வானவர்க்கு மறையவர் வேள்வியில் வகுத்த அவி
கானிடைத் திரிவதோர் நரி புகுந்து கடப்பதும் மோப்பதும் செய்வதொப்ப
ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க்கென்று உன்னித்து எழுந்த என் தடமுலைகள்
மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே (5)

உருவுடையார் இளையார்கள் நல்லார் ஓத்து வல்லார்களைக் கொண்டு வைகல்
தெருவிடை எதிர் கொண்டு பங்குனி நாள் திருந்தவே நோற்கின்றேன் காம தேவா
கருவுடை முகில்வண்ணன் காயாவண்ணன் கருவிளை போல் வண்ணன் கமல வண்ணத்
திருவுடை முகத்தினில் திருக்கண்களால் திருந்தவே நோக்கெனக்கு அருள் கண்டாய் (6)

காயுடை நெல்லொடு கரும்பமைத்துக் கட்டி அரிசி அவல் அமைத்து
வாயுடை மறையவர் மந்திரத்தால் மன்மதனே உன்னை வணங்குகின்றேன்
தேச முன்னளந்தவன் திரிவிக்கிரமன் திருக்கைகளால் என்னைத் தீண்டும் வண்ணம்
சாயுடை வயிறும் என் தடமுலையும் தரணியில் தலைப்புகழ் தரக்கிற்றியே (7)

மாசுடை உடம்பொடு தலை உலறி வாய்ப்புரம் வெளுத்தொரு போதுமுண்டு
தேசுடைத் திறலுடைக் காம தேவா! நோற்கின்ற நோன்பினைக் குறிக்கொள் கண்டாய்
பேசுவதொன்று உண்டு இங்கு எம்பெருமான்! பெண்மையைத் தலையுடைத்து ஆக்கும் வண்ணம்
கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் என்னும் இப்பேறு எனக்கருள் கண்டாய் (8)

தொழுது முப்போதும் உன்னடி வணங்கித் தூமலர் தூய்த் தொழுது ஏத்துகின்றேன்
பழுதின்றிப் பார்க்கடல் வண்ணனுக்கே பணி செய்து வாழப் பெறாவிடில் நான்
அழுதழுது அலமந்து அம்மா வழங்க ஆற்றவும் அது உனக்கு உறைக்கும் கண்டாய்
உழுவதோர் எருத்தினை நுகங்கொடு பாய்ந்து ஊட்டமின்றித் துரந்தால் ஒக்குமே (9)

கருப்பு வில் மலர்க் கணைக் காம வேளைக் கழலிணை பணிந்து அங்கோர் கரி அலற
மருப்பினை ஒசித்துப் புள் வாய் பிளந்த மணிவண்ணற்கு என்னை வகுத்திடென்று
பொருப்பன்ன மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர் கோன் விட்டுசித்தன் கோதை
விருப்புடை இன்தமிழ் மாலை வல்லார் விண்ணவர் கோன் அடி நண்ணுவரே (10)

நாச்சியார் திருமொழி – நாமமாயிரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *