கர்ம வினை தீர்க்கும் கால பைரவர்

சிவபெருமான் எடுத்த 64 அவதாரங்களில் மிகவும் சக்தி வாய்ந்ததாக போற்றப்படுவது பைரவ அம்சம். ஸ்ரீ மஹா கால பைரவர் காக்கும் கடவும். அவரை நினைத்து வணங்கும் பக்தர்களுக்கும் சகல விதமான வெற்றிக்கும் வாழ்க்கைக்கும் வழியமைத்து கொடுத்து ஆசிர்வதிப்பார்.

ஒவ்வொரு சிவாலயங்களிலும் உள்ள ஈசான்ய மூலையில் வடகிழக்கு திசையில் நாய் வாகனத்துடன் நீலநிற மேனியோடு காட்சி தருபவர் கால பைரவர்.

தினமும் காலையில் ஆலயம் திறக்கும் பொழுதும் பிறகு இரவு நடையை சாத்தும் பொழுதும் கால பைரவருக்கு தனி பூஜை நடத்த வேண்டும் என்பது ஆலயங்களின் நித்ய பூஜா விதிகளில் ஒன்று.

நம் கர்மவினைகளைப் போக்கும் கால பைரவருக்கு பிரதி மாதம் பௌர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமி விசேஷமான நாளாகும். அன்று அனைத்து ஆலயங்களிலும் உள்ள பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

பஞ்ச தீபம்

இந்த விசேஷமான நாளில் பஞ்ச தீபம் எனும் சிறப்பு வாய்ந்த இலுப்பை எண்ணெய் தீபம், விளக்கு எண்ணெய் தீபம், தேங்காய் எண்ணெய் தீபம், நல்லெண்ணெய் தீபம் மற்றும் பசுநெய் தீபம் ஆகிய தீபங்களை ஏற்றி வழிபட்டால் காலத்தால் தீர்க்கமுடியாத தொல்லைகள் மற்றும் கஷ்டங்கள் தீரும்.

பஞ்ச தீபம் ஏற்றும் பொழுது ஒரு தீபத்தின் நெருப்பைக்கொண்டு மற்ற தீபத்தை ஏற்றாமல் தனித் தனியாக ஏற்ற வேண்டும். தனித் தனி அகல் விளக்குகளில் ஏற்றி வழிபடுவதால் நினைத்த காரியம் வெற்றி பெரும்.

இவ்வாறு ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் பைரவரை சிவப்பு நிற அரளிப்புஷ்பத்தால் பூஜித்து வந்தால் நல்ல குழந்தைச் செல்வம் கிடைக்கும்.

மேலும் பிரதி மாதம் வருகின்ற அஷ்டமி திதி, ஆயில்யம், சுவாதி, மிருகசீரிஷம் ஆகிய நட்சத்திரங்களைக் கொண்ட தினத்தில் பைரவரை வழிபட்டால் தொழிலில் லாபம், பதவி உயர்வு மற்றும் உத்தியோகத்தில் முன்னேற்றமும் கிடைக்கும்.

பைரவருக்கு உகந்த பஞ்ச தீபத்தை தேய்பிறை அஷ்டமியில் ஏற்றி வழிபடும் பொழுது நல்லருள் கிடைக்கும். எண்ணிய செயல்கள் யாவும் நிறைவேறும்.

தை மாதத்தில் வருகின்ற முதல் வார செவ்வாய்கிழமை தொடங்கி பிரதி வாரம் செவ்வாய்க்கிழமைகளில் பைரவரை வழிபட்டால் எதிரிகளின் பலம் குறைந்து அவர்களது தீய எண்ணங்கள் அழிந்து விடும். தொடர்ந்து பைரவ அஷ்டகம் பாராயணம் செய்தால் கடன் தொல்லைகள் தீரும்.

யம பயம் அகலும். வாழ்க்கையில் தரித்திரம் அண்டாமல் செல்வச் செழிப்பு உண்டாகும். சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.

திருமணத் தடை உள்ளவர்கள் தேய்பிறை அஷ்டமி திதி தினத்தன்று பைரவருக்கு செவ்வாடை அணிவித்து, நெய் விளக்கு ஏற்றி, வடமாலை சாத்தி மேலும் செந்நிற மலர்கள் கொண்டு பூஜைகள் செய்தால் திருமணத் தடைகள் நீங்கி விரைவில் திருமணம் கைகூடும்.

வாரம் முழுவதும் பைரவரை வழிபடுவதால் ஏற்படும் பலன்கள்

பைரவருக்கு செய்யும் ஒவ்வொரு வழிபாட்டிற்கும் வெவ்வேறு தனித்தன்மை வாய்ந்த பலன்கள் உண்டு. பைரவரை வணங்கும் பொழுது வாரத்தின் ஒவ்வொரு நாட்களும் ஒவ்வொரு விதமான பலன்கள் கிடைக்கும்.

ஞாயிற்றுக்கிழமை

பிரதி ஞாயிற்றுக்கிழமை அன்று ராகு காலத்தில் பைரவருக்கு வடை மாலை சாற்றி, ருத்ராபிஷேகம் செய்து வழிபட்டால் திருமணத் தடை நீங்கும். கடன் தொல்லைகள் தீரும். மேலும் பைரவருக்கு புனுகு சாத்தி, முந்திரி பருப்பு மாலை சாற்றி வழிபட்டால் நலன் பெருகும்.

திங்கட்கிழமை

திங்கட்கிழமை அன்று வில்வம் கொண்டு பைரவரை அர்ச்சித்தால் சிவனருள் கிடைக்கும். மேலும் சங்கடஹர சதுர்த்தி அன்று பைரவருக்கு பன்னீர் அபிஷேகம் செய்து, சந்தன காப்பு மற்றும் புனுகு சாத்தினால் கண் சம்மந்தப்பட்ட நோய்கள் விலகித் தெளிவான பார்வை கிடைக்கும்.

செவ்வாய்க்கிழமை

செவ்வாய்க்கிழமை அன்று மாலை நேரத்தில் மிளகு தீபம் ஏற்றி வந்தால் நாம் இழந்த பொருளைத் திரும்பக் கிடைக்கும்படி அருள் புரிவார் பைரவர்.

புதன்கிழமை

பூமி லாபம் கிடைக்க பிரதி புதன்கிழமை பைரவருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

வியாழக்கிழமை

பைரவருக்கு பிரதி வியாழக்கிழமை அன்று மனமார விளக்கேற்றி வழிபட்டால் ஏவல், பில்லி மற்றும் சூனியம் விலகி மன நிம்மதி கிடைக்கும்.

வெள்ளிக்கிழமை

வெள்ளிக்கிழமை அன்று மாலை நேரங்களில் வில்வ இலைகள் கொண்டு பைரவருக்கு அர்ச்சனை செய்து வந்தால் செல்வம் பெருகும்.சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.

சனிக்கிழமை

சனி பகவானுடைய குரு பைரவர். ஆகவே சனிக்கிழமைகளில் இவரை பிரத்யேகமாக வழிபடுவதால் அஷ்டமச்சனி, ஏழரைச்சனி, அர்த்தாஷ்டமச்சனி ஆகியவற்றின் தாக்கத்திலிருந்து விடுபட்டு  நன்மைகளை அடையலாம்.

இவ்வாறு வாரத்தின் ஏழு நாட்களும் நாம் செய்யும் கால பைரவரின் வழிபாடு மற்றும் பைரவ அஷ்டக பாராயணம் நமக்கு நினைத்த காரியங்களை நிறைவேற்றி திருமணத் தடைகளை நீக்கி சகல நன்மைகளைத் தரும்.

இந்த கால பைரவரை அஷ்டமி திதியிலும், திருவாதிரை நட்சத்திரத்திலும் ஞாயிறு மற்றும் வியாழக் கிழமை உச்சி காலத்திலும், ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களின் ராகு காலத்திலும் வணங்குவது நல்ல பலனைத் தரும்.

நவக்கிரகங்களை தன்னுடைய சரீரத்தின் சிரம் முதல் பாதம் வரை உள்ளடக்கியவர் கால பைரவர். எனவே இவருக்கு செய்யப்படும் அனைத்து பூஜைகளும் நவக்கிர கங்களின் தோஷங்களை நிவர்த்தியாக்கும் பூஜைக்கு நிகரானதாகும்.

ராகுகால நேரத்தில் பைரவருக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொண்டு, அவரை வணங்கினால் பல நன்மைகள் கிடைக்கும். வர வேண்டிய பணம் வந்து சேரும். தர வேண்டிய பணத்தை திருப்பித் தர வேண்டிய சூழ்நிலை உருவாகும். சனியின் தாக்கம் தீரும். கடுமையான கர்மவினைகள் தீர்ந்து விடும். திருமண தடைகள் விலகும். புத்திர பாக்கியம் கிட்டும். பைரவரை பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் தீரும்.

12 ராசிகளும், 27 நட்சத்திரங்களும் அவருள் அடக்கம் என்பதால், இவரை வணங்கினால் உயர்வான வாழ்வினைப் பெறலாம். பைரவரை வணங்கிய எவரும் வாழ்வில் துன்பத்தை அடைவதே இல்லை என்பது ஐதீகம்.

இதையும் படிக்கலாம் : பைரவர் சிவனின் உருவம்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *