வைகாசி விசாகத்தில் இவ்வளவு சிறப்புகளா?

வைகாசியானது தமிழ் வருடத்தின் இரண்டாவது மாதமாகும். இளவேனிற் எனப்படும் வசந்த காலத்தில் இம்மாதம் வருவதால் கோவில்களில் பிரம்மோற்சவங்கள், வசந்த விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. அவற்றுள் மிகவும் சிறப்பானது வைகாசி விசாகமாகும்.

விசாக நட்சத்திரம் என்பது ஆறு நட்சத்திரங்களின் கூட்டம் ஆகும். விசாக நட்சத்திரத்தில் பிறந்ததால் முருகப் பெருமானை விசாகன் என்றும் அழைக்கின்றனர். வி என்றால் பட்சி (மயில்) என்றும், சாகன் என்றால் பயணம் செய்பவர் என்றும் அதாவது பட்சி (மயில்) மீது பயணம் செய்பவர் என பொருள் கூறப்படுகிறது.  முருகன் அவதரித்த நாள் பௌர்ணமியுடன் கூடிய வைகாசி விசாகம் ஆகும்.

வைகாசி விசாக வழிபாட்டு முறை

வைகாசி விசாக நாளில் அதிகாலை எழுந்து நீராடி முருகா எனக்கூறி விபூதி அணிந்து கொண்டு முருகன் படத்தின் முன்நின்று முதலில் விநாயகர் அகவல் பாடி கணபதியை வழிபட வேண்டும்.

பின் முருகனுக்குரிய ஸ்லோகங்கள், கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், கந்தர் அனுபூதி, சுப்ரமணிய ஷாடச நாமாக்கள் கூறி அர்ச்சித்து தூபதீபம் காட்டி நைவேத்யம் செய்து வழிபட்டால் முருகனின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும்.

வைகாசி விசாகத்தன்று கோவிலுக்குச் சென்று வழிபட்டால் வீட்டில் உள்ள குழந்தைகள் அறிவில் சிறந்து விளங்குவார்கள். புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும்.

வைகாசி விசாகத்தின் சிறப்புகள்

வைகாசி விசாகம் முருகனின் அவதார நாளாகக் கொண்டாடப்படுகிறது.

இளவேனிற் காலத்தில் இவ்விழா நடைபெறுவதால் திருச்செந்தூரில் கருவறையில் தண்ணீர் கட்டி நிற்கும்படி செய்து இறைவனுக்குச் சிறுபருப்புப் பாயாசம், நீர்மோர், அப்பம் முதலியவற்றைப் படைத்து உஷ்ணசாந்தி உற்சவம் (வெப்பம் தணிக்கும் விழா) என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

இங்கு வசந்த மண்டபத்தில் உள்ள நீர்த் தொட்டியில் ஆறு மீன் பொம்மைகளை நீரில் இடப்பட்டு, குமரன் வாயில் இருந்து சிந்திய பாலினை உண்டதால் சாபம் நீங்கப் பெற்ற பாரச முனி குமாரர்களை நினைவுபடுத்தும் விதமாக ஆறு முனிவர்களின் உருவங்களையும் வைத்து சாப விமோசன நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

எமதர்ம ராஜனின் அவதார தினமாகவும் வைகாசி விசாகம் கருதப்படுகிறது. எனவே, வைகாசி விசாகத்தன்று விரதம் மேற்கொண்டு வழிபாடு செய்வதால் நோய் நீங்கி நீடித்த ஆயுள் கிடைக்கும்.

திருமழப்பாடி என்னும் ஊரில் சிவபெருமான் மழு ஏந்தி திருநடனம் புரிந்ததும், வடலூரில் இராமலிங்க அடிகளார் சத்யஞான சபையை நிறுவியதும் இந்நாளில் தான்.

மகாபாரதத்தின் வில் வீரனான அர்ச்சுனன் பாசுபதா ஆயுதத்தை சிவபெருமானிடமிருந்து பெற்ற நாள் வைகாசி விசாகமாகும். பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் பிறந்த தினமும் இந்நாளே.

சோழ சக்கரவர்த்தியான இராஜராஜ சோழனின் சரித்திரத்தை நாடகமாக ஆண்டுதோறும் வைகாசி விசாகத் திருநாளில் நடத்திய நாடகக் கலைஞர்களுக்கு ஊதியமாக நெல் வழங்கிட ஆணையை இராஜேந்திரச் சோழன் பிறப்பித்து இருந்ததாக தஞ்சை பெரிய கோவிலில் உள்ள கல்வெட்டு செய்தி ஒன்று குறிப்பிடுகிறது.

பெரும்பான்மையான கோவில்களில் மகா உற்சவம் நடத்தப்படுகிறது. வைகாசி விசாகத்தன்று பிறப்பவர்கள் அறிவில் சிறந்தவர்களாக இருப்பார்கள் என்றும் கருதப்படுகிறது.

வால்மீகி இராமாயணத்தில், விஸ்வாமித்திரர் இராமலட்சுமணர்களுக்கு குமரனின் பிறப்பு மற்றும் பெருமைகளைக் கூறுவார். மேலும், இதனை கூறுபவர் மற்றும் கேட்பவர்களுக்கு பாவங்கள் நீங்குவதாக சொல்லுவார்கள்.

முருகன் அவதரித்த வைகாசி விசாக தினத்தில் பிறப்பவர்கள் அறிவுக்கூர்மையுடன், பல புகழ்களை அடைவார்கள் என கருதப்படுகிறது.

இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த வைகாசி விசாகத்தில் நாமும் முருகப் பெருமானை வழிபட்டு வாழ்வை வசந்தமாக்கி கொள்வோம்.

இதையும் படிக்கலாம் : முருகன் வித்தியாசமான தோற்றத்தில் காட்சி தரும் தலங்கள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *