கலைமகள் (சரஸ்வதி) போற்றி

அறிவினுக் கறிவாய் ஆனாய் போற்றி
செறிஉயிர் நாத்தொறும் திகழ்வோய் போற்றி
ஆட்சிகொள் அரசரும் அழியாய் போற்றி
காட்சிசேர் புலவர்பால் கனிவோய் போற்றி

இல்லக விளக்கம் இறைவி போற்றி
நல்லக மாந்தரை நயப்பாய் போற்றி
ஈரமார் நெஞ்சினார் இடந்தோய் போற்றி
ஆரமார் தொடையால் அணிவோய் போற்றி

உலகியல் நடத்தும் ஒருத்தி போற்றி
அலகில் உயர்க்கிறி வளிப்போய் போற்றி
ஊனமில் வெள்ளை உருவினாய் போற்றி
கானக் குயில்மொழிக் கன்னியே போற்றி

எண்ணிலாப் புகழுடை எந்தாய் போற்றி
பண்ணியல் தமிழின் பாவாய் போற்றி
ஏழுல குந்தொழும் இறைவி போற்றி
சூழநல் அன்பரின் துணைத்தாய் போற்றி

ஐதுசேர் வெண்கலை ஆடையாய் போற்றி
மைதீர் முத்து மாலையாய் போற்றி
ஒட்டக் கூத்தர்க் குதவினோய் போற்றி
வட்டவெண் தாமரை வாழ்வோய் போற்றி

ஓதுவார் அகத்துறை ஒளியே போற்றி
போதுசேர் அருட்கண் பொற்கோடி போற்றி
ஒளவைமூ தாட்டியாய் ஆனாய் போற்றி
கௌவையே இல்லாக் கலைமகள் போற்றி

கல்விக் கரசே கலைக்கடல் போற்றி
நல்விற் புருவ நங்காய் போற்றி
செங்கையில் புத்தகம் சேர்த்தோய் போற்றி
அங்கையில் படிகம் அடக்கியோய் போற்றி

சமை குண்டிகைக்கைத் தாயே போற்றி
அமைவுகொள் ஞான அருட்கையாய் போற்றி
அஞ்சலென் றருள்தரும் அன்னே போற்றி
மடமறு நான்முகன் வாழ்வே போற்றி

திடமுறு செந்தமிழ்த் தெளிவே போற்றி
கண்கண்ட தெய்வக் கண்மணி போற்றி
பண்கண்ட பாவிற் படர்ந்தனை போற்றி
தந்தையும் தாயுமாய்த் தழைப்போய் போற்றி

மைந்தரோ டொக்கலாய் வளர்வோய் போற்றி
நல்லோர் சொற்படி நடப்போய் போற்றி
பல்லோர் பரவும் பனுவலோய் போற்றி
மன்னரும் வணங்க வைப்போய் போற்றி

உன்னரும் பெருமை உடையோய் போற்றி
யாவர்க்கும் இசைந்த யாயே போற்றி
பாவும் பொருளுமாய்ப் படர்வோய் போற்றி
பூரப் பரிவரு பொற்கொடி போற்றி

வார நெஞ்சினர் வழித்துணை போற்றி
சிலம்பொலிச் சிற்றடித் திருவருள் போற்றி
நலஉமை இடக்கணாம் நாயகி போற்றி
வள்ளைக் கொடிச் செவி மானே போற்றி

பிள்ளை மொழித் தமிழ்ப் பிராட்டி போற்றி
அழகின் உருவ அணங்கே போற்றி
பழகு தமிழின் பண்ணே போற்றி
இளமை குன்றா ஏந்திழாய் போற்றி

வளமை குளிர்மை மன்னினாய் போற்றி
அறனும் பொருளும் அருள்வோய் போற்றி
வறனறு இன்பம் மலிந்தோய் போற்றி
சொன்ன கலைகளின் தொடர்பே போற்றி

மன்னிய முத்தின் வயங்குவாய் போற்றி
கம்பர்க் கருளிய கருத்தே போற்றி
நம்பினோர்க் கின்பருள் நல்லோய் போற்றி
காண்டகும் எண்ணெண் கலையாய் போற்றி

வேண்டா வெண்மையை விலக்குவோய் போற்றி
கிட்டற் கரிய கிளிமோழி போற்றி
வெட்ட வெளியாம் விமலை போற்றி
கீர்த்தியார் வாணியாம் கேடிலாய் போற்றி

ஆர்திதியார் அன்பரின் அகத்தாய் போற்றி
குமர குருபரர்க் குதவினோய் போற்றி
அமரரும் வணங்கும் அம்மே போற்றி
கூர்மையும் சீர்மையும் கொண்டோய் போற்றி

ஆர்வலர் ஏத்த அருள்வோய் போற்றி
கெடலரும் பாவின் கிழத்தி போற்றி
விடலரும் அறிவின் வித்தே போற்றி
கேள்வி கல்விக் கிழமையோய் போற்றி

ஆள்வினை அருளும் அமிழ்தே போற்றி
கையகப் கழுநிர்க் கலைமகள் போற்றி
பொய்தீர் அருங்கலைப் பொருளே போற்றி
கொண்டற் கூந்தற் கொம்பே போற்றி

வண்டமிழ் வடமொழி வளனே போற்றி
கோதில் பலமொழிக் குருந்தே போற்றி
போதில் உறையும் பொன்னே போற்றி
சங்கொத் தொளிர்நிறத் தாளே போற்றி

அங்கண் அருள்நிறை அம்மா போற்றி
சாதலும் பிறத்தலும் தவிர்ந்தோய் போற்றி
போதலும் இருத்தலும் போக்கினோய் போற்றி
சினமும் செற்றமும் தீர்ந்தோய் போற்றி

மனமும் கடந்த மறை பொருள் போற்றி
சீரார் சிந்தா தேவியே போற்றி
ஏரார் செழுங்கலை இன்பே போற்றி
சுடரே விளக்கே தூயாய் போற்றி

இடரே களையும் இயல்பினாய் போற்றி
சூழும் தொண்டரின் தொடர்பே போற்றி
ஏழுறும் இசையின் இசைவே போற்றி
செவ்விய முத்தமிழ்த் திறனே போற்றி

ஒளவியம் அறுக்கும் அரசி போற்றி
சேவடிச் செல்வம் அளிப்போய் போற்றி
பாவடிப் பயனே படைத்தருள் போற்றி
சைவம் தாங்கும் தனிக்கொடி போற்றி

மையெலாம் போக்கும் மருந்தே போற்றி
சொல்லோடு பொருளின் சுவையருள் போற்றி
அல்லொடு பகலுன் அடைக்கலம் போற்றி
சோர்விலா அறிவின் தொடர்பே போற்றி

தீர்விலா நுண்கலைத் திறனே போற்றி
தமிழ்க்கலை தமிழ்ச்சுவை தந்தருள் போற்றி
தமிழ்மந் திரமொழித் தண்பயன் போற்றி
தாயே நின்னருள் தந்தாய் போற்றி

தாயே நின் திருவடி தொழுதனம் போற்றி
திருவுடன் கல்வித் திறனருள் போற்றி
இரு நிலத் தின்பம் எமக்கருள் போற்றி

இதையும் படிக்கலாம் : சரஸ்வதி மந்திரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *