ராகு கால எலுமிச்சை விளக்கின் மகிமை..!

raghu kala lemon

ஒரு நாளில் உள்ள இருபத்தி நாலு மணி நேரத்தில் ஒன்றரை மணி நேரம் ராகுவும், ஒன்றரை மணி நேரம் கேதுவும் அம்பிகையை பூஜிக்கின்றனர். அதில் ராகு வழிபாடு செய்யும் நேரம் ராகு காலம் என்றும், கேது வழிபாடு செய்யும் நேரம் எமகண்டம் என்றும் அழைக்கப்படுகிறது.

ராகு காலம் என்பது ஒவ்வொரு நாளிலும் குறிப்பிட்ட ஒன்றரை மணி நேரமாகும். ராகு காலத்தில் செய்யப்படும் துர்க்கை பூஜை சிறப்புமிக்கது.

செவ்வாய்க் கிழமைகளில் வரும் ராகு காலத்தில் செய்யப்படும் பூஜை அதிலும் சிறப்பு மிகுந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் அந்த தினத்தில் ராகுவோடு இணைந்து செவ்வாயும் அம்பிகையை மங்கள சண்டிகையாக வணங்குகிறார். இதனால் கூடுதல் பலன் கிடைக்கும்.

செவ்வாயும் ராகுவும்

செவ்வாய்க்கு மங்களன் என்ற பெயர் உள்ளது. பொதுவாக ஒருவரது வாழ்வில் மங்கல காரியங்கள் நடப்பதற்கு செவ்வாய் மற்றும் சர்ப்ப தோஷங்களே காரணமாகச் சொல்லப்படுகின்றன.

செவ்வாய், ராகு ஆகிய கிரகங்களால் தோஷம் இருந்தாலோ அல்லது வாழ்வில் தடைகளும், துன்பங்களும் தொடர்ந்தாலோ ராகு கால வழிபாட்டினை மேற்கொண்டு, துர்க்கையையும் மங்கள சண்டிகையையும் வழிபடுவது நல்ல பலன் தரும்.

ராகு கால விரதம்

ராகு கால விரதம் துர்க்கையை நோக்கியவாறு தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது. அதிலும் கிழக்கு அல்லது மேற்கு திசை நோக்கி தீபம் ஏற்றுவது என்பது சிறப்பானது.

ராகு கால துர்க்கை பூஜையை கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுவதுதான் நல்லது. ராகு கால பூஜை செய்பவர்கள் பூஜை முடியும் வரை விரதம் அனுஷ்டிப்பது நன்மை தரும். முடியாதவர்கள் சிறிது பால், பழம் சாப்பிடலாம். கோவிலுக்கு போக இயலாதவர்கள் வீட்டில் நெய் ஊற்றி தீபம் ஏற்றி வைத்து வணங்குங்கள்.

ராகு கால எலுமிச்சை விளக்கு

ராகு கால பூஜையில் எலுமிச்சை விளக்கேற்றுவது பற்றி புராணங்கள் எதுவும் குறிப்பிடவில்லை என்றாலும், காலம் காலமாக இந்த வழக்கம் இருந்து வருகிறது. விளக்கேற்றுவதன் சரியான முறையை பார்க்கலாம்.

ராகு கால துர்க்கை பூஜையை தொடர்ந்து ஒன்பது வாரங்கள் செய்வது அவசியம். எலுமிச்சைப் பழத்தை நறுக்கும் போது ஐம் என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். மூடியை திருப்பும்போது க்ரீம் என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும். அதில் பஞ்சு திரியை இடவேண்டும். எண்ணெய் ஊற்றும்போது க்லீம் என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இந்த விளக்கை துர்க்கையின் முன் வைத்து ஏற்றும்போது சாமுண்டாய விச்சே என்று சொல்லி தீபம் ஏற்ற வேண்டும்.

ராகு கால நேரம் தொடங்கிய பிறகே எலுமிச்சைப் பழத்தை நறுக்க வேண்டும். அதற்கு முன்பே நறுக்கி வைத்தல் கூடாது.

விளக்கேற்றிய பிறகு கோயிலை ஒன்பது அல்லது 21 முறை சுற்றிவர வேண்டும். ஐம் என்ற சொல் சரஸ்வதியையும், க்ரீம் என்ற சொல் லட்சுமியையும், க்லீம் என்ற சொல் காளியையும் குறிக்கும். சாமுண்டாய விச்சே என்ற சொல்லுக்கு சரஸ்வதி கடாட்சம், லட்சுமி கடாட்சம், காளி கடாட்சம் ஆகியவற்றை வழங்கும் தெய்வமே
என பொருள்.

எலுமிச்சையின் மகிமை

ராகு காலத்தில் எலுமிச்சையை துர்க்கா தேவிக்கு தீபம் ஏற்ற பயன்படுத்துகிறார்கள். சூலாயுதங்களில் எலுமிச்சை குத்தப்படுகிறது. இதற்கு காரணம் எலுமிச்சை தேவ கனி என்பதே ஆகும்.

மாம்பழத்தில் வண்டு குற்றம் உண்டு. பலாவில் வியர்வை குற்றம் உண்டு. வாழையில் புள்ளி குற்றம் உண்டு. ஆனால் எலுமிச்சையில் மட்டும் இவ்வித குற்றங்கள் இல்லை. மனிதனுடைய எண்ணங்களை ஈர்க்கும் சக்தி மற்ற கனிகளைக் காட்டிலும் எலுமிச்சைக்கு அதிகம் உண்டு.

இதையும் படிக்கலாம் : அனைத்து தெய்வங்களுக்கும் உரிய காயத்திரி மந்திரங்கள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *