திருஷ்டி நீக்கும் பூசணிக்காய்!

திருஷ்டி நீக்கும் பூசணிக்காய்

திருஷ்டிக்காக பூசணிக்காய் உடைக்கப்படுவதுடன் ஹோமம், யாகம் ஆகியவற்றில் உயிர்பலி கொடுப்பதைத் தவிர்த்து பூசணிக்காயை உடைப்பது என்பது வழக்கத்தில் உள்ளது. இந்தப் பூசணியை கல்யாண பூசணி, சாம்பல் பூசணி என்பர். சித்த வைத்தியத்தில் இது பித்தம், நீர்க்கட்டு, வறட்சி, மேகத்தைப் போக்கக்கூடியது.

திருஷ்டி நீக்கும் பூசணிக்காய்

தேவர்களும் அசுரர்களும் அமிர்தத்தைக் கடைந்தபோது அசுரர்களுக்கு அமிர்தம் கிடைக்காமல் போயிற்று. அதனால் அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் சண்டை தொடர்ந்து கொண்டே இருந்தது. சில அசுரர்கள் தேவர்களுக்குத் தொல்லை கொடுத்து வந்தனர். இச்சூழலில் பெருமாள் பக்தனான கூஷ்மாண்டன் எனும் அசுரன், தேவலோகத்தில் தேவர்களைப் பெரும் தொல்லைக்கு உள்ளாக்கி வந்தான். பல தெய்வங்களிடமிருந்து அரிய வரங்களையும் பெற்றிருந்தான்.

அவன் அடிப்படையில் நவ தேவியர்களில் ஒருவரான கூஷ்மாண்டா தேவியின் பக்தன். கூஷ்மாண்டா தேவி பெருமாளால் படைக்கப்பட்டவர். கூஷ்மாண்டாவுக்கு உகந்த நாள் வெள்ளிக்கிழமை. மங்களத்தை அருளும் தேவி. கூஷ்மம் என்றால் முட்டை வடிவம் அல்லது அண்டம் என்று பொருள். முதன் முதலில் இந்த உலகம், ஒரு முட்டை உருவில் தோன்றியது. அதில் இருந்து வெளிப்பட்ட பெருமாளுடன் பல தேவிகளும் இருந்தனர். அதில் கூஷ்மா தேவியும் ஒருவர். கூஷ்மாவின் பக்தனான கூஷ்மாண்டன் திருமாலிடம் அரிய வரங்கள் பெற்றிருந்தான். கூஷ்மாண்டன் தனக்கு வரமளித்த தெய்வங்களிடம் அதிக ஈடுபாடு கொண்டு தினமும் வணங்கி துதித்து வந்தான்.

மிகுந்த கர்வம் கொண்ட கூஷ்மாண்டனின் பலம் ஓங்கி, அட்டகாசம் அதிகரித்தது. தேவலோகத்திலிருந்து அனைவரும் விரட்டியடிக்கப்பட்டார்கள். தேவேந்திரன் உட்பட அனைத்து தேவர்களும் பிரம்மனிடம் புகலிடம் தேடினர். ஆனால் பிரம்மனாலும் தேவர்களின் துயரைத் தீர்க்க முடியவில்லை. அனைவரும் தம்மை கூஷ்மாண்டனின் பிடியில் இருந்து பாதுகாக்குமாறு வேண்டிக் கொண்டு பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பெருமாளிடம் சரணடைந்தனர். அவர்கள் கூறியதைக் கேட்ட பெருமாள், கூஷ்மாண்டனுக்கு சாப விமோசனம் தரும் காலம் நெருங்கி விட்டதையும், தன்னுடைய பக்தனான அவனுக்கு அவன் மரணம் அடையும் முன்னால் பெருமையையும் தர எண்ணினார்.

பெருமாள் கூறியவாறு தேவர்கள் பெரிய படையுடன் கூஷ்மாண்டன் இருப்பிடம் நோக்கி சென்றனர். விஷ்ணு, ஒரு படை பிரிவின் தலைவராக பொறுப்பேற்று அவனுடன் போரிட்டார். கூஷ்மாண்டன் உயிர் பிரிகின்ற நேரத்தில் தான் யார், இந்த ஜென்மத்தில் என்னென்ன பாவங்கள் செய்துள்ளோம் என்பதை உணர்ந்தான். மரணம் நெருங்கிய வேளையில் கரம் கூப்பி விஷ்ணுவைப் போற்றி வணங்கி தனக்கு நற்கதி அருளுமாறும், மறுபிறவியில் தான் நற்பிறப்பெடுக்கவும் வேண்டிக்கொண்டான்.

நாராயணன் கூஷ்மாண்டனிடம் இந்த பிறவியில் தேவர்களுக்கு தொடர்ந்து அல்லல் தந்து வந்துள்ளாய். அனாலும் தெய்வ நம்பிக்கை, பக்தியுடன் இருக்கின்றாய். ஆகவே உனக்கு நற்கதி கிடைக்கும். உன் வாழ்வின் மூலம் பூலோகத்தில் உள்ளவர்கள் பயன் அடைவர். நீ பூவுலகில் இந்த உலகத்தைப் பிரதிபலிக்கும் உருவில் உள்ள பூசணிக்காயாக அவதரிப்பாய். உன்னால் இவ்வுலகில் உள்ளவர்கள் தங்கள் தோஷங்களை விலக்கிக் கொள்ள முடியும். அதனால் இந்த உலகில் தோஷம் நீக்க, நீ தேவை உள்ளவனாக நிரந்தரமானவனாக இருப்பாய் என அருளினார்.

நான், உன்னை பூமியில் மோதி விழ வைத்து மரணத்தைக் கொடுத்தது போல் தோஷங்களை விலக்கிக் கொள்ள உன்னை பூஜிக்கும்போது அங்குள்ள அனைத்து துஷ்ட ஆத்மாக்களையும் நீ உன்னுள் உறிஞ்சிக் கொண்டு, அவற்றை உனக்குள்ளேயே அழிப்பாய். அதன் பின் அவற்றுக்கு உயிர் இருக்காது. உன்னால் மரணமடைந்த அனைத்து துஷ்ட ஆத்மாக்களும் அவற்றுடன் ஒட்டிக் கொண்டுள்ள தோஷங்களுடன் பூமியிலே புதைந்து போகும்.

சிறப்பாக அமாவாசை, பித்ருக்களின் திதி போன்ற நாட்களில் பூசணியாக பிறந்துள்ள உன்னை தானம் செய்தால், தானம் செய்தவரின் துன்பங்களும் வியாதிகளும் விலகி ஓடும். ஆனால் அதே சமயத்தில் பூசணிக்காயை இலவசமாக பெற்றுக் கொள்பவர்கள், யாரிடம் இருந்து அதைப் பெற்றுக்கொள்கிறார்களோ அவர்களது பாவங்களையும் தமது வாழ்க்கையில் சேர்த்துக் கொள்வர் என்று கூறி அருள்புரிந்தார்.

பூசணிக்காயை பூஜை செய்யும்போது அதனைக் கீறி உள்ளே குங்குமத்தை கொட்டுவர். காயின் உள்ளே குங்குமமும் தண்ணீருடன் கலந்து விடும். அதை உடைத்ததும் அந்த நேரத்தில் அங்கு சுற்றித் திரியும் தீய ஆவிகள், பூசணிக்காயின் சிவப்பு நிறத்தைப் பார்த்து, தம்மையும் அதனுள் உள்ள கூஷ்மாண்டன் கொன்று விடுவான் என பயந்து அங்கிருந்து ஓடி விடும். அதனால்தான் தீயவைகளுக்கு எச்சரிக்கை தரும் வகையில் தோஷங்கள் விலகி ஓட பூசணிக்காயில் கூஷ்மாண்டன் வடிவை எழுதி வீட்டின் வாயிலில் கட்டி தொங்கவிட்டு, சில நாட்களுக்குப் பின்னர் அதை எடுத்து பூஜை செய்து உடைப்பது ஐதீகம் ஆயிற்று. பூசணிக்காயில் அமர்ந்து கொண்டு கூஷ்மாண்டன் பார்த்துக் கொண்டு இருப்பதினால்தான் கண்திருஷ்டி தரும் தீய ஆவிகள் அங்கிருந்து விலகி ஓடும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

பணம் தராமல் பூசணிக்காயை தானமாகப் பெறக்கூடாது. தானம் பெற்றாலும், தானத்தைப் பெறும்போது, இன்று என் செய்கையினால் ‘நான் பெற்ற ஒரு நாள் நல்ல பலனை உனக்கு தருகிறேன்’ என்று தானம் தந்தவருக்கு கூறி விட்டோ, அல்லது அதற்கு ஈடாக அரைக்காசு நாணயத்தையாவது தந்து விட்டு, பெற்றுக் கொண்டால் அது தானமாகாது. இதனால் தான் இத்தகைய குணாதிசயத்தைக் கொண்ட பூசணிக்காயை சாதாரணமாக யாரும் திருடுவதில்லை.

வெள்ளை பூசணிக்காய்

பூசணிக்காயை ஒரு இடத்தில் துளையிட்டு அந்த இடத்தில் மஞ்சள் குங்குமம் போட்டு சில சில்லறைகளையும் போடுங்கள். பூசணிக்காயை உடைக்க போகும் நபர் வலதுகையில் கறுப்பு கயிறு ஒன்றை கட்டிவரச் சொல்லி பூசணிக்காயை உடைக்க வேண்டும்.

பூசணிக்காய்க்கு திருஷ்டிகள் அனைத்தையும் ஈர்த்துக் கொள்ளும் ஆற்றல் உண்டு அதனை சுற்றுபவர் திருஷ்டிகளை அதனுள் ஈர்த்து போய் சிதறச் செய்கிறார். எனவே அவருக்கு தட்சணை கொடுங்கள். சுற்றும் நபர் வெளிநபராக இருப்பின் முதலிலேயே தட்சணை கொடுத்துவிட வேண்டும். அவர் மஞ்சள் நீரை தெளித்து கொண்டு அப்படியே சென்று விட வேண்டும். நமக்கு தெரிந்தவராக இருந்தால் மஞ்சள் நீர் தெளித்துக் கொண்டு கால் கழுவிக் கொண்டு உள்ளே வரலாம்.

பூசணிக்காய் உடைக்கும் போது நடுத்தெருவில் முச்சந்திகளில் பல சாலை சந்திப்புகளில் உடைக்க வேண்டும் என எந்த சாஸ்திரமும் சொல்லவில்லை. பலி என்பதை நம் திருஷ்டி கழிந்து நல்லவை நடக்க வேண்டும் என்பதற்காகச் சொல்லப்படுகிறது.

அதனை ஓரமாக யார் காலிலும் படாத வகையில் உடைத்தால் தான் பலன் உண்டு. அதனை மாற்றிச் செய்யும்போது அதிக அளவு எதிர் விளைவுகள் மற்றும் தோஷம் ஏற்படும். அதனால் தான் இன்றைக்கும் கிராமங்களில் அதனை வயலின் வரப்புகளிலும் களத்து மேட்டிலும் உடைப்பது வழக்கத்தில் உள்ளது.

இதையும் படிக்கலாம் : பில்லி சூன்யம் ஏவல் மந்திரக்கட்டு வசியம் விலக பரிகாரம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *