குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு..!

sathu maavu

இல்லத்தரசிகள் என அழைக்கப்படும் நம் வீட்டு பெண்கள், பெயரளவில் மட்டுமே அரசிகளாக உள்ளனர்.

காலை எழுந்து காபி போடுவது முதல் இரவு உணவு முடித்து பாத்திரம் தேய்ப்பது வரை அனைத்து வேலைகளையும் அவர்கள் தான் செய்தாக வேண்டும்.

குழந்தை பராமரிப்பு, வீட்டு பெரியவர்கள் உடல் நலத்தில் கவனம், இத்துடன் வீட்டிற்கு வரும் விருந்தாளிகளை உபசரிப்பது என அனைத்திற்கும் பொறுப்பு இல்லத்தரசிகள் மட்டுமே. ஆனால், அவர்கள் தங்கள் உடல் நலனை பார்த்துக் கொள்கிறார்களா என்றால் பெரும்பாலும் இல்லை என்பதே கசப்பான உண்மை.

இப்படிப்பட்டவர்கள் தங்கள் உடல் நலனுக்காக மட்டுமின்றி, குழந்தைகள், பெரியவர்கள், என அனைத்து தரப்பினரின் உடல் நலனையும் பேண, எளிய வழிமுறை ஒன்று உள்ளது. அது தான், சத்துமாவு.

பல தானியங்கள், உலர் பழங்கள் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த சத்துமாவை, கஞ்சியாகவோ, உருண்டையாகவோ செய்து சாப்பிடலாம்.

5 – 10 நிமிடங்களில் தயாரிக்கக்கூடிய இந்த எளிய சத்துமாவு உணவு, சரிவிகத சத்துக்களை தந்து, நீண்ட கால அடிப்படையில், உடலை தெம்படைய செய்கிறது.

சத்துமாவுக்கு தேவையான பொருட்கள்

கேள்வரகு, கம்பு, திணை, பாதாம், பிஸ்தா, முந்திரி, வறுத்த வேர்கடலை, பொட்டுக் கடலை, ஏலக்காய் உள்ளிட்டவை.

செய்முறை

கேள்வரகு, கம்பு, திணை ஆகியவற்றை 250 வீதம் சம அளவு எடுத்துக்கொண்டு, நன்கு நீரில் கழுவி, வெயிலில் காய வைக்கவும். அவை காய்ந்த பின், அத்துடன் ஒரு கைப்பிடி அளவு பாதாம், பிஸ்தா, முந்திரி, வறுத்த வேர்க்கடலை, பொட்டுக்கடலை, தேவையான அளவு ஏலக்காய் ஆகியவற்றை அதனுடன் சேர்க்கவும்.

தேவைப்பட்டால் இத்துடன் சிகப்பரிசியும் சேர்த்துக்கொள்ளலாம். இந்த கலவையை மிஸினில் கொடுத்து அரைத்து வைத்துக்கொள்ளவும். கிட்டத்தட்ட, ஒரு கிலோ  மாவு, நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு 10 நாட்களுக்கு வரும்.

இந்த பொடியை, சாதாரண தண்ணீரில் கட்டியின்றி கரைத்து, மாவின் பச்சை வாடை போகும் வரை கொதிக்க விட்டு இறக்கி, அத்துடன் பால், நாட்டு சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால், அவ்வளவு சத்து கிடைக்கும்.

இதை சுடுநீரில் பிசைந்து, அத்துடன் சற்று பாலும் கலந்து, நெய், தேன் கலந்து உருண்டையாக்கியும் சாப்பிடலாம்.

உடலுக்கு நலம் சேர்க்கம் சிறுதானியங்கள், சத்துகள் நிறைந்த உலர் பழங்கள், வேர்க்கடலை, பொட்டுக்கடலை உள்ளிட்டவற்றின் சத்துக்களை ஒருங்கே பெறலாம்.

குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும், எவ்வகை வியாதி உள்ளவர்களும், இல்லாதவர்களும் இதை எடுத்துக்கொள்ளலாம்.

குழந்தைகளுக்கு சிறந்த சப்ளிமென்ட்ரி உணவாகவும், சில நேரங்களில் காலை நேர சிற்றுண்டியாகவும் பயன்படும்.

இதையும் படிக்கலாம் : குழந்தைக்கு மொட்டை போடுவது ஏன் தெரியுமா..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *