திருக்குறள் அதிகாரம் 24 – புகழ்

குறள் 231 :

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது

ஊதியம் இல்லை உயிர்க்கு.

மு.வரதராசனார் உரை

வறியவர்க்கு ஈதல் வேண்டும் அதனால் புகழ் உண்டாக வாழ வேண்டும், அப் புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை.

மு.கருணாநிதி உரை

கொடைத் தன்மையும், குன்றாத புகழும்தவிர வாழ்க்கைக்கு ஆக்கம் தரக் கூடியது வேறெதுவும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை

ஏழைகளுக்குக் கொடுப்பது; அதனால் புகழ் பெருக வாழ்வது; இப்புகழ் அன்றி மனிதர்க்குப் பயன் வேறு ஒன்றும் இல்லை.

மணக்குடவர் உரை

புகழ்பட வாழ்தலாவது கொடுத்தல். அக்கொடையா னல்லது உயிர்க்கு இலாபம் வேறொன்றில்லை. இது புகழுண்டாமாறு கூறிற்று.

குறள் 232 :

உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று

ஈவார்மேல் நிற்கும் புகழ்.

மு.வரதராசனார் உரை

புகழ்ந்து சொல்கின்றவர் சொல்பவை எல்லாம் வறுமையால் இரப்பவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவுகின்றவரின் மேல் நிற்கின்ற புகழேயாகும்.

மு.கருணாநிதி உரை

போற்றுவோர் போற்றுவனவெல்லாம் இல்லாதவர்க்கு ஒன்று வழங்குவோரின் புகழைக் குறித்தே அமையும்.

சாலமன் பாப்பையா உரை

சொல்வார் சொல்வன எல்லாம், இல்லை என்று வருபவர்க்குத் தருபவர்மேல் சொல்லப்படும் புகழே.

மணக்குடவர் உரை

சொல்லுவார் சொல்லுவனவெல்லாம் இரந்துவந்தார்க்கு அவர் வேண்டியதொன்றைக் கொடுப்பார்மேல் நில்லாநின்ற புகழாம்.

குறள் 233 :

ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்

பொன்றாது நிற்பதொன் றில்.

மு.வரதராசனார் உரை

உயர்ந்த புகழ் அல்லாமல் உலகத்தில் ஒப்பற்ற ஒரு பொருளாக அழியாமல் நிலைநிற்க வல்லது வேறொன்றும் இல்லை.

மு.கருணாநிதி உரை

ஒப்பற்றதாகவும், அழிவில்லாததாகவும் இந்த உலகத்தில் நிலைத்திருப்பது புகழைத் தவிர வேறு எதுவுமே இல்லை.

சாலமன் பாப்பையா உரை

தனக்கு இணையில்லாததாய், உயர்ந்ததாய் விளங்கும் புகழே அன்றி, அழியாமல் நிலைத்து நிற்கும் வேறொன்றும் இவ்வுலகத்தில் இல்லை.

மணக்குடவர் உரை

உயர்ந்த புகழல்லது இணை யின்றாக உலகத்துக் கெடாது நிற்பது பிறிதில்லை. இது புகழ் மற்றுள்ள பொருள்போலன்றி அழியாது நிற்கு மென்றது.

குறள் 234 :

நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்

போற்றாது புத்தேள் உலகு.

மு.வரதராசனார் உரை

நிலவுலகின் எல்லையில் நெடுங்காலம் நிற்கவல்ல புகழைச் செய்தால், வானுலகம் (அவ்வாறு புகழ் செய்தாரைப் போற்றுமே அல்லாமல்) தேவரைப் போற்றாது.

மு.கருணாநிதி உரை

இனிவரும் புதிய உலகம்கூட இன்றைய உலகில் தன்னலம் துறந்து புகழ் ஈ.ட்டிய பெருமக்களை விடுத்து, அறிவாற்றல் உடையவரை மட்டும் போற்றிக் கொண்டிராது.

சாலமன் பாப்பையா உரை

தன்னில் வாழும்அறிஞரைப் போற்றாமல், இந்த நில உலகில்நெடும்புகழ் பெற்று வாழந்தவரையே தேவர் உலகம் பேணும்.

மணக்குடவர் உரை

ஒருவன் நிலத்தெல்லையின் கண்ணே நெடிய புகழைச் செய்வனாயின் தேவருலகம் புலவரைப் போற்றாது இவனைப் போற்றும். புலவரென்றார் தேவரை, அவர் புலனுடையாராதலான். இது புகழ் செய்தாரைத் தேவருலகம் போற்றுமென்றது.

குறள் 235 :

நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்

வித்தகர்க் கல்லால் அரிது.

மு.வரதராசனார் உரை

புகழுடம்பு மேம்படுதலாகும் வாழ்வில் கேடும், புகழ் நிலை நிற்பதாகும் சாவும் அறிவில் சிறந்தவர்க்கு அல்லாமல் மற்றவர்க்கு இல்லை.

மு.கருணாநிதி உரை

துன்பங்களுக்கிடையேகூட அவற்றைத் தாங்கும் வலிமையால் தமது புகழை வளர்த்துக் கொள்வதும், தமது சாவிலும்கூடப் புகழை நிலை நாட்டுவதும் இயல்பான ஆற்றலுடையவருக்கே உரிய செயலாகும்.

சாலமன் பாப்பையா உரை

பூத உடம்பின் வறுமையைப் புகழுடம்பின் செல்வமாக்குவதும், பூத உடம்பின் அழிவைப் புகழுடம்பின் அழியாத் தன்மை ஆக்குவதும், பிறர்க்கு ஈந்து, தாம் மெய் உணர்ந்து, அவா அறுத்த வித்தகர்க்கு ஆகுமே அன்றி மற்றவர்க்கு ஆவது கடினம்.

மணக்குடவர் உரை

ஆக்கம்போலக் கேடும் உளதானாற்போலச் சாதலும் வல்லவற்கல்லது அரிது. இது புகழ்பட வாழ்தல் மக்களெல்லார்க்கும் அரிதென்றது.

குறள் 236 :

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று.

மு.வரதராசனார் உரை

ஒரு துறையில் முற்பட்டுத் தோன்றுவதானால் புகழோடு தோன்ற வேண்டும், அத்தகைய சிறப்பு இல்லாதவர் அங்குத் தோன்றுவதைவிடத் தோன்றாமலிருப்பதே நல்லது.

மு.கருணாநிதி உரை

எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அதில் புகழுடன் விளங்கவேண்டும்; இயலாதவர்கள் அந்தத் துறையில் ஈ.டுபடாமல் இருப்பதே நல்லது.

சாலமன் பாப்பையா உரை

பிறர் அறியுமாறு அறிமுகமானால் புகழ் மிக்கவராய் அறிமுகம் ஆகுக; புகழ் இல்லாதவர் உலகு காணக் காட்சி தருவதிலும், தராமல் இருப்‌பதே நல்லது.

மணக்குடவர் உரை

பிறக்கிற் புகழுண்டாகப் பிறக்க; அஃதிலார் பிறக்குமதிற் பிறவாமை நன்று. இது புகழ்பட வாழவேண்டு மென்றது.

குறள் 237 :

புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை

இகழ்வாரை நோவது எவன்.

மு.வரதராசனார் உரை

தமக்குப் புகழ் உண்டாகுமாறு வாழமுடியாதவர் தம்மைத் தாம் நொந்து கொள்ளாமல் தம்மை இகழ்கின்றவரை நொந்து கொள்ளக் காரணம் என்ன?.

மு.கருணாநிதி உரை

உண்மையான புகழுடன் வாழ முடியாதவர்கள், அதற்காகத் தம்மை நொந்து கொள்ள வேண்டுமே தவிரத் தமது செயல்களை இகழ்ந்து பேசுகிறவர்களை நொந்து கொள்வது எதற்காக?.

சாலமன் பாப்பையா உரை

புகழ் பெருகுமாறு வாழமுடியாதவர் அதற்குக் காரணர் தாமே என்று தம்மீது வருந்தாமல், தம்மை இகழ்வார் மீது வருத்தம் கொள்வது எதற்காக?.

மணக்குடவர் உரை

புகழ்பட வாழ மாட்டாதார் தங்களை நோவாது தம்மை யிகழ்வாரை நோகின்றது யாதினுக்கு? இது புகழ்பட வாழமாட்டாதார் இகழப்படுவரென்றது.

குறள் 238 :

வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்

எச்சம் பெறாஅ விடின்.

மு.வரதராசனார் உரை

தமக்குப் பின் எஞ்சி நிற்பதாகியப் புகழைப் பெறாவிட்டால் உலகத்தார் எல்லார்க்கும் அத்தகைய வாழ்க்கை பழி என்று சொல்லுவர்.

மு.கருணாநிதி உரை

தமக்குப் பிறகும் எஞ்சி நிற்கக் கூடிய புகழைப் பெறாவிட்டால், அது அந்த வாழ்க்கைக்கே வந்த பழியென்று வையம் கூறும்.

சாலமன் பாப்பையா உரை

புகழ் என்னும் பெரும் செல்வத்தைப் பெறாது போனால், இந்த உலகத்தவர்க்கு அதுவே பழி என்று அறிந்தோர் கூறுவர்.

மணக்குடவர் உரை

உலகத்தார்க்கெல்லாம் புகழாகிய ஒழிபு பெறாவிடின், அப்பெறாமைதானே வசையாமென்று சொல்லுவர். மேல் புகழில்லாதாரை யிகழ்பவென்றார் அவர் குற்றமில்லா ராயின் இகழப்படுவரோவென்றார்க்கு வேறு குற்றம் வேண்டா, புகழின்மைதானே யமையுமென்றார்.

குறள் 239 :

வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா

யாக்கை பொறுத்த நிலம்.

மு.வரதராசனார் உரை

புகழ் பெறாமல் வாழ்வைக் கழித்தவருடைய உடம்பைச் சுமந்த நிலம், வசையற்ற வளமான பயனாகிய விளைவு இல்லாமல் குன்றிவிடும்.

மு.கருணாநிதி உரை

புகழ் எனப்படும் உயிர் இல்லாத வெறும் மனித உடலைச் சுமந்தால், இந்தப்பூமி நல்ல விளைவில்லாத நிலமாகக் கருதப்படும்.

சாலமன் பாப்பையா உரை

புகழ் இல்லாத உடம்பைச் சுமந்த பூமி, தன் வளம் மிக்க விளைச்சலில் குறைவு படும்.

மணக்குடவர் உரை

புகழில்லாத வுடம்பைப் பொறுத்த நிலம் பழியற்ற நல்விளைவு குறையும். இது புகழில்லாதா னிருந்தவிடம் விளைவு குன்றுமென்றது.

குறள் 240 :

வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய

வாழ்வாரே வாழா தவர்.

மு.வரதராசனார் உரை

தாம் வாழும் வாழ்க்கையில் பழி உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழ்கின்றவர், புகழ் உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழாதவர்.

மு.கருணாநிதி உரை

பழி உண்டாகாமல் வாழ்வதே வாழ்க்கை எனப்படும், புகழ் இல்லாதவர் வாழ்வதும் வாழாததும் ஒன்றுதான்.

சாலமன் பாப்பையா உரை

தம்மீது பழி இன்றிப் புகழோடு வாழ்பவரே உயிர‌ோடு வாழ்பவர்; புகழ் இன்றிப் பழியோடு வாழ்பவர் இருந்தும் இல்லாதவரே.

மணக்குடவர் உரை

வசையொழிய வாழுமவர்களே உயிர் வாழ்வாராவர்; புகழொழிய வாழ்வாரே உயிர் வாழாதார். இது புகழில்லார் பிணத்தோ டொப்ப ரென்றது.

திருக்குறள் அதிகாரம் 25 – அருளுடைமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *