கிருஷ்ணகிரி மாவட்டம் (Krishnagiri District)

கிருஷ்ணகிரி மாவட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இது 30வது மாவட்டமாக 2004 ஆம் ஆண்டு தருமபுரி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது. இந்தியாவில் அதிக அளவில் மாம்பழம் உற்பத்தி செய்யும் மாவட்டங்களில் ஒன்றாகும். கடல் மட்டத்தில் இருந்து 300 மீட்டர் முதல் 1400 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு தமிழ், ஆங்கிலம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகள் பேசப்படுகின்றன.

நாடு இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
தலைநகரம் கிருஷ்ணகிரி
பகுதி கொங்கு நாடு
பரப்பளவு 5143 ச.கி.மீ
மக்கள் தொகை 18,79,809 (2011)
மக்கள் நெருக்கம் 1 ச.கீ.மீ – க்கு 301
அஞ்சல் குறியீடு 635001
தொலைபேசிக் குறியீடு 04343
வாகனப் பதிவு TN 24, TN 70

வரலாறு

கிருஷ்ணகிரி முற்காலத்தில் “எயில் நாடு” எனவும், ஓசூர் “முரசு நாடு” எனவும், ஊத்தங்கரை “கோவூர் நாடு” எனவும் அழைக்கப்பட்டதாகத் தெரிகிறது. சங்க காலத்தில் போர் வீரர்களுக்கு வைக்கப்படும் “நவகண்டம்” எனப்படும் நடுகற்கள் இம் மாவட்டத்தில் அதிகம் காணப்படுகிறது. இந்த இடம் ஒரு காலத்தில் கொடை வள்ளலான அதியமான் ஆட்சி செய்து வந்த இடமாகும். சேலத்தில் சில பகுதிகளும், தருமபுரி, கிருஷ்ணகிரி, மற்றும் மைசூர் ஆகிய இடங்கள் ஒருங்கே “தகடூர் நாடு” அல்லது “அதியமான் நாடு” எனவும் அழைக்கப்பட்டு வந்துள்ளது. முற்காலத்தில் இந்த இடம் தமிழகத்தின் எல்லையாகவும் இருந்து வந்துள்ளது, இப்போதும் இருந்துகொண்டிருக்கின்றது.

பாரா மகால் என அழைக்கப்பட்ட 12 கோட்டைத் தலங்கள் வரலாற்றில் மிக முக்கியப் பங்கு வகித்துள்ளது. இதில் முதன்மையானது கிருஷ்ணகிரியில் அமைந்துள்ள கோட்டையாகும் சையத் பாஷா மலை. இந்த கோட்டை விஜயநகர பேரரசர்களால் கட்டப்பட்டதாகும். போசள மன்னன் வீர இராமநாதன் தற்போதய கிருஷ்ணகிரி மாவட்டத்தின் “குந்தானி” என்னும் இடத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்ததாகவும், மற்றொரு மன்னனான ஜெகதேவிராயர், ஜெகதேவி என்னும் இடத்தைத் தலைநகராகக் கொண்டு 12 கோட்டைகளில் ஒன்றை அங்கு கட்டி ஆட்சி செய்ததாகத் தெரிகிறது.

முதலாம் மைசூர் போரின்போது ஆங்கிலேய படைகள் கிருஷ்ணகிரி வழியாக காவேரிப்பட்டினத்திற்கு சென்று அங்கு ஹைதர் அலியின் படைகளுடன் போரிட்டதாகத் தெரிகிறது. இதில் ஆங்கிலேயர்கள் படுதோல்வி அடைந்தனர். இரண்டாம் மைசூர் போரின் போது ஹைதர் அலியின் கட்டுப்பாட்டிற்குள் சேலம் மற்றம் கர்நாடக பகுதிகள் வந்தன.

ஸ்ரீரங்கபட்டிண உடன்படிக்கையின் படி சேலம் மற்றும் பாரா மஹால் பகுதிகள் ஆங்கிலேயர் வசம் வந்தது. 1792 ஆம் ஆண்டு கேப்டன் அலெக்சான்டர் ரீட் மாவட்ட கலெக்டராக அறிவிக்கப்பட்டார். பின்னர் ராபார்ட் கிளைவ் மதராஸ் மாகாணத்தின் கவர்னராக ஆனபோது பாரா மகாலின் தலைநகரமாக கிருஷ்ணகிரி மாறியது.

  • மூதறிஞர் இராஜாஜி, கிருஷ்ணகிரி மாவட்டதிலுள்ள ஓசூர் நகருக்கருகில் உள்ள தொரப்பள்ளி என்னும் ஊரில் பிறந்தவர்.
  • திருவள்ளுவருக்கு திருவுருவம் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா ஊத்தங்கரைக்கு அருகில் உள்ள காமாட்சிபட்டியில் பிறந்தவர்.
  • 2500 ஆண்டு கால சிறப்புமிக்க பிரசித்தி பெற்ற ஸ்ரீ காட்டு வீர ஆஞ்சநேயர் திருத்தலம் கிருஷ்ணகிரிக்கு மிக அருகில் மகாராசகடை என்னும் இடத்தில் மலைமீது அமைந்துள்ளது.
  • கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.

மாவட்ட வருவாய் நிர்வாகம்

கிருஷ்ணகிரி மாவட்டம் 2 வருவாய் கோட்டங்களையும், 8 வருவாய் வட்டங்களையும், 29 உள்வட்டங்களையும், 661 வருவாய் கிராமங்களையும் கொண்டுள்ளது.

வருவாய் கோட்டங்கள்

  • கிருஷ்ணகிரி
  • ஓசூர்

வருவாய் வட்டங்கள்

  • கிருஷ்ணகிரி
  • ஓசூர்
  • போச்சம்பள்ளி
  • ஊத்தங்கரை
  • தேன்கனிகோட்டை
  • பர்கூர்
  • சூளகிரி
  • அஞ்செட்டி வட்டம்

உள்ளாட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம்

கிருஷ்ணகிரி மாவட்டம் 1 மாநகராட்சியையும், 1 நகராட்சியையும், 6 பேரூராட்சிகளையும், 10 ஊராட்சி ஒன்றியங்களையும், 333 ஊராட்சிகளையும் கொண்டுள்ளது.

மாநகராட்சி

  • ஓசூர்

நகராட்சிகள்

  • கிருஷ்ணகிரி

பேரூராட்சிகள்

  • காவேரிப்பட்டணம்
  • கெலமங்கலம்
  • தேன்கனிக்கோட்டை
  • நாகோஜனஹள்ளி
  • பர்கூர்
  • ஊத்தங்கரை

ஊராட்சி ஒன்றியங்கள்

  • கெலமங்கலம்
  • தளி
  • ஓசூர்
  • சூளகிரி
  • வேப்பனபள்ளி
  • கிருஷ்ணகிரி
  • காவேரிப்பட்டணம்
  • மத்தூர்
  • பருகூர்
  • ஊத்தங்கரை

கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைகள்

கிருஷ்ணகிரி மாவட்டமானது கிழக்கே திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களையும், மேற்கே கருநாடக மாநிலத்தையும், வடக்கே ஆந்திர மற்றும் கருநாடக மாநிலங்களையும், தெற்கே தருமபுரி மாவட்டத்தையும் வரையரையாகக் எல்லையாகக் கொண்டுள்ளது.

புவியியல்

கிருஷ்ணகிரி மாவட்டம் கடல் மட்டத்தில் இருந்து 300 மீட்டர் முதல் 1400 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பாரத பிரதமரின் தங்க நாற்கர சாலை திட்டத்தின் கீழ் பெங்களூர் முதல் சென்னை வரை உள்ள தங்க நாற்கர சாலையும், கன்னியாகுமரி முதல் வாரணாசி வரையிலான தேசியநெடுஞ்சாலை 7, (தற்போது காஷ்மீர் வரை தேசிய நெடுஞ்சாலை 44) மற்றும் கிருட்டிணகிரி – வாலாஜா தேசிய நெடுஞ்சாலை 46, கிருட்டிணகிரி – பாண்டிச்சேரி தேசிய நெடுஞ்சாலை ஆகிய தேசிய நெடுஞ்சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளது.

பெங்களூர் முதல் சேலம் வரையிலான இருப்புப் பாதையும், சென்னை சென்ட்ரல், சோலையார் பேட்டை வழியாக சேலம் செல்லும் இருப்புப் பாதையும் இம்மாவட்டத்தின் வழியாக செல்கின்றது.

அரசியல்

இம்மாவட்டம் 6 சட்டமன்றத் தொகுதிகளையும், 1 மக்களவைத் தொகுதிகளையும் கொண்டுள்ளது.

சட்டசபைத் தொகுதிகள்

  • ஊத்தங்கரை (தனி)
  • பர்கூர்
  • கிருஷ்ணகிரி
  • வேப்பனஹள்ளி
  • ஓசூர்
  • தளி

மக்களவைத் தொகுதி

  • கிருஷ்ணகிரி

சுற்றுலா மற்றும் வழிபாட்டுத் தலங்கள்

கிருஷ்ணகிரி அருகே பழமையான கோயில்களில் பல்வேறு உள்ளன. பாரம்பரிய மற்றும் வரலாற்றுப் பின்னணி உடைய ஒரு அருங்காட்சியகம் நகரின் மையப்பகுதியில் உள்ளது. இந்த அருங்காட்சியகம், 1993 கி.பி. முதல் செயற்பட்டு வருகின்றது வரலாற்று நினைவுச் சின்னங்கள் பாதுகாக்கப்பட்டு இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

கிருஷ்ணகிரி அணை

கிருட்டிணகிரி அணை, கிருட்டிணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையாகும். இந்த அணை 1958இல் கட்டி முடிக்கப்பட்டு அப்போதைய தமிழக முதல்வரான காமராசரால் திறந்து வைக்கப்பட்டது. இதன் கொள்ளளவு 1666 மில்லியன் கன அடிகள். நீர்ப் பாசனம் பெறும் ஆயக்கட்டு பகுதியானது 3652 எக்டேர் நிலமாகும்.

இந்த அணைப் பகுதியியில் அழகிய பூங்கா உள்ளது. அணையின் வலதுபுறம் 45 ஏக்கர் பரப்பளவிலும், இடதுபுறம் 15 ஏக்கர் பரப்பளவிலும் என மொத்தம் 60 ஏக்கர் பரப்பளவில் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், புல்வெளிப் பகுதிகள், நீரூற்றுகள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இங்கு ஒரு மான் பண்ணையும் பராமரிக்கப்பட்டு வருகின்றது.

அவதானப்பட்டி ஏரி பூங்கா

அவதானப்பட்டி சிறுவர் பூங்கா மற்றும் படகு குழம் கிருஷ்ணகிரியில் இருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த பூங்கா சேலம் – பெங்களுர் தேசிய நெடுஞ்சாலையில் அமையப்பெற்றுள்ளது. இந்த ஏரிக்கு தேவையான நீர் ஆதாரம் கிருஷ்ணகிரி அணைக்கட்டில் இருந்து ஆண்டு முழுவதும் கிடைக்கப்பெருகிறது. எனவே இது வற்றாத ஏரியாக ஆண்டு முழுவதும் திகழ்கிறது. இந்த ஏரி சாகச படகு சவாரிக்கு ஏற்ற இடமாக அமைந்து உள்ளது.

கெலவரபள்ளி அணை

கெலவரப்பள்ளி நீர்தேக்கம் கிருட்டிணகிரி மாவட்டத்தில் ஒசூரிலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள கெலவரப்பள்ளி என்ற சிற்றூரில் உள்ளது. தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே இத்தேக்கம் அமைந்துள்ளது. இந்த அணை 1993 இல் கட்டி முடிக்கப்பட்டது. இதன் கொள்ளளவு 481 மில்லியன் கன அடிகள்.

இதிலிருந்து நாளுக்கு இரண்டு மில்லியன் காலன் நீர் ஒசூர் தொழிற்பேட்டைக்கு வழங்கப்படுகிறது. இந்நீர் தேக்கத்தின் வலப்புற கால்வாய் 22.6 கி.மீ நீளமும், இடப்புற கால்வாய் 32.5 கி.மீ நீளமும் கொண்டது. [2]அணையில் ஒரு சிறிய பூங்காவும் உள்ளது.

தளி ஏரி மற்றும் பூங்கா

தளி ஏரி மற்றும் பூங்கா ஒசூரில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த கிராமம் முழுவதும் மலை கிராமங்களால் சூழப்பட்டுள்ளது. கடல் மட்டத்திற்கு மேல் 1000 அடி உயரத்தில் அமையபெற்ற கிராமம் ஆகும். இவ்விடத்தின் தட்ப வெட்ப நிலை ஆண்டு முழுவதும் மிகவும் குளிர்ச்சியாக உள்ளதால் அக்காலத்தில் இப்பகுதியை ஆண்டு வந்த ஆங்கிலேயர்கள் இப்பகுதியினை “லிட்டில் இங்கிலாந்து” என்று அழைத்தனர்.

இப்பகுதியில் உள்ள குளிர்ச்சியான தட்ப வெட்ப நிலை விவசாயத்திற்கு மிகவும் பயனள்ளதாக அமைந்துள்ளது. குறிப்பாக மலர்கள், காய்கறிகள், கனிகள் பெரும்மளவில் இங்கு விளைகிறது.

அய்யூர் – சுற்று சூழல் பூங்கா

அய்யூர் இயற்கை சூழல் பூங்கா தேன்கனிக்கோட்டையில் இருந்து 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. சூற்று சூழல் பூங்கா கடல் மட்டத்தில் இருந்து 1060மீ உயரத்தில் அமைந்துள்ளது.

பசுமை மாறா குளிர்ச்சியான வன பகுதி இவ்வனத்தினை அல்லல் தோப்பு என அழைக்கின்றனர் காரணம் அல்லல் மற்றும் நக்கி ஆகிய மரங்கள் கூட்டுத்தொகுப்பாக இவ்வனப்பகுதி பரந்து விரிந்து காணப்படுகிறது. இவை ஒன்றொடு ஒன்று பிண்ணி பினைந்து மேற்கூறை போன்று அமைந்துள்ளதால் சூரிய ஒளி புகாமல் தடுக்கப்படுகிறது. ஆகவே ஆண்டு முழுவதும் இக்காடு மிகவும் குளிர்ச்சியாக உள்ளது.

காட்டு வீர ஆஞ்சநேயர் கோவில்

கிருட்டிணகிரியை ஒட்டிய தேவசமுத்திரம் என்ற பகுதியில் உள்ள ஒரு ஆஞ்சநேயர் கோயிலாகும். ஆஞ்சநேயர் கோயில்களில் பல இடங்களில் பல ‘தோற்றங்களில் காட்சியளிப்பாா். ஒரு சில இடங்களில் நின்றவாறும் ஒருசில இடங்களில் சுவாில் சாய்ந்தவாறும் காட்சியளிப்பாா். காட்டுவீர ஆஞ்சநேயா் இங்கு சாய்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறாா்.

ஸ்ரீகாட்டு வீர ஆஞ்சநேயா் கோவில் கர்ப்ப கிரகம் 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் சிலையாக உள்ளது. முதலில் ஒரு கற்பாறையில் ஆஞ்சநேயரின் உருவம் செதுக்கப்பட்டு பிற்காலத்தில் அங்கு கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலை சுற்றிய பகுதிகள் அக்காலத்தில் வனமாக இருந்ததால் இது காட்டுவீர ஆஞ்சநேயர் கோயில் என்று பெயர்பெற்றது. ஆஞ்சநேயருக்கு அருகில் யோக நரசிம்மர், லட்சுமி தாயார் சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இங்கு வருகை புரிந்து பிராத்தனை செய்யும் பக்தர்களுக்கு தேங்காய், வெற்றிலையுடன் கூடிய சிகப்பு நிற துணி பை வழங்கப்படுகிறது. அவர்கள் பிராத்தனை முடிந்த பிறகு அந்த பையினை அக்கோவிலுனுள் ஒப்படைத்து விட்டு செல்ல வேண்டும். அதன் பிறகு கோவில் நிர்வாகிகள் மூன்று மாதம் கழித்து, அந்த வேண்டுதல் பையினை அப்புறபடுத்துவார்கள். அதற்குள் அவர்களது வேண்டுதல்கள் நிறைவேறுவதாக கூறப்படுகிறது.

இக்கோவிலின் அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுவது வளரும் நந்திஸ்வரர் ஆவாா். மூலஸ்தானத்திலிருந்து இடதுபுறமாக, கோவிலின் வெளிபுறம் பாறையின்மீது நந்திஸ்வரர் மிக அழகான தோற்றத்துடன் காட்சியளிக்கிறாா். இந்த நந்தி வளர்ந்து வருவதாக பக்தர்களால் நம்பப்படுகிறது.

ஸ்ரீபாஸ்வா பத்மாவதி சக்தி பீடம்

ஜைன மத துறவியான ஸ்ரீசுவாமி பாஸ்வ நாத பகவான் 24வது தீர்தங்கரர் அவதாரங்களில் 23வது அவதாரமாக சக்தி வடிவமாக இங்கு காட்சி அளிக்கிறார். இந்த சக்தி பீடம் உலகில் உள்ள அதிக உயரம் உள்ள சிலைகளை கொண்ட ஜெயின் கோவிலாக திகழ்கிறது. இக்கோவில் கொடியேற்ற விழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அவற்றில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து வருகை புரிகின்றனர்.

சந்திரசூடேஸ்வரர் கோவில்

செவிடை நாயனார் (சந்திரசூடேஸ்வரர்) கோயில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பாறை மலை மீது அமைந்துள்ள ஒரு பழங்கால சிவன் கோயில் ஆகும். செவிடை நாயனார் என்ற தமிழ் பெயர் சந்திரசூடேஸ்வரர் என்று மருவியது.

ஓசூர், சந்திரசூடேஸ்வரர் கோயில் திருப்பணியின் போது, 13ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, ஓய்சாள அரசன் வீரநரசிம்மனின், புதிய கல்வெட்டு கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இந்த கோவிலை சுற்றி பல்வேறு இடங்களில் 12–ம் நூற்றாண்டு சோழர் கால பாறை கல்வெட்டுகள் உள்ளன.

ராஜேந்திர சோழன் மற்றும் முதலாம் குலோத்துங்க சோழன் கல்வெட்டும், ஒய்சாள அரசர்களான வீரவிஸ்வநாதன், வீரநரசிம்மன், வீரராமநாதன் போன்ற அரசர்கள் கோவிலுக்கு வழங்கிய நிலதானங்கள் பற்றியும், கொடைகள், பூஜைக்கு வேண்டிய பொருட்கள் குறித்தும் இந்த கல்வெட்டுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கங்கர்கள், நுளபர்கள், சோழர்கள், ஓய்சாளர்கள், விஜயநகர பேரரசர்களின் காலத்தில், இக்கோவில் வளர்ச்சி பெற்றுள்ளது.

கி.பி., 10ம் நுாற்றாண்டில் செவிடபாடி என்றும், 13ம் நுாற்றாண்டில், முரசு நாடு என்றும் அழைக்கப்பட்ட ஊரே, 16ம் நுாற்றாண்டில், ஓசூர் என, மாறியுள்ளது.

பொருளாதாரம்

இங்கு மா சாகுபடி 300,17 சதுர கி.மீ பரப்பளவு கொண்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முக்கிய பயிர் மாங்கனி ஆகும். மாவட்டத்தில் ஆண்டுதோறும் 300,000 டன் மா உற்பத்தி ஆகிறது. மா உற்பத்தியில் கிருஷ்ணகிரி மாவட்டம், தமிழ்நாட்டில் முதல் இடத்தில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்நகரில் அகில இந்திய மாங்கனி கண்காட்சி அரசின் சார்பாக நடைபெற்று வருகிறது. பெரிய அளவிலான மாம்பழ ஏற்றுமதி மண்டலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏற்கப்பட்டுள்ளது.

மாம்பழப் பதப்படுத்தும் தொழிலும், அத்துடன் வளர்ந்து வருகின்றது. தற்போது ஓசூர் மாநகராட்சி ஒரு தொழில் நகரமாக விளங்கி வருகிறது. இங்கு சிப்காட் 1 மற்றும் 2 அலகுகள் உள்ளன. டைட்டன், அசோக் லேலண்ட், டி.வி.எஸ், பிரிமியர் மில் , லட்சமி மில் போன்ற பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. பசுமைக் குடில் அமைத்து ரோஜா மலர் சாகுபடி செய்வதில் ஓசூர் மாநகராட்சி சிறந்து விளங்குகிறது.

மேலும் படிக்க

தமிழ்நாட்டின் மாவட்டங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *