கரூர் மாவட்டம் (Karur district) 

karur mavattam

கரூர் மாவட்டம் தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். அமராவதி மற்றும் காவிரி ஆகிய இரண்டு நதிகள் பாய்ந்தோடும் மாவட்டம் ஆகும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த கரூர் வட்டம் 1910 ஆம் ஆண்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இணைக்கப்பட்டது. கரூர் மாவட்டம், திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து 25.07.1996 நாள் பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாகச் செயல்பட்டு வருகிறது.

நில அடிப்படையில் தமிழகத்தின் மையமாக விளங்கும் திருச்சி மாவட்டம் 1995, செப்டம்பர் 30 ஆம் தேதி திருச்சி, கரூர், பெரம்பலூர் என மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, கரூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது. கரூர், குளித்தலை மற்றும் மணப்பாறை தாலுகாக்களை இணைத்து கரூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது. மணப்பாறை தாலுகா திருச்சியுடன் இணைக்கப்பட்டு, முசிறி தாலுகாவை கரூர் மாவட்டத்துடன் இணைத்தனர். பின்னர் முசிறி தாலுகாவும் திருச்சி மாவட்டத்துடன் இணைந்தது.

நாடு இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
தலைநகரம் கரூர்
பகுதி கொங்கு நாடு
பரப்பளவு 2904 ச.கி.மீ
மக்கள் தொகை 10,64,493 (2011)
மக்கள் நெருக்கம் 1 ச.கீ.மீ – க்கு 367
அஞ்சல் குறியீடு 639xxx,621xxx,638xxx
தொலைபேசிக் குறியீடு +91 (0) 4324, +91 (0) 4323,+91 (0) 4320
வாகனப் பதிவு TN 47
Contents
  1. வரலாறு
  2. மாவட்ட வருவாய் நிர்வாகம்
    1. வருவாய் கோட்டங்கள்
    2. வருவாய் வட்டங்கள்
  3. உள்ளாட்சி நிர்வாகம்
    1. மாநகராட்சிகள்
    2. பேரூராட்சிகள்
  4. ஊராட்சி நிர்வாகம்
  5. கரூர் மாவட்ட எல்லைகள்
  6. புவியியல்
  7. அரசியல்
    1. சட்டசபைத் தொகுதிகள்
    2. மக்களவைத் தொகுதி
  8. சுற்றுலா மற்றும் வழிபாட்டுத் தலங்கள்
    1. கரூர் கல்யாணபசுபதீசுவரர் கோயில்
    2. அருள்மிகு மாரியம்மன் கோயில்
    3. அருள்மிகு கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில்
    4. வெண்ணெய்மலை முருகன் கோவில்
    5. நெரூர் சதாசிவ பிரமேந்திரர் கோயில்
    6. புகழிமலை
    7. அய்யர் மலை இரத்தினகிரீசுவரர் கோயில்
    8. திருமுக்கூடலூர் அகத்தீசுவரர் கோயில்
    9. திருக்காம்புலியூர் செல்லாண்டியம்மன் திருக்கோயில்
    10. பொன்னணியார் அணை
    11. மாயனூர் கதவணை
  9. ஆடிப்பெருக்கு விழா
  10. மேலும் படிக்க

வரலாறு

2000 ஆண்டுகள் பழமைமிக்கது கரூர். கரூர், காலப்போக்கில் சேர, சோழ, பாண்டிய, கங்க மன்னர்கள், விஜய நகர நாயக்கர்கள், மைசூர் அரசர்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் இருந்துள்ளது.தங்க ஆபரணங்களை வடிவமைக்கும் பணி இங்கு பழங்காலம் தொட்டே நடைபெற்றுள்ளது. மேலும் கரூர் பல்வேறு தமிழ் அரசர்களின் போர்களமாகவும் இருந்துள்ளது. இது கொங்கு நாட்டின் ஒரு பகுதியாகவும் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது வளம்மிக்க நாடாக விளங்கிற்று.

கரூரின் சுற்றுச்சூழல் மற்றும் தட்பவெப்பம் மிகவும் இதமானதாகவும் உள்ளது. ஏறத்தாழ 2000 ஆண்டுக்கும் பழமையான வரலாறு கொண்டது கரூர் தமிழகத்தின் மிகப்பழமையான நகரங்களில் ஒன்றாகும். இந்து மத நம்பிக்கைப்படி இறைவன் பிரம்மா தனது படைப்பு தொழிலை இங்குதான் தொடங்கியதாக கருதப்படுகிறது. அதன் பொருட்டே இவ்வூர் கருவூர் என அழைக்கப்பட்டுள்ளது.

பண்டைய காலத்தில் கருவூர் என்றும் வஞ்சி மாநகரம் என்றும் அழைக்கப்பட்ட இவ்வூர், சேரர்களின் தலைநகராக விளங்கியிருக்கிறது. சோழ, பாண்டிய பேரரசுகள் இந்த ஊரை கைப்பற்றும் நோக்கில் பலமுறை போர் தொடுத்துள்ளனர். பண்டைய காலங்களில் ரோமாபுரியோடு நெருங்கிய தொடர்புடன் கருவூர் இருந்திருக்கிறது.

தங்கநகைகள் ஏற்றுமதியில் கருவூர் ஈடுபட்டிருந்திருக்கிறது என்பதற்கு பல்வேறு தொல்பொருள் ஆய்வில் கிடைத்த ரோம நாணயங்களே ஆதாரம். மேலும் கருவூரை 150 கிரேக்க புலவர்கள் தங்கள் பாடல்களில் ”கோருவூரா” என்று குறிப்பிட்டு தமிழகத்தின் சிறந்த வாணிப மையம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

சேரர்களால் தலைநகரான வஞ்சி மாநகர் பாண்டியர்களால் கைப்பற்றப்பட்டு, பின்நாளில் பல்லவ அரசர்களின் ஆட்சியின் கீழ் இருந்துள்ளது. சோழர்கள் ஆட்சியின் கீழ் நீண்ட காலங்கள் கருவூர் இருந்துள்ளது. நாயக்கர்களாலும் பிற்பாடு திப்பு சுல்தான் ஆட்சியின் கீழும் கருவூர் இருந்துள்ளது. 1793ல் கரூர் கோட்டையை அழித்து ஆங்கிலேயர்கள் கரூரைக் கைப்பற்றியிருக்கின்றனர்.

ஆங்கிலேயரின் ஆட்சிகாலத்தில் பண்டைய கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த கரூர் தாலுகா 1910 ஆம் ஆண்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.

பல்வேறு ஆழ்வார்களாலும், சங்கப்புலவர்களாலும் பாடப்பெற்ற தலமாகவும் கரூர் விளங்குகிறது. சிலப்பதிகாரத்தில் கருவூர் பற்றிய வரலாற்று தகவல்கள் இடம் பெற்றுள்ளன.மேலும் சேர மன்னன் சேரன் செங்குட்டுவன், வஞ்சி மாநகரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டதாக சிலப்பதிகாரம் கூறுகிறது. கரூர் அருகே உள்ள ஆறுநாட்டார் மலையில் கரூரை ஆண்ட சேர மன்னர்களின் பெயர்கள் அடங்கிய கல்வெட்டு கிடைக்கப்பெற்றுள்ளது.

பல்வேறு அகழ்வாராய்ச்சிகளின் மூலமும், கல்வெட்டுகளின் மூலமும் கரூர் சங்ககால சேரர்களின் தலைநகராக விளங்கியது நிரூபிக்கபட்டுள்ளது. கரூர் சோழர்களின் தலைநகரமாக விளங்கியுள்ளது. அங்குதான் சோழர்கள் கருவூலம் வைத்து செயல்பட்டிருக்கின்றனர்.

மாவட்ட வருவாய் நிர்வாகம்

கரூர் மாவட்டம் 2 வருவாய் கோட்டங்களும், 7 வருவாய் வட்டங்களும், 20 உள்வட்டங்களும், 203 வருவாய் கிராமங்களும் கொண்டது.

வருவாய் கோட்டங்கள்

  • கரூர்
  • குளித்தலை

வருவாய் வட்டங்கள்

  • கரூர்
  • அரவக்குறிச்சி
  • குளித்தலை
  • கிருஷ்ணராயபுரம்
  • கடவூர்
  • மண்மங்கலம்
  • புகளூர்

உள்ளாட்சி நிர்வாகம்

கரூர் மாவட்டம் 1 மாநகராட்சி,1 நகராட்சிகளையும், 11 பேரூராட்சிகளையும் கொண்டது.

மாநகராட்சிகள்

  • கரூர் மாநகராட்சி

பேரூராட்சிகள்

  • அரவக்குறிச்சி
  • கிருஷ்ணராயபுரம்
  • மருதூர்
  • நங்கவரம்
  • பள்ளபட்டி
  • பி. ஜே. சோழபுரம்
  • புலியூர்
  • புஞ்சை புகலூர்
  • புஞ்சை தோட்டகுறிச்சி
  • புகலூர்
  • உப்பிடமங்கலம்

ஊராட்சி நிர்வாகம்

இம்மாவட்டம் 8 ஊராட்சி ஒன்றியங்களையும், 157 கிராம ஊராட்சிகளையும் கொண்டது.

கரூர் மாவட்ட எல்லைகள்

வடக்கில் நாமக்கல், ஈரோடு மாவட்டங்களையும், கிழக்கில் திருச்சி மாவட்டத்தையும், தெற்கில் திருச்சி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களையும், மேற்கில் திருப்பூர் மாவட்டத்தையும் கரூர் மாவட்டம் எல்லைகளாக உள்ளன.

புவியியல்

கரூரானது கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 101 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்த நகரம் தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின், கரூர் மாவட்டத்தில் சென்னையிலிருந்து 370 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. அமராவதி ஆற்றின் கரையில் கரூர் அமைந்துள்ளது. இங்கே உள்ள மண் வகைகள் கருப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் உள்ளன, இவை காவிரி டெல்டாவில் பொதுவான பயிர்களுக்கு உகந்தவை.

தமிழகத்தின் மைய மாவட்டமாகும். இது திருச்சிக்கு மேற்கே 78 கி.மீ. தொலைவிலும், ஈரோடிற்குத் தென் கிழக்கே 66 கி.மீ. தொலைவிலும், சேலத்திற்குத் தெற்கே 100 கி.மீ. தொலைவிலும், மதுரைக்கு வடக்கே 143 கி.மீ. தொலைவிலும், கோவைக்குக் கிழக்கே 135 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

அரசியல்

இம்மாவட்டம் 4 சட்டமன்றத் தொகுதிகளையும், 2 மக்களவைத் தொகுதிகளையும் கொண்டுள்ளது.

சட்டசபைத் தொகுதிகள்

  • கரூர்
  • அரவக்குறிச்சி
  • கிருஷ்ணராயபுரம்
  • குளித்தலை

மக்களவைத் தொகுதி

  • கரூர்
  • பெரம்பலூர் மக்களவைத் தொகுதிகள் கரூர் மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டது.

சுற்றுலா மற்றும் வழிபாட்டுத் தலங்கள்

கரூர் பல வரலாற்று சிறப்புமிக்க கோயில்களை கொண்டுள்ளது. இது போர்களமாக விளங்கியதால் பல்வேறு மன்னர்களின் வீரத்தை பறைசாற்றும் சிலைகளை காணமுடிகிறது.

கரூர் கல்யாணபசுபதீசுவரர் கோயில்

கரூர் மாநகரில் அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயம், தேவாரப் பாடல் பெற்ற தலங்களில், கொங்கு நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இத்தலம், காமதேனு வழிபட்ட தலமாகும்.

இச்சிவாலயத்தினை, திருஞானசம்பந்தர், சித்தர் கருவூரார், அருணகிரிநாதர் போன்றோர் பாடியுள்ளனர். இச்சிவாலயத்தில் சித்தர் கரூவூராருக்கு, தனி ஆலயம் உள்ளது.

படைப்புத் தொழில் குறித்து பிரம்ம தேவன் அடைந்த கர்வத்தை அடக்குவதற்காக, சிவன் நடத்திய விளையாடலால் உண்டான தலம் இது. சிவனை அடைய விருப்பம் கொண்டிருந்த காமதேனுவிடம் நாரதர் சென்று, பூலோகத்திலுள்ள வஞ்சிவனத்தில் தவம் செய்தால், அவர் எண்ணம் ஈடேறும் என்று கூறுகிறார்.

அதன்படி வஞ்சி வனமாகிய கரூர் சென்று, அங்கு ஒரு புற்றுள் இருந்த லிங்கத்திற்கு தன் பாலைச் சொரிந்து, திருமஞ்சனம் செய்து வழிபட, மகிழ்ச்சியடைந்த சிவனும் காமதேனுவுக்கு விரும்புவற்றைப் படைக்கக்கூடிய ஆற்றலை அளிக்கிறார்.

காமதேனுவுக்குக் கிடைத்த படைப்பாற்றலால் அஞ்சிய பிரம்மா, தனது தவறை உணர்ந்து, சிவனிடம் போய், தஞ்சம் அடைந்தார். சிவனும் அவரை மன்னித்து, படைப்புத் தொழிலை அவருக்கே திரும்ப அளித்து, காமதேனுவை இந்திரனிடம் அனுப்பி வைத்தார்.

காமதேனு வழிபட்டதால் இக்கோவிலில், சிவன், ‘பசுபதீஸ்வரர்’ என்றும், ‘ஆநிலையப்பர்’ என்றும் அழைக்கப்படுகிறார்.

அருள்மிகு மாரியம்மன் கோயில்

கரூர் மாவட்ட நகரப் பகுதியின் மைய்யத்தில் அமைந்துள்ள இக்கோயில் மிகவும் புகழ்பெற்ற ஒன்றாகும் இங்கு அருள் மிகு மாரியம்மன் எழுந்தருளியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் வைகாசி திருவிழா கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் துவங்கிறது, இதில் சாதி சமய வேறுபாடு இன்றி அனைத்து மக்களும் பங்கேற்பதுடன், வழிபாட்டிற்காக ஒவ்வொரு பக்தா்களும் அமராவதி ஆற்றிலிருந்து புனித நீரை எடுத்து வந்து இந்த மகத்தான நிகழ்வில் பங்கேற்கின்றனா்.

அருள்மிகு கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில்

கரூா் மாவட்டத்தில் அமைந்துள்ள தான்தோன்றிமலையின் சிறுகுன்றில் அருள்மிகு கல்யாண வேங்கடரமணர் பெருமாள் எழுந்தருளியுள்ளார். இந்த கோயில் கரூா் மாவட்டத்தில் இருந்து 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த கோயில் தென் திருப்பதி என்றும் எல்லோராலும் அழைக்கப்படுகிறது.

இக்கோயிலில் கல்யாண வெங்கடரமண சுவாமி சன்னதியும், அருள்மிகு ஆஞ்சநேயர், அருள்மிகு கருடாழ்வார். உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம், கோயில் கோசாலை, கோயில் தேர் போன்றவை உள்ளன.

இக்கோயிலில் வைகானசம் ஆகம முறைப்படி நான்கு காலப் பூசைகள் நடக்கின்றன. புரட்டாசி மாதம் புரட்டாசி திருவோணம் திருத்தேர் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. மாசி மாதம் மாசி மகம் திருத்தேர் திருவிழாவாக நடைபெறுகிறது. புரட்டாசி, மாசி, சித்திரை மாதம் திருவோணம், நட்சத்திர திருத்தேர் தேரோட்டம் நடைபெறுகிறது. மாசி மாதம் தேரோட்டம் திருவிழாவாக நடைபெறுகிறது.

வெண்ணெய்மலை முருகன் கோவில்

சுமார் இரண்டாயிரம் வருடங்கள் பழமை வாய்ந்ததாக நம்பப்படும் இத்திருக்கோவிலை கருவூர் அரசர் அமைத்தார் என சொல்லப்படுகிறது. பிரம்மனால் படைக்கப்பட்ட உயிரினங்கள் பசியில்லாமல் வாழ்வதற்காக வெண்ணெயை மலையென குவித்து அதன் அருகிலேயே தேனு தீர்த்தம் என்னும் பொய்கையை உருவாக்கினார் .இதனால் தான் வெண்ணெய்மலை பாறை கடும் வெயிலிலும் குளுமையுடன் திகழ்கிறது என நம்பப்படுகிறது.

மூர்த்தி , தலம் , தீர்த்தம் ஆகிய மூன்றினாலும் சிறப்பு பெற்ற இத்தலத்திற்கு வந்து வணங்கினால் வளமான வாழ்க்கை அமைகிறது என்பது பக்தர்களின் நம்பிக்கை. கருவூர் சித்தருக்கு தனிச் சன்னதி அமைந்துள்ளது.

நெரூர் சதாசிவ பிரமேந்திரர் கோயில்

சதாசிவ பிரமேந்திரர் கோயில் கரூர் அருகே உள்ள நேரூரில் அமைந்துள்ளது. நெரூர் கரூரில் இருந்து பஞ்சமாதேவி செல்லும் சாலையில் காவிரி ஆற்றின் கரையில் உள்ளது . இங்கு மிகவும் பழமையான சிவபெருமான் கோயில் காவிரி ஆற்றின் கரை அருகில் அக்னீஸ்வரர் என்ற பெயரில் அமைந்துள்ளது.

நெரூர் அக்னீஸ்வரர் கோயிலுக்கு அருணகிரி நாதரே வந்து பதிகம் பாடியுள்ளதாக கூறப்படுகிறது. அக்னீஸ்வரர் கோயிலுக்கு பின்புறம் சதாசிவ பிரமேந்திரரின் சமாதி அமைந்துள்ளது.

நெரூர் ஆலயத்தில் சதாசிவ பிரமேந்திராள் சமாதி அடைந்த இடத்தில் வில்வமரமும், சுயம்பு இலிங்கமும் அமைந்திருக்கிறது. இங்கு வேண்டிக் கொள்பவர்களுக்கு அமைதியும், செல்வமும் பரிபூரணமாக கிடைக்கும் என்று நம்பிக்கை உண்டு. இத்தலத்தில் பெளர்ணமி பூசை, ஒவ்வொரு வியாழக்கிழமையும் குரு பூசை , சித்திரை மாத குரு வார பூசை போன்றவைகள் மிக சிறப்பாக கொண்டாப்படுகிறது.

புகழிமலை

கி.பி முதல் நூற்றாண்டையொட்டி கொங்கயாபன் என்ற சமண முனிவர் வாழ்ந்துவந்ததாகவும், இவர் யாறூரைச் சேர்ந்தவர் என்றும், இயற்கையாய் அமைந்த குகையில் தங்கி நோன்பு இருந்தார் என்றும் , இவருக்கு வசதியாக இக்குகை தலத்தில் படுக்கை அமைத்து கொடுத்தான் சேர மன்னன் இளங்கடுங்கோ என்றும் இப்பகுதி சுற்று வட்டார மக்களால் நம்பப்படுகிறது.

பாலசுப்ரமணிய சுவாமியை கிழக்கு பார்த்து நின்று பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். ஒரு கையில் வேலும் மறு கையில் சேவல் கொடியும் நின்ற நிலையுலும் பின்புறம் அவரது மயில் வாகனம் வலப்புறம் தோகை விரித்து இடப்புறம் வழியாக திரும்பி சுவாமியின் முகத்தை தரிசனம் செய்த நிலையில் தோற்றமளிக்கிறது.

அய்யர் மலை இரத்தினகிரீசுவரர் கோயில்

இக்கோயில் அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது அகத்தியர் இறைவனை நண்பகலில் தரிசித்த தலமென்பதால் இவ்விறைவன் மத்தியான சுந்தரர் என்றும் வழங்குகிறார் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). இத்தலம் தற்போது மக்கள் வழக்கில் ஐயர்மலை என்று வழங்கப்படுகிறது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் முதலாவது சிவத்தலமாகும்.

  • சிவராத்திரி நாளில் அல்லது முன்பின் நாட்களில் சூரியஒளி, சுவாமிக்கு நேரே அமைக்கப்பட்டுள்ள சாளரம் வழியாக வந்து மூலவர் மீது படுகிறது.
  • சிவலிங்கத்தின் முன்பு பொய்வாசிக் கொப்பரை என்னும் நீர்த்தொட்டி உள்ளது.
  • இரத்தினகிரி, மாணிக்கமலை, சிவாயமலை, அரதனசலம் என்பன இத்தலத்தின் வேறு பெயர்களாகும்.
  • மூலவர் சுயம்பு மூர்த்தி.
  • இப்பெருமானுக்கு நாள்தோறும் அருகிலுள்ள காவிரியிலிருந்து 10 குடங்களில் நீர்கொண்டு வரப்பட்டு உச்சிக்கால அபிஷேகம் செய்யப்படுகிறது.

திருமுக்கூடலூர் அகத்தீசுவரர் கோயில்

அகத்தீசுவரர் கோயில் காவிரி, அமராவதி ஆகிய இரண்டு ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் அமராவதி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது.

காசியிலிருந்து வாலி காசிலிங்கத்தினை பிரதிஸ்டை செய்ய இத்தலத்திற்கு வந்தார். ஆனால் அதற்கு முன்பே அகத்தியர் இத்தலத்தில் மணலால் ஆன இலிங்கத்தினை பிரதிஸ்டை செய்து வழிபட்டுவிட்டார்.

தான் காசிக்கு சென்று எடுத்துவந்த காசிலிங்கத்தையே இங்கு பிரதிஸ்டை செய்ய வேண்டுமென வாலி அகத்தியருடன் சண்டைக்கு சென்றார். அகத்தியர் இந்த மணல் சிற்பத்தை வாலால் அசைத்துப் பார்த்து, முடிந்தால் இந்த லிங்கத்தை எடுத்துவிட்டு நீ கொண்டு வந்த இலிங்கத்தை வைத்து வழிபடு என்றார்.

வாலியும் தன்னுடைய முழு பலத்தை பிரயோகம் செய்து அசைத்துப் பார்த்தார். ஆனால் வாலால் இலிங்கத்தை அசைக்க முடியவில்லை. அதனால் காசிலிங்கத்தினை காவிரி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் சிறீராமசமூத்திரம் என்கிற அயலூரில் பிரதிஸ்டை செய்தார். அத்தலம் அயலூர் வாலீஸ்வரர் கோயில் என்று அழைக்கப்படுகிறது.

திருக்காம்புலியூர் செல்லாண்டியம்மன் திருக்கோயில்

கரூர் மாவட்டம் திருக்காம்புலியூர் கிராமத்தில், இத்திருக்கோயில் செல்லாண்டியம்மன் வீற்றிருக்கிறார். இந்தவூர் மக்களுக்கும் மற்றும் அதனை சுற்றியுள்ள இந்து மதத்தை பின்பற்றும் கிராம மக்களுக்கும் ஒரு முக்கிய வழிபாட்டுத்தலமாக விளங்குகிறது. இது கரூர் மாவட்டத்திலிருந்து 23 கி.மீ. தொலைவிலும் குளித்தலையிலிருந்து 21 கி.மீ. தொலைவிலும் காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.

பொன்னணியார் அணை

இடையப்பட்டி கிராமத்தில் புங்க ஆறு மற்றும் ஒடைப்புக்கரை ஆறு ஆகியவை இணையும் இடத்தில் அமைந்துள்ளது. புங்க ஆறு கடவூர் ஜமீன் மலைகளுக்குட்பட்ட தொப்பையாசமி மலையில் கிழக்கு சரிவிலுள்ள சிற்றருவி மூலம் நீராதாரத்தை பெறுகிறது. அணையின் கட்டுமானப்பணிகள் 1975 ஆம் ஆண்டு முடிக்கப்பட்டது.

பொன்னணியாறு அணை பெருமாள் மலை மற்றும் செம்மலை இடையில் கட்டப்பட்டுள்ளது. அணையின் உயரம் 51அடிகள் ஆகும். அணையின் மூலம் வைய்யம்பட்டி ஒன்றியத்தில் 1820 ஏக்கர் நிலம் பாசனவசதி பெறுகிறது. அணையின் கிழக்கு பகுதியில் பூங்கா அமைக்கப்பட்டு சுற்றுலா தலமாக செயல்படுகிறது. இந்த அணை சுற்றுலாவிற்கு ஏற்ற இடமாகும்.

மாயனூர் கதவணை

கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மாயனூர் கதவணை சுற்றுலா பயணிகளை கவரும் ஒரு புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது. இது கரூர் மாவட்டத்திலிருந்து 23 கி.மீ. தொலைவிலும் குளித்தலையிலிருந்து 21 கி.மீ. தொலைவிலும் காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.

ஆடிப்பெருக்கு விழா

ஒவ்வோர் ஆண்டும் தமிழ் மாதமான ஆடி மாதம், 18 ஆம் திகதி அன்று, அமராவதி நதிக் கரையோரம், குடும்பப் பெண்கள், சுமங்கலிப் பெண்கள், புதிதாக திருமணமான பெண்கள், திருமணமாகாத கன்னிப் பெண்கள், தங்கள் குடும்பங்களுடன் சென்று பூசைகள் செய்து, தங்களின் குடும்ப நலனுக்காக அமராவதி நதித் தாயை வணங்குவர்.

பூசைக்காக, மலர் மாலை, பச்சரிசி, ஊதுபத்தி, சாம்பிராணி, மஞ்சள், குங்குமம், தேங்காய், வெற்றிலை பாக்கு, பழங்கள், வெல்லம், மஞ்சள் கயிறு, கற்பூரம், விபூதி, சந்தனம், நாணயங்கள், நறுமணப் பூக்கள், தேன், பச்சரிசி மாவு, பன்னீர், வாழை இலை போன்றவற்றைக் கொண்டு சென்று, அமராவதி நதித் தாய்க்குப் படைத்து பண்டிகையாகக் கொண்டாடுவது வழக்கம்.

நதிக்கரையில், சர்க்கரைப் பொங்கல் மற்றும் வெண்பொங்கல் தயார் செய்து படையல் செய்து இறையருள் பெற வேண்டுகின்றனர்.

மேலும் படிக்க

தமிழ்நாட்டின் மாவட்டங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *