நவராத்திரி 9 நாள் வழிபாட்டு முறைகள்..!

நவராத்திரி விரதம் என்பது சக்தியை நோக்கி அனுட்டிக்கும் விரதங்களில் ஒன்று. புரட்டாதி மாதத்தில் அமாவாசை கழிந்த பூர்வபட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி முடியச் செய்யப்பட வேண்டும்.

மகேஸ்வரி, கௌமாரி, வராகி, மகாலெட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி, சரஸ்வதி, நரசிம்ஹி, சாமுண்டி என பலவகை ரூபங்கள்.  நம் வீட்டிற்க்கு இந்த தெய்வங்கள் அனைத்தையும் வரவழைத்து போற்றி வணங்கி வழிபடும் விழாவே நவராத்திரி.

நவராத்திரியில் முதல் மூன்று நாட்கள் துர்க்கையாகவும், நடுவில் உள்ள மூன்று நாட்கள் மகாலட்சுமியாகவும், இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் நம்மை காத்து அருள்கிறாள்.

முதல் நாள்

முதல் நாளில் அன்னை மகேஸ்வரியாக அன்னை காட்சி கொடுக்கிறாள். இந்நாளில் அன்னையை மல்லிகை, சிவப்புநிற அரளி, வில்வம் கொண்டு அலங்கரிக்க வேண்டும். நைவேத்தியமாக வெண்பொங்கல், சுண்டல், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், சர்க்கரை பொங்கல் செய்து, தோடி ராகத்தில் பாட வேண்டும். இதனால் வறுமை நீங்கி, வாழ்நாள் பெருகும்.

இரண்டாம் நாள்

இரண்டாம் நாள் அன்று ராஜராஜேஸ்வரி ரூபத்தில் இருப்பவளுக்கு முல்லை, சாமந்தி, துளசியால் அலங்காரம் செய்து, நைவேத்தியமாக புளியோதரை, எள் பாயாசம், தயிர் வடை செய்து, கல்யாணி ராகத்தில் கீர்த்தனைகள் பாடலாம். இதனால் நோய்கள் நீங்கி, உடல் ஆரோக்கியம் பெருகும்.

மூன்றாம் நாள்

மூன்றாம் நாள் வராகி அன்னையாக காட்சி கொடுக்கிறாள். இந்நாளில் அன்னையை செண்பக மொட்டு, குங்குமத்தால் அலங்கரிக்க வேண்டும். நைவேத்தியமாக கோதுமை சர்க்கரைப் பொங்கல், காராமணி சுண்டல் செய்து, காம்போதி ராகத்தில் பாட வேண்டும். இதனால் தணதானியம் பெருகும், வாழ்வு சிறப்புடன் இருக்கும்.

நான்காம் நாள்

நான்காம் நாள் மகாலட்சுமி அன்னையாக காட்சி கொடுக்கிறாள். இந்நாளில் அன்னையை செந்தாமரை, ரோஜா மற்றும் ஜாதி பூக்களால் அலங்கரிக்க வேண்டும். நைவேத்தியமாக தயிர் சாதம், அவல் கேசரி, பால் பாயாசம், கற்கண்டு பொங்கல்  செய்து, பைரவி ராகத்தில் பாட வேண்டும். இதனால் கடன் தொல்லை தீரும்.

ஐந்தாம் நாள்

ஐந்தாம் நாள் வைஷ்ணவி அன்னையாக காட்சி கொடுக்கிறாள். இந்நாளில் அன்னையை கதம்பம், மனோரஞ்சிதம் பூக்களால் அலங்கரிக்க வேண்டும். நைவேத்தியமாக சர்க்கரை பொங்கல், கடலை பருப்பு வடை, பாயாசம், தயிர் சாதம், பால் சாதம் செய்து, பந்துவராளி ராகத்தில் பாட வேண்டும். இதனால் அனைத்து செல்வங்களும் கிடைக்கும்.

ஆறாம் நாள்

ஆறாம் நாள் சண்டிகாதேவி அன்னையாக காட்சி கொடுக்கிறாள். இந்நாளில் அன்னையை பாரிஜாதம், விபூதிப் பச்சை, செம்பருத்தி, சம்பங்கி கொண்டு அலங்கரிக்க வேண்டும். நைவேத்தியமாக தேங்காய் சாதம், தேங்காய் பால் பாயாசம், பச்சைப்பயறு சுண்டல் செய்து, நீலாம்பரி ராகத்தில் பாட வேண்டும். இதனால் வழக்குகளில் வெற்றி உண்டாகும். கவலைகள் நீங்கி பொருட்கள் சேரும்.

ஏழாம் நாள்

ஏழாம் நாள் சாம்பவித் துர்க்கை அன்னையாக காட்சி கொடுக்கிறாள். இந்நாளில் அன்னையை தாழம்பு, தும்பை, மல்லிகை, முல்லை கொண்டு அலங்கரிக்க வேண்டும். நைவேத்தியமாக எலுமிச்ச சாதம், வெண் பொங்கல், கொண்டக்கடலை சுண்டல், பாதாம் முந்திரி பாயாசம் செய்து, பிலஹரி ராகத்தில் பாட வேண்டும். இதனால் வேண்டும் வரம் அனைத்தும் கிடைக்கும்.

எட்டாவது நாள்

எட்டாவது நாள் நரசிம்ம தாரினி அன்னையாக காட்சி கொடுக்கிறாள். இந்நாளில் அன்னையை மருதோன்றி, சம்பங்கி பூக்கள், வெண்தாமரை கொண்டு அலங்கரிக்க வேண்டும். நைவேத்தியமாக பால்சாதம், தேங்காய் சாதம், புளியோதரை, மொச்சை சுண்டல் செய்து, புன்னகை வராளி ராகத்தில் பாட வேண்டும். இதனால் இஷ்ட சித்தி உண்டாகும்.

ஒன்பதாம் நாள்

ஒன்பதாம் நாள் பரமேஸ்வரி அன்னையாக காட்சி கொடுக்கிறாள். இந்நாளில் அன்னையை தாமரை, மருக்கொழுந்து, துளசி, வெள்ளை மலர்கள் கொண்டு அலங்கரிக்க வேண்டும். நைவேத்தியமாக சர்க்கரை பொங்கல், உளுந்து வடை, வேர்க்கடலை, சுண்டல் செய்து, வசந்த ராகத்தில் பாட வேண்டும். இதனால் ஆயுள், ஆரோக்கியம் பெருகும். சந்ததிகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

இதையும் படிக்கலாம் : நவராத்திரி பூஜை பாடல்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *