நாச்சியார் திருமொழி – கோழியழைப்பதன்

கோழி அழைப்பதன் முன்னம் குடைந்து நீராடுவான் போந்தோம்
ஆழியஞ் செல்வன் எழுந்தான் அரவணை மேல் பள்ளி கொண்டாய்
ஏழைமை ஆற்றவும் பட்டோம் இனி என்றும் பொய்கைக்கு வாரோம்
தோழியும் நானும் தொழுதோம் துகிலைப் பணித்தருளாயே (1)

இதுவென் புகுந்தது இங்கந்தோ இப்பொய்கைக்கு எவ்வாறு வந்தாய்
மதுவின் துழாய் முடி மாலே மாயனே எங்கள் அமுதே
விதியின்மையால் அது மாட்டோம் வித்தகப் பிள்ளாய் விரையேல்
குதிகொண்டு அரவில் நடித்தாய்! குருந்திடைக் கூறை பணியாய் (2)

எல்லே ஈதென்ன இளமை எம்மனைமார் காணில் ஒட்டார்
பொல்லாங்கு ஈதென்று கருதாய் பூங்குருந்து ஏறி இருத்தி
வில்லால் இலங்கை அழித்தாய் நீ வேண்டியதெல்லாம் தருவோம்
பல்லாரும் காணாமே போவோம் பட்டைப் பணித்தருளாயே (3)

பரக்க விழித்து எங்கும் நோக்கிப் பலர் குடைந்தாடும் சுனையில்
அரக்க நில்லா கண்ண நீர்கள் அலமருகின்றவா பாராய்
இரக்கமேல் ஒன்றும் இலாதாய் இலங்கை அழித்த பிரானே
குரக்கரசு ஆவதறிந்தோம் குருந்திடைக் கூறை பணியாய் (4)

காலைக் கதுவிடுகின்ற கயலொடு வாளை விரவி
வேலைப் பிடித்து என்னைமார்களோட்டில் என்ன விளையாட்டோ
கோலச் சிற்றாடை பலவும் கொண்டு நீ ஏறி இராதே
கோலம் கரிய பிரானே குருந்திடைக் கூறை பணியாய் (5)

தடத்தவிழ் தாமரைப் பொய்கைத் தாள்கள் எம் காலைக் கதுவ
விடத்தேள் எறிந்தாலே போல வேதனை ஆற்றவும் பட்டோம்
குடத்தை எடுத்தேற விட்டுக் கூத்தாட வல்ல எம் கோவே
படிற்றை எல்லாம் தவிர்ந்து எங்கள் பட்டைப் பணித்தருளாயே (6)

நீரிலே நின்று அயர்க்கின்றோம் நீதி அல்லாதன செய்தாய்
ஊரகம் சாலவும் சேய்த்தால் ஊழி எல்லாம் உணர்வானே
ஆர்வம் உனக்கே உடையோம் அம்மனைமார் காணில் ஒட்டார்
போர விடாய் எங்கள் பட்டைப் பூங்குருந்து ஏறி இராதே (7)

மாமிமார் மக்களே அல்லோம் மற்றும் இங்கு எல்லாரும் போந்தார்
தூமலர்க் கண்கள் வளரத் தொல்லையிராத் துயில்வானே!
சேமமேல் அன்றிது சாலச் சிக்கென நாம் இது சொன்னோம்
கோமள ஆயர் கொழுந்தே குருந்திடைக் கூறை பணியாய் (8)

கஞ்சன் வலை வைத்த அன்று காரிருள் எல்லில் பிழைத்து
நெஞ்சு துக்கம் செய்யப் போந்தாய் நின்ற இக்கன்னியரோமை
அஞ்ச உரப்பாள் அசோதை ஆணாட விட்டிட்டு இருக்கும்
வஞ்சகப் பேய்ச்சி பால் உண்ட மசிமையிலீ! கூறை தாராய் (9)

கன்னியரோடு எங்கள் நம்பி கரிய பிரான் விளையாட்டை
பொன்னியல் மாடங்கள் சூழ்ந்த புதுவையர் கோன் பட்டன் கோதை
இன்னிசையால் சொன்ன மாலை ஈரைந்தும் வல்லவர் தாம் போய்
மன்னிய மாதவனோடு வைகுந்தம் புக்கு இருப்பாரே (10)

நாச்சியார் திருமொழி – தெள்ளியார் பலர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *