திருக்குறள் அதிகாரம் 5 – இல்வாழ்க்கை

குறள் 41 :

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்

நல்லாற்றின் நின்ற துணை.

மு.வரதராசனார் உரை

இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறவன் அறத்தின் இயல்பை உடைய மூவருக்கும் நல்வழியில் நிலை பெற்ற துணையாவான்.

கலைஞர் மு.கருணாநிதி உரை

பெற்றோர், வாழ்க்கைத் துணை, குழந்தைகள் என இயற்கையாக அமைந்திடும் மூவர்க்கும் துணையாக இருப்பது இல்லறம் நடத்துவோர் கடமையாகும்.

சாலமன் பாப்பையா உரை

மனைவியோடு வாழ்பவன்தான் பிள்ளைகள், பெற்றோர், உறவினர் என்னும் மூவர்க்கும் நல்ல வழியில் உதவுபவன்.

மணக்குடவர் உரை

இல்வாழ்வானென்று சொல்லப்படுபவன் இயல்புடைய மூவர்க்கும் நல்ல வழியின்கண்ணே நின்றவொருதுணை. (தவசி, பிரமச்சாரி, துறவியாகிய மூவர்) என்றது தானமாகிய வில்லறஞ் செய்யுமவன் தவத்தின்பாற்பட்ட விரதங் கொண்டொழுகாநின்ற பிரமச்சாரிக்கும், தவமேற் கொண்டொழுகாநின்ற வானப்பிரஸ்தன் ஸந்நியாசிகளுக்கும், தத்தம் நிலைகுலையாம லுணவு முதலாயின கொடுத்துப் பாதுகாத்தலின் அவர்க்கு நல்லுலகின்கண் செல்லும் நெறியிலே நின்ற வொரு துணையென்று கூறியவாறாயிற்று. துணையென்பது இடையூறு வாராமலுய்த்து விடுவாரை.

குறள் 42 :

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்

இல்வாழ்வான் என்பான் துணை.

மு.வரதராசனார் உரை

துறந்தவர்கும் வறியவர்க்கும் தன்னிடத்தே இறந்தவர்க்கும் இல்லறம் மேற்கொண்டு வாழ்கிறவன் துணையாவான்.

கலைஞர் மு.கருணாநிதி உரை

பற்றற்ற துறவிகட்கும், பசியால் வாடுவோர்க்கும், பாதுகாப்பற்றவர்க்கும் இல்லற வாழ்வு நடத்துவோர் துணையாக இருத்தல் வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை

மனைவியோடு வாழ்பவன்தான் துறவியர், வறுமைப்பட்டவர், இறந்து போனவர் என்பவர்க்கும் உதவுபவன்.

மணக்குடவர் உரை

வருணத்தினையும் நாமத்தினையுந் துறந்தார்க்கும், துறவாது நல்குரவாளரா யுண்ணப் பெறாதார்க்கும், பிறராய் வந்து செத்தார்க்கும் இல்வாழ்வானென்று சொல்லப்படுமவன் துணை யாவான். (வறுமையாளர், கைவிடப்பட்டவர், திக்கற்றவர்). மேற்கூறிய மூவரும் வருணநாமங்களைத் துறவாமையாலீண்டுத் துறந்தாரென்று கூறினார். செத்தார்க் கிவன் செய்ய வேண்டிய புறங்காட்டுய்த்தல் முதலாயின. இது மேற்கூறியவர்க்கேயன்றி இவர்க்கும் துணையென்று கூறிற்று.

குறள் 43 :

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு

ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.

மு.வரதராசனார் உரை

தென்புலத்தார், தெய்வம் விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐவகையிடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த கடமையாகும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை

வாழ்ந்து மறைந்தோரை நினைவுகூர்தல், வாழ்வாங்கு வாழ்வோரைப் போற்றுதல், விருந்தோம்பல், சுற்றம் பேணல் ஆகிய கடமைகளை நிறைவேற்றத் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளல் எனப்படும் ஐவகை அறநெறிகளும் இல்வாழ்வுக்குரியனவாம்.

சாலமன் பாப்பையா உரை

இறந்து தென்திசையில் வாழ்பவர், தேவர்கள், விருந்தினர், சுற்றத்தார், தான் என்னும் ஐந்து பேருக்கும் செய்ய வேண்டிய அறத்தைத் தவறாமல் செய்வது சிறப்பு.

மணக்குடவர் உரை

பிதிரர், தேவர், புதியராய் வந்தார், சுற்றத்தார், தானென்னு மைந்திடமாகிய நெறியைக் கெடாம லோம்புதல் தலையான இல்வாழ்க்கை. தனக்குண்டான பொருளை ஆறு கூறாக்கி ஒருகூறு அரசற்குக் கொடுத்து ஒழிந்தவைந்து கூறினுந் தான் கொள்வது ஒரு கூறென்றற்குத் தன்னையு மெண்ணினார். இது தலையான இல்வாழ்க்கை வாழும் வாழ்வு கூறிற்று: என்னை? இவையெல்லா மொருங்கு செய்யப்படுதலின் மேற்கூறிய அறுவரும் விருந்தினது வகையினரென்று கொள்ளப்படுவர்.

குறள் 44 :

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை

வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.

மு.வரதராசனார் உரை

பொருள் சேர்க்கும் பொது பழிக்கு அஞ்சிச் சேர்த்து, செலவு செய்யும் போது பகுந்து உண்பதை மேற்க்கொண்டால், அவ்வாழ்கையின் ஒழுங்கு எப்போதும் குறைவதில்லை.

கலைஞர் மு.கருணாநிதி உரை

பழிக்கு அஞ்சாமல் சேர்த்த பொருள் கணக்கின்றி இருப்பினும் அதைவிட, பழிக்கு அஞ்சிச் சேர்த்த பொருளைப் பகுத்து உண்ணும் பண்பிலேதான் வாழ்க்கையின் ஒழுக்கமே இருக்கிறது.

சாலமன் பாப்பையா உரை

பொருள் தேடும்போது பாவத்திற்குப் பயந்து தேடிய பொருளை உறவோடு பகிர்ந்து உண்ணும் இல்வாழ்பவனின் பரம்பரை ஒருகாலும் அழிவதில்லை.

மணக்குடவர் உரை

இல்வாழ்க்கையாகிய நிலை, பழியையுமஞ்சி பகுத்துண்டலையுமுடைத்தாயின், தனதொழுங்கு, இடையறுதல் எக்காலத்தினுமில்லை. மேல் பகுக்குமாறு கூறினார். பகுக்குங்காற் பழியோடு வாராத பொருளைப் பகுக்க வேண்டுமென்று கூறினார்.

குறள் 45 :

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

மு.வரதராசனார் உரை

இல்வாழ்க்கையின் அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழக்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை

இல்வாழ்க்கை பண்புடையதாகவும் பயனுடையதாகவும் விளங்குவதற்கு அன்பான உள்ளமும் அதையொட்டிய நல்ல செயல்களும் தேவை.

சாலமன் பாப்பையா உரை

மனைவி பிள்ளைகளிடத்தில் அன்பும், தேடிய பொருளை நட்பு சுற்றங்களுடன் பகிர்ந்து கொள்ளும் அறமும் இருந்தால் இல்வாழ்க்கையின் பண்பும் அதுவே; பயனும் அதுவே.

மணக்குடவர் உரை

இல்வாழ்க்கையாகிய நிலை யாவர்மட்டும் அன்பு செய்தலையும் அறஞ்செய்தலையும் உடைத்தாயின், அதற்குக் குண மாவதும் பயனாவதும் அவ்விரண்டினையு முடைமை தானே. பயன் வேறு வேண்டாம் :தனக்கும் பிறர்க்கும் உண்டான முகமலர்ச்சி தானே யமையுமென்பது. இது பழியோடு வாராத வுணவை நுகர வேற்பார் மாட்டு அன்புசெய்யவேண்டுமென்பதும் சீலனாய்க் கொடுக்க வேண்டுமென்பதும் கூறிற்று.

குறள் 46 :

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்

போஒய்ப் பெறுவ தெவன்.

மு.வரதராசனார் உரை

ஒருவன் அறநெறியில் இல்வாழ்க்கையைச் செலுத்தி வாழ்வானானால், அத்தகையவன் வேறு நெறியில் சென்று பெறத்தக்கது என்ன?.

கலைஞர் மு.கருணாநிதி உரை

அறநெறியில் இல்வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் பெற்றிடும் பயனை, வேறு நெறியில் சென்று பெற்றிட இயலுமோ? இயலாது.

சாலமன் பாப்பையா உரை

மனைவியோடு கூடிய வாழ்க்கையை அதற்குரிய இயல்புகளோடு அறவழிகளில் நடத்தினால் இல்லறத்திற்கு மாறான பிற வழிகளில் போய்ப் பெறும் பயன்தான் என்ன?.

மணக்குடவர் உரை

இல்வாழ்க்கையாகிய நிலையை அறநெறியிலே செலுத்தவல்லவனாயின் புறநெறியாகிய தவத்திற் போய்ப் பெறுவது யாதோ?. மேல் சீலனாய்க் கொடுக்க வேண்டுமென்றார் அவ்வாறு செய்யின் தவப்பயனும் இதுதானே தருமென்றார்.

குறள் 47 :

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்

முயல்வாருள் எல்லாம் தலை.

மு.வரதராசனார் உரை

அறத்தின் இயல்பொடு இல்வாழ்கை வாழ்கிறவன்- வாழ முயல்கிறவன் பல திறத்தாரிலும் மேம்பட்டு விளங்குகிறவன் ஆவான்.

கலைஞர் மு.கருணாநிதி உரை

நல்வாழ்வுக்கான முயற்சிகளை மேற்கொள்வோரில் தலையானவராகத் திகழ்பவர், இல்வாழ்வின் இலக்கணமுணர்ந்து அதற்கேற்ப வாழ்பவர்தான்.

சாலமன் பாப்பையா உரை

கடவுளை அறியவும், அடையவும் முயல்பவருள் மனைவியோடு கூடிய வாழ்க்கையை அதற்குரிய இயல்புகளோடு வாழ்பவனே முதன்மையானவன்.

மணக்குடவர் உரை

நெறியினானே யில்வாழ்க்கை வாழ்பவனென்பான், முயல்வாரெல்லாரினுந் தலையாவான். முயறல்- பொருட்கு முயறல்.

குறள் 48 :

ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை

நோற்பாரின் நோன்மை உடைத்து.

மு.வரதராசனார் உரை

மற்றவரை அறநெறியில் ஒழுகச்செய்து தானும்அறம் தவறாத இல்வாழ்க்கை , தவம் செய்வாரைவிட மிகச்சிறந்த வல்லமை உடைய வாழ்க்கையாகும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை

தானும் அறவழியில் நடந்து, பிறரையும் அவ்வழியில் நடக்கச் செய்திடுவோரின் இல்வாழ்க்கை, துறவிகள் கடைப்பிடிக்கும் நோன்பைவிடப் பெருமையுடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை

மற்றவர்களை அவர்களின் வழியில் வாழச்செய்து, தானும் அறத்திலிருந்து விலகாமல், மனைவியுடன் வாழும் வாழ்க்கை, துறவறத்தார் காட்டும் பொறுமையிலும் வலிமை மிக்கது.

மணக்குடவர் உரை

பிறரையும் நன்னெறியிலே ஒழுகப்பண்ணித் தானும் அறத்தின் பாலொழுகும் இல்வாழ்க்கை தவஞ்செய்வாரினும் வலியுடைத்து. ஒழுகப் பண்ணலாவது அவர்க்கு வேண்டுவன அமைத்தல். இது தவத்தினும் வலியுடைத்தென்றது.

குறள் 49 :

அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்

பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.

மு.வரதராசனார் உரை

அறம் என்று சிறப்பித்து சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே ஆகும். அதுவும் மற்றவன் பழிக்கும் குற்றம் இல்லாமல் விளங்கினால் மேலும் நன்மையாகும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை

பழிப்புக்கு இடமில்லாத இல்வாழ்க்கை இல்லறம் எனப் போற்றப்படும்.

சாலமன் பாப்பையா உரை

அறம் என்று சிறப்பிக்கப்பட்டது, மனைவியுடன் வாழும் வாழ்க்கையே; துறவற வாழ்க்கையும், பிறரால் பழிக்கப்படாமல் இருக்குமானால் நல்லது.

மணக்குடவர் உரை

அறனென்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே. அதுவும் நன்றாவது பிறனொருவனாற் பழிக்கப்படுவதொன்றை யுடைத்தல்லவாயின். பழிக்கப்படுவதென்றது இழிகுலத்தாளாகிய மனையாளை. இனி வாழ்க்கைத் துணைநலங் கூறுகின்றாராகலின், இது கூறப்பட்டது.

குறள் 50 :

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்.

மு.வரதராசனார் உரை

உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான்.

கலைஞர் மு.கருணாநிதி உரை

தெய்வத்துக்கென எத்தனையோ அருங்குணங்கள் கூறப்படுகின்றன. உலகில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன் வானில் வாழ்வதாகச் சொல்லப்படும் தெய்வத்துக்கு இணையாக வைத்து மதிக்கப்படுவான்.

சாலமன் பாப்பையா உரை

மனைவியுடன் வாழும் வாழ்க்கையைச் சிறப்பாக வாழ்பவன், பூமியில் வாழ்ந்தாலும், வானத்துள் வாழும் தேவருள் ஒருவனாகவே மதிக்கப்படுவான்.

மணக்குடவர் உரை

இல்வாழ்க்கை வாழும்படியிலே வாழுமவன் உலகத்திலே தேவருள் ஒருவனாக மதிக்கப்படுவன். இவன் எல்லாராலும் நன்கு மதிக்கப்படுவ னென்றவாறு.

திருக்குறள் அதிகாரம் 6 – வாழ்க்கைத் துணைநலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *