திருக்குறள் அதிகாரம் 22 – ஒப்புரவறிதல்

குறள் 211 :

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு

என்ஆற்றுங் கொல்லோ உலகு.

மு.வரதராசனார் உரை

இந்த உலகத்தார் மழைக்கு என்ன கைமாறு செய்கின்றனர்;, மழை போன்றவர் செய்யும் உதவிகளும் கைமாறு வேண்டாதவை.

மு.கருணாநிதி உரை

கைம்மாறு கருதி மழை பொழிவதில்லை; அந்த மழையைப் போன்றவர்கள் கைம்மாறு கருதி எந்த உதவியும் செய்பவர்கள் அல்லர்.

சாலமன் பாப்பையா உரை

பிறர்க்கு உதவுவது, அவ்வுதவியைப் பெற்றவர் திரும்பச் செய்வதை எதிர்பார்த்து அன்று; ஒருவர் செய்ததற்குத் திரும்பச் செய்துதான் ஆகவேண்டும் என்றால் மழை தரும் மேகங்களுக்கு இந்த உலகம் திரும்ப என்ன செய்துவிட முடியும்?.

மணக்குடவர் உரை

ஒப்புரவு செய்யுங்காற் கைம்மாறு கருதிச் செய்ய வேண்டா: எல்லார்க்கும் நல்வழி சுரக்கின்ற மாரிக்கு உலகம் கைம்மாறு செய்தலுண்டோ? கடப்பாடு- ஒப்புரவு. இஃது ஒப்புரவாவது கைம்மாறு வேண்டாத கொடை யென்று கூறிற்று.

குறள் 212 :

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு

வேளாண்மை செய்தற் பொருட்டு.

மு.வரதராசனார் உரை

ஒப்புரவாளன் தன்னால் இயன்ற முயற்சி செய்து சேர்த்த பொருள் எல்லாம் தக்கவர்க்கு உதவி செய்வதற்கே ஆகும்.

மு.கருணாநிதி உரை

தகுதியுடையோர் நலனுக்கு உதவிடும் பொருட்டே ஒருவன் முயன்று திரட்டிய பொருள் பயன்பட வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை

முயன்று சம்பாதித்த பொருள் எல்லாம், உழைக்க முடியாமல் பொருள் தேவைப்படுவோர்க்கு உதவுவதற்கே.

மணக்குடவர் உரை

ஒருவன் முயன்று ஈட்டிய பொருளெல்லாம் தகுதி யுடையார்க்கு உபகரித்தற்காகவாம். இது பொருளுண்டானால் ஒப்புரவு செய்கவென்றது.

குறள் 213 :

புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே

ஒப்புரவின் நல்ல பிற.

மு.வரதராசனார் உரை

பிறர்க்கு உதவி செய்து வாழும் ஒப்புரவைப் போல நல்லனவாகிய வேறு அறப்பகுதிகளைத் தேவருலகத்திலும் இவ்வுலகத்திலும் பெறுதல் இயலாது.

மு.கருணாநிதி உரை

பிறர்க்கு உதவிடும் பண்பாகிய ஒப்புரவு என்பதைவிடச் சிறந்த பண்பினை இன்றைய உலகிலும், இனிவரும் புதிய உலகிலும் காண்பது அரிது.

சாலமன் பாப்பையா உரை

தேவர்கள் உலகத்திலும் இப்பூவுலகிலும், உழைக்க முடியாதவர்க்கு உதவுவது போன்ற வேறு நல்ல செயல்களைப் பெறுவது கடினம்.

மணக்குடவர் உரை

ஒப்புரவு செய்தலின் நன்றாயிருப்பது தேவருலகத்தினும் இவ்வுலகத்தினும் பெறுதற்கு அரிதாம்.

குறள் 214 :

ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான்

செத்தாருள் வைக்கப் படும்.

மு.வரதராசனார் உரை

ஒப்புரவை அறிந்து போற்றிப் பிறர்க்கு உதவியாக வாழ்கின்றவன் உயிர்வாழ்கின்றவன் ஆவான், மற்றவன் செத்தவருள் சேர்த்துக் கருதப்படுவான்.

மு.கருணாநிதி உரை

ஒப்புரவை அறிந்து பிறருக்கு உதவியாகத் தன் வாழ்வை அமைத்துக் கொள்பவனே உயிர்வாழ்பவன் எனக் கருதப்படுவான்; அதற்கு மாறானவன் இறந்தவனே ஆவான்.

சாலமன் பாப்பையா உரை

உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவுபவனே உயிரோடு வாழ்பவன். உதவாதவன் இருந்தாலும் இறந்தவனாகவே எண்ணப்படுவான்.

மணக்குடவர் உரை

ஒப்புரவறிவான் உயிர்வாழ்வானென்று சொல்லப்படுவன். அஃதறியான் செத்தவருள் ஒருவனாக எண்ணப்படுவன். இஃது ஒப்புரவறியாதார் பிணத்தோ டொப்ப ரென்றது.

குறள் 215 :

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்

பேரறி வாளன் திரு.

மு.வரதராசனார் உரை

ஒப்புரவினால் உலகம் வாழுமாறு விரும்பும் பேரறிவாளியின் செல்வம், ஊரார் நீருண்ணும் குளம் நீரால் நிறைந்தாற் போன்றது.

மு.கருணாநிதி உரை

பொதுநல நோக்குடன் வாழ்கின்ற பேரறிவாளனின் செல்வமானது ஊர் மக்கள் அனைவருக்கும் பயன் தரும் நீர் நிறைந்த ஊருணியைப் போன்றதாகும்.

சாலமன் பாப்பையா உரை

உலகின் வளர்ச்சிப் போக்கை அறிந்து செயற்படும் பேர் அறிவாளனின் செல்வம், நீர் நிறைந்த ஊருணி எல்லார்க்கும் பொதுவாவது போல் பொதுவாகும்.

மணக்குடவர் உரை

ஊர் உண்கின்றகேணி நீர் நிறையப் புகுந்தாலொக்கும்: உலகத்தாரெல்லாராலும் நச்சப்படுகின்ற பெரிய வொப்புரவு அறிவானது செல்வம். இஃது ஒப்புரவறிவார்க்கு உளதாகிய செல்வம் நச்சிச்சென்றார் வேண்டியவாறு முகக்கலா மென்றது.

குறள் 216 :

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்

நயனுடை யான்கண் படின்.

மு.வரதராசனார் உரை

ஒப்புராவாகிய நற்பண்பு உடையவனிடம் செல்வம் சேர்ந்தால் அஃது ஊரின் நடுவே உள்ள பயன் மிகுந்த மரம் பழங்கள் பழுத்தாற் போன்றது.

மு.கருணாநிதி உரை

ஈர நெஞ்சம் கொண்டவனிடம் செல்வம் சேருமேயானால் அது, ஊரின் நடுவே செழித்து வளர்ந்த மரம், பழுத்துக் குலுங்குவது போல எல்லோர்க்கும் பயன்படுவதாகும்.

சாலமன் பாப்பையா உரை

பிறரால் விரும்பப்படுபவனிடம் சேரும் செல்வம், உண்ணத் தகும், கனிதரும் மரம் ஊருக்கு உள்ளே பழுத்திருப்பதைப் போல எல்லார்க்கும் பொதுவாகும்.

மணக்குடவர் உரை

பயன்படுமரம் ஊர்நடுவே பழுத்தாற் போலும்: பிறரால் விரும்பப்படுவான்மாட்டுச் செல்வ முண்டாயின். இது வேண்டாதார்க்கும் பயன்படு மென்றது.

குறள் 217 :

மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்

பெருந்தகை யான்கண் படின்.

மு.வரதராசனார் உரை

ஒப்புரவாகிய பெருந்தகைமை உடையவனிடத்து செல்வம் சேர்ந்தால் அஃது எல்லா உறுப்புகளுக்கும் மருந்தாகிப் பயன்படத் தவறாத மரம் போன்றது.

மு.கருணாநிதி உரை

பிறருக்கு உதவிடும் பெருந்தன்மையாம் ஒப்புரவு உடையவனிடம், செல்வம் சேர்ந்தால் அது ஒரு நல்ல மரத்தின் எல்லா உறுப்புகளும் மருந்தாகப் பயன்படுவது போன்றதாகும்.

சாலமன் பாப்பையா உரை

பெரும் பண்பாளனிடம் சேரும் செல்வம், எல்லா உறுப்புகளாலும் மருந்து ஆகிப் பயன்படுவதிலிருந்து தப்பாத மரம் போலப் பொதுவாகும்.

மணக்குடவர் உரை

பிணிமருந்தாகித் தேடுவார்க்கு மறைதலில்லாத மரத்தை யொக்கும், செல்வமானது பெருந்தகைமையான்மாட்டு உண்டாயின். தப்புதலென்றது ஒளித்தலை.

குறள் 218 :

இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்

கடனறி காட்சி யவர்.

மு.வரதராசனார் உரை

ஒப்புரவு அறிந்து ஒழுதலாகியத் தன் கடமை அறிந்த அறிவை உடையவர், செல்வ வளம் இல்லாத காலத்திலும் ஒப்புரவுக்குத் தளர மாட்டார்.

மு.கருணாநிதி உரை

தம்மிடம் வளம் நீங்கி, வறுமை வந்துற்ற காலத்திலும், பிறர்க்கு உதவிடும் ஒப்புரவில் தளராதவர், கடமையுணர்ந்த தகைமையாளர்.

சாலமன் பாப்பையா உரை

செய்யவேண்டிய கடமையை அறிந்த அறிவாளிகள், தம்மிடம் கொடுக்க இடம் இல்லாக் காலத்திலும், உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவத் தயங்க மாட்டார்கள்.

மணக்குடவர் உரை

செல்வம் விரிவற்ற காலத்திலும் ஒப்புரவிற்குத் தளரார்: ஒப்புரவை யறியும் அறிவுடையார். இது செல்வம் விரிவில்லாத காலத்தினும் செய்யவேண்டு மென்றது.

குறள் 219 :

நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர

செய்யாது அமைகலா வாறு.

மு.வரதராசனார் உரை

ஒப்புரவாகிய நற்பண்பு உடையவன் வறுமை உடையவனாதல், செய்யத்தக்க உதவிகளைச் செய்யாமல் வருந்துகின்ற தன்மையாகும்.

மு.கருணாநிதி உரை

பிறர்க்கு உதவி செய்வதையே கடமையாகக் கொண்ட பெருந்தகையாளன் ஒருவன், வறுமையடைந்து விட்டான் என்பதை உணர்த்துவது அவனால் பிறர்க்கு உதவிட முடியாமல் செயலிழந்து போகும் நிலைமைதான்.

சாலமன் பாப்பையா உரை

உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவும் உள்ளம் உடையவன் வறியவன் ஆவது, செய்யக்கூடிய உதவிகளைப் பிறர்க்குச் செய்யமுடியாது வருந்தும் போதுதான்.

மணக்குடவர் உரை

நயனுடையான் நல்கூர்ந்தா னாகின்றது செய்ய வேண்டுவன செய்யாதே யமைய மாட்டாத இயல்பாம். இது செல்வங் குறைபடினுஞ் செய்வரென்றது.

குறள் 220 :

ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்

விற்றுக்கோள் தக்க துடைத்து.

மு.வரதராசனார் உரை

ஒப்புரவால் கேடு வரும் என்றால் அக் கேடு ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக்கொள்ளும் தகுதி உடையதாகும்.

மு.கருணாநிதி உரை

பிறருக்கு உதவுகின்ற சிறப்புடைய உலக ஒழுக்கம், கேடு விளைவிக்கக் கூடியதாக இருப்பின், அக்கேடு, ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக் கொள்ளக் கூடிய மதிப்புடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை

இருப்பதைப் பிறர்க்குக் கொடுத்துவிட்டால், நாளை நமக்குத் தீமை வருமே என்று சொன்னால், தன்னையே விலையாகக் கொடுத்து அந்தத் தீமை வாங்கத்தக்கதே.

மணக்குடவர் உரை

ஒருவன் ஒப்புரவு செய்தலினாலே பொருட்கேடு வருமென்று சொல்லின், அக்கேட்டைக் கேடாகச் சேர்த்துக் கொள்ளல் கூடாது. அஃது ஒன்றை விற்று ஒன்றைக் கொள்ளுகின்ற வாணிகமாகக் கொள்ளுந் தகுதியுடைத்து. கெட்டானாயினும் அதனை ஆக்கமாகக் கொள்ளல் தகும்: பிற்பயப்பன நன்மையாதலான்.

திருக்குறள் அதிகாரம் 23 – ஈகை

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *