திருக்குறள் அதிகாரம் 33 – கொல்லாமை

குறள் 321 :

அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்.

மு.வரதராசனார் உரை

அறமாகிய செயல் எது என்றால் ஒரு உயிரையும் கொல்லாமையாகும், கொல்லுதல் அறமல்லாத செயல்கள் எல்லாவற்றையும் விளைக்கும்.

மு.கருணாநிதி உரை

எந்த உயிரையும் கொல்லாதிருப்பதே அறச்செயலாகும். கொலை செய்தல் தீயவினைகள் அனைத்தையும் விளைவிக்கும்.

சாலமன் பாப்பையா உரை

அறச்செயல் எது என்றால், பிற உயிர்களைக் கொலை செய்யாது இருப்பதே; கொல்வது அனைத்துப் பாவங்களையும் தரும்.

மணக்குடவர் உரை

நல்வினை யாதெனின் கொல்லாமை; கொல்லுதல் எல்லாத் தீவினைப் பயனையுந் தருமாதலால். இஃது அறத்தொழிலாவது கொல்லாமை யென்றது.

குறள் 322 :

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.

மு.வரதராசனார் உரை

கிடைத்ததைப் பகுந்து கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும்.

மு.கருணாநிதி உரை

இருப்போர் இல்லாதோர் என்றில்லாமல், கிடைத்ததைப் பகிர்ந்துகொண்டு, எல்லா உயிர்களும் வாழ வேண்டும் என்ற சமநிலைக் கொள்கைக்கு ஈ.டானது வேறு எதுவுமே இல்லை.

சாலமன் பாப்பையா உரை

இருப்பதைப் பகிர்ந்து உண்டு, பல உயிர்களையும் பாதுகாப்பது, நூல் எழுதியவர்கள் தொகுத்த அறங்களுள் எல்லாம் முதன்மையான அறமாகும்.

மணக்குடவர் உரை

பல்லுயிர்களுக்குப் பகுத்துண்டு அவற்றைப் பாதுகாத்தல், நூலுடையார் திரட்டின அறங்களெல்லாவற்றினும் தலையான அறம். இஃது எல்லாச் சமயத்தார்க்கும் நன்றென்றது.

குறள் 323 :

ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.

மு.வரதராசனார் உரை

இணையில்லாத ஓர் அறமாகக் கொல்லாமை நல்லது, அதற்கு அடுத்த நிலையில் கூறத்தக்கதாகப் பொய்யாமை நல்லது.

மு.கருணாநிதி உரை

அறங்களின் வரிசையில் முதலில் கொல்லாமையும் அதற்கடுத்துப் பொய்யாமையும் இடம் பெறுகின்றன.

சாலமன் பாப்பையா உரை

உயிர்களைக் கொல்லாத செயல், அறங்களுள் எல்லாம் சிறந்த தனி அறமாம். அதற்கு அடுத்துச் சிறந்த அறம் பொய்யாமை.

மணக்குடவர் உரை

இணையின்றாக நல்லது கொல்லாமை; அதன்பின்பே அணைய, பொய்யாமையும் நன்று. இது சொல்லிய அறத்தினும் பொய்யாமை நன்று: அதினும் நன்று கொல்லாமை யென்றது.

குறள் 324 :

நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி.

மு.வரதராசனார் உரை

நல்ல வழி என்று அறநூல்களால் சொல்லப்படுவது எது என்றால், எந்த உயிரையும் கொல்லாத அறத்தைப் போற்றும் நெறியாகும்.

மு.கருணாநிதி உரை

எந்த உயிரையும் கொல்லக் கூடாது எனும் நெறி காப்பதுதான் நல்லற வழி எனப்படும்.

சாலமன் பாப்பையா உரை

நல்ல வழி எது என்றால், எந்த உயிரையும் கொலை செய்யாமல் அறம் காக்கும் வழிதான்.

மணக்குடவர் உரை

நல்ல வழியென்று சொல்லப்படுவது யாதெனின், அது யாதொருயிரையுங் கொல்லாமையைச் சிந்திக்கும் வழி. இது நன்னெறியாவது கொல்லாமை யென்றது.

குறள் 325 :

நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை.

மு.வரதராசனார் உரை

வாழ்க்கையின் தன்மையைக்கண்டு அஞ்சித் துறந்தவர்கள் எல்லாரிலும், கொலைசெய்வதற்க்கு அஞ்சிக் கொல்லாத அறத்தைப் போற்றுகின்றவன் உயர்ந்தவன்.

மு.கருணாநிதி உரை

உலகியல் நிலையை வெறுத்துத் துறவு பூண்டவர் எல்லோரையும்விடக் கொலையை வெறுத்துக் கொல்லாமையைக் கடைப்பிடிப்பவரே சிறந்தவராவார்.

சாலமன் பாப்பையா உரை

வாழ்க்கை நிலைக்கு அஞ்சி மனத் துறவு கொண்டவருள் எல்லாம் கொலை செய்வதால் வரும் பாவத்திற்கு அஞ்சி வாழ்பவன் உயர்ந்தவன் ஆவான்.

மணக்குடவர் உரை

மனைவாழ்க்கையில் நிற்றலை யஞ்சித் துறந்தவரெல்லாரினும் கொலையை யஞ்சிக் கொல்லாமையைச் சிந்திப்பான் தலைமையுடையவன்; இல்வாழ்க்கையில் நிற்பினும். இஃது எல்லாத் துறவினும் நன்றென்றது.

குறள் 326 :

கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணுங் கூற்று.

மு.வரதராசனார் உரை

கொல்லாத அறத்தை மேற்கொண்டு நடக்கின்றவனுடைய வாழ்நாளின் மேல், உயிரைக்கொண்டு செல்லும் கூற்றுவனும் செல்லமாட்டான்.

மு.கருணாநிதி உரை

கொலை செய்யாமையை வாழ்வில் அறநெறியாகக் கொண்டவரின் பெருமையை வியந்து, சாவுகூட அவர் உயிரைப் பறிக்கத் தயங்கி நிற்கும்.

சாலமன் பாப்பையா உரை

கொலை செய்யாமல் வாழ்வதைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்பவனின் வாழ்நாளின்மேல் உயிர் உண்ணும் கூற்று குறுக்கிடாது.

மணக்குடவர் உரை

கொல்லாமையை விரதமாகக் கொண்டு ஒழுகுமவன் வாழ்நாளின் மேல், உயிருண்ணுங் கூற்றுச் செல்லாது. பிறவாமை யுண்டாமாதலால் கூற்றுச் செல்லாது என்றார். இது கொல்லாமையின் பயன் கூறிற்று.

குறள் 327 :

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை.

மு.வரதராசனார் உரை

தன் உயிர் உடம்பிலிருந்து நீங்கிச் செல்வதாக இருந்தாலும், அதைத் தடுப்பதற்காகத் தான் வேறோர் உயிரை நீக்கும் செயலைச் செய்யக்கூடாது.

மு.கருணாநிதி உரை

தன்னுயிரே போவதாக இருப்பினும்கூட அதற்காக இன்னொரு உயிரைப் போக்கும் செயலில் ஈடுபடக்கூடாது.

சாலமன் பாப்பையா உரை

தன் உயிரையே இழக்க நேர்ந்தாலும், பிற இன்னுயிரை அதன் உடம்பிலிருந்து போக்கும் செயலைச் செய்யவேண்டா.

மணக்குடவர் உரை

தன்னுயிர் நீங்கினும் செய்யாதொழிக. தான் பிறிதொன்றி னுடைய இனிய வுயிரை விடுக்குந் தொழிலினை. உயிர்க்குக் கேடுவருங் காலத்து நோய்க்கு மருந்தாகக் கொல்லுதல் குற்றமன்று என்பார்க்கு இது கூறப்பட்டது.

குறள் 328 :

நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கங் கடை.

மு.வரதராசனார் உரை

கொலையால் நன்மையாக விளையும் ஆக்கம் பெரிதாக இருந்தாலும், சான்றோர்க்குக் கொலையால் வரும் ஆக்கம் மிக இழிவானதாகும்.

மு.கருணாநிதி உரை

பெரிதாக நன்மை தரக்கூடிய அளவுக்கு ஒரு கொலை பயன்படக் கூடுமெனினும், நல்ல பண்புடைய மக்கள், அந்த நன்மையை இழிவானதாகவே கருதுவார்கள்.

சாலமன் பாப்பையா உரை

வேள்விகளில் கொலை செய்வதால் நன்மை வரும், செல்வம் பெருகும் என்றாலும், பிற உயிரைக் கொல்வதால் வரும் செல்வத்தைச் சான்றோர் இழிவானதாகவே எண்ணுவர்.

மணக்குடவர் உரை

நன்மையாகும் ஆக்கம் பெரியதேயாயினும் ஓருயிரைக் கொன்று ஆகின்ற ஆக்கம் உயர்ந்தோர்க்கு ஆகாது. இது பெரியோர் வீடுபேற்றை விரும்பிக் கன்மத்தை விடுத்தலால் வேள்வியின் வருங் கொலையும் ஆகாதென்றது.

குறள் 329 :

கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து.

மு.வரதராசனார் உரை

கொலைத்தொழிலினராகிய மக்கள் அதன் இழிவை ஆராய்ந்தவரிடத்தில் புலைத்தொழிலுடையவராய்த் தாழ்ந்து தோன்றுவர்.

மு.கருணாநிதி உரை

பகுத்தறிவை இழந்து செயல்படும் கொலைகாரர்களைச் சான்றோர் உள்ளம், இழிதகைப் பிறவிகளாகவே கருதும்.

சாலமன் பாப்பையா உரை

கொலை செய்வதைத் தொழிலாகக் கொண்டு வாழும் மக்கள், அத்தொழிலின் தீமையை அறியாதவர் என்றாலும், அறிந்த பெரியோர் மனத்துள் அவர்கள் கீழான செயல் செய்பவராய் எண்ணப்படுவார்.

மணக்குடவர் உரை

கொலைத் தொழிலினை யுடையராகிய மாக்கள் பொல்லாமையை யாராய்வாரிடத்துத் தொழிற்புலையராகுவர். இவரை உலகத்தர் கன்மசண்டாளரென்று சொல்லுவார்.

குறள் 330 :

உயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்.

மு.வரதராசனார் உரை

நோய் மிகுந்த உடம்புடன் வறுமையான தீய வாழ்க்கை உடையவர், முன்பு கொலை பல செய்து உயிர்களை உடம்புகளில் இருந்து நீக்கினவர் என்று அறிஞர் கூறுவர்.

மு.கருணாநிதி உரை

வறுமையும் நோயும் மிகுந்த தீய வாழ்க்கையில் உழல்வோர், ஏற்கனவே கொலைகள் பல செய்தவராக இருப்பர் என்று முன்னோர் கூறுவர்.

சாலமன் பாப்பையா உரை

நோய் நிறைந்த உடம்புடன், வறுமையால், இழிந்த வாழ்க்கையை இன்று வாழ்பவர்கள், முற்பிறப்பில் பிற உயிர்களை உடம்பிலிருந்து நீக்கிக் கொலை செய்தவர் என்று அறிந்தோர் கூறுவர்.

மணக்குடவர் உரை

முற்பிறப்பின்கண் உயிரை யுடம்பினின்று நீக்கினார் இவரென்று பெரியோர் கூறுவர்; குற்றமான வுடம்பினையும் ஊணுஞ் செல்லாத தீய மனை வாழ்க்கையினையும் உடையாரை. இது கொலையினால் வருங் குற்றங் கூறிற்று.

திருக்குறள் அதிகாரம் 34 – நிலையாமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *