தஞ்சைப் பெரிய கோயில்

உலகப்புகழ் பெற்ற தஞ்சைப் பெரிய கோயில் அல்லது தஞ்சைப் பெருவுடையார் கோயில் அல்லது பிரகதீஸ்வரர் கோயில் என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது.

தஞ்சைப் பெருவுடையார் கோயில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது உலக பாரம்பரிய சின்னமாக திகழ்வதோடு, தமிழர்களின் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்திய கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.

மூலவர் பெருவுடையார், பிரகதீசுவரர்
உற்சவர் தியாகராஜர்
அம்மன்/தாயார் பெரியநாயகி, வராகியம்மன்
தல விருட்சம் வன்னி மரம்
தீர்த்தம் சிவகங்கை
அமைத்தவர் முதலாம் இராசராச சோழன்
ஊர் தஞ்சாவூர்
மாவட்டம் தஞ்சாவூர்

வரலாறு

இராஜராஜ சோழன்

சுந்தர சோழனுக்கும் திருக்கோவலூர் மலையமான் குலத்தில் உதித்த வானவன் மாதேவிக்கும் 2-வது மகனாகப் பிறந்தவன் ராஜராஜன். இயற்பெயர் அருண்மொழித் தேவன். இது தவிர இன்னும் ஏராளமான பெயர்களைக் கொண்டிருந்தாலும் ராஜராஜனுக்கு விருப்பமான பெயர் சிவபாதசேகரன்.

அண்ணன் ஆதித்த கரிகாலன் கொலை செய்யப்பட இந்த நேரத்தில் சித்தப்பா மதுராந்தக உத்தமச் சோழன் அரியணைக்கு ஆசைப்பட விட்டுக் கொடுத்தான் ராஜராஜன். அக்கா குந்தவையின் அரவணைப்பில் வளர்ந்தான். நிதானம், ஆன்மிகம், நிர்வாகம், யுத்தம், கருணை ஆகிய அனைத்தையும் அவரிடம் கற்றறிந்தான்.

கிட்டத்தட்ட 15 ஆண்டுக் காத்திருப்புக்குப் பின்னர் (985 – 1014) அரியணை ஏறினான், ராஜராஜன் என பெயர் பெற்றான். மாமன்னன் ராஜராஜன் என்று இன்றைக்கும் கொண்டாடப்பட்டு வருகிறான்.

காஞ்சியில் ராஜசிம்மனால் கட்டப்பட்ட கயிலாயநாதர் கோயில் ராஜராஜனை மிகவும் கவர்ந்தது. அதே போல் ஒரு கோவிலைக் கட்ட எண்ணிய இராஜராஜன் தஞ்சையில் பெரிய கோவிலைக் கட்டினான்.

கி.பி 1003 – 1004ல் கட்டத் தொடங்கிய பெரிய கோயில், கி.பி 1010ல் கட்டி முடிக்கப்பட்டது. இதை சுமார் ஏழு ஆண்டுகளில் கட்டிமுடிக்கப்பட்ட பிரமாண்டத்தின் உச்சம்

முழுவதும் கற்களால் ஆன பெரியகோயிலின் எடை, சுமார் 1,40,000 டன் என்கிறார்கள். 216 அடி உயரம் கொண்ட கோயிலின் அஸ்திவாரம், வெறும் ஐந்தடி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

கூம்பைத் தலைகீழாகக் கவிழ்த்துவைத்த அமைப்பில், பெரிய கோயிலின் 216 அடி உயர விமானம் எழுப்பப்பட்டிருக்கிறது. பலகைக் கற்களை ஒன்றன்மீது ஒன்றாக இலகுப் பிணைப்பு (loose joint ) மூலம் அடுக்கப்பட்டிருக்கிறது.

பெரியகோயிலில் உள்ள சிற்பங்கள் அனைத்துமே கற்களால் ஆனவை. எங்குமே சுதைச் சிற்பங்கள் பயன்படுத்தப்படவில்லை. விமானத்தின் உச்சியில் உள்ள கலசத்துக்குக் கீழே சிகரம் போன்று இருக்கும் கல், 8 இணைப்புகளால் ஆனது.

இதற்குப் பெயர், பிரம்மாந்திரக் கல். இதன் எடை, சுமார் 40 டன். அதற்குக் கீழே இருக்கும் பலகையின் எடை, சுமார் 40 டன். அந்தப் பலகையில் எட்டு நந்திகள் வீற்றிருக்கின்றன. அவற்றின் மொத்த எடை, சுமார் 40 டன். இந்த 120 டன் எடைதான் ஒட்டுமொத்த கோயில் கோபுரத்தையும் ஒரே புள்ளியில் அழுத்திப் பிடித்து, புவியீர்ப்பு சக்திமூலம் தாங்கி நிற்கிறது.

கோயில் அமைந்துள்ள இடம், சுக்கான் பாறையாகும். இந்த இடத்தில் குழி தோண்டி மணலை நிரப்பி, அதன்மீது கோயில் எழுப்பியிருக்கிறார்கள். பூகம்பம் ஏற்படும்போது மணல் அசைந்துகொடுக்க, கோயில் எந்தவித சேதமும் இல்லாமல் அப்படியே நிலைத்து நிற்கும். கிட்டத்தட்ட தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையைப் போன்றதுதான். அதனால்தான், இதை `ஆர்க்கிடெக் மார்வெல்’ என்கிறார்கள் வல்லுநர்கள்.

கோயில் பெயர்க்காரணம்

முதலாம் இராசராச சோழனால் கட்டுவிக்கப்பட்ட இக்கோயில் துவக்கக் காலத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும், பின்னர், தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளது.

17 ஆம் மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிரகதீசுவரம் என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளது. தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்பதன் வடமொழியாக்கமே பிரகதீசுவரர் கோயில்.

கோயில் அமைப்பு

நவீன உலகின் கட்டுமான முன்னேற்றங்களும் மாற்றங்களும் வந்தாலும்கூட, ஆயிரம் வருடங்களைக் கடந்தும் பிரம்மாண்டம் குறையாமல் அப்படியே இருக்கிறது பெரிய கோயில்.

வீரசோழன் குஞ்சரமல்லனான ராஜராஜப் பெருந்தச்சன் என்பவன் இந்தக் கோயிலைக் கட்டிய கலைஞன்! இவனுக்கு பக்கபலமாக, மதுராந்தகனான நித்திவினோதப் பெருந்தச்சன், இலத்தி சடையனான கண்டராதித்தப் பெருந்தச்சன் ஆகிய இருவரும் இருந்தனராம்!

கோட்டைச் சுவர் வாயிலை அடுத்து உள்ள ஐந்து அடுக்கு கோபுர வாயிலுக்கு கேரளாந்தகன் நுழைவாயில் என்று பெயர். அடுத்து 3 அடுக்குகளுடன் ராஜராஜன் திருவாயிலும் அமைந்துள்ளது. இவை தவிர, தென்புறம் இரண்டும் வடபுறம் இரண்டுமாக 4 வாசல்கள் உள்ளன.

விமானம்

ஸ்வாமி கருவறையின் விமானத்தை பெரிதாகவும், கோயில் கோபுரத்தை சிறிதாகவும் அமைத்தான் ராஜராஜன். பெரிய கோயில் கோபுரத்தைவிட பெருவுடையாரின் விமானம் பிரம்மாண்டமானது! சுமார் 216 அடி உயரத்துடன் திகழும் இந்த விமானம், ஆசியாவிலேயே மிகப் பெரிய விமானம், தஞ்சைப் பெருவுடையார் கருவறை விமானம்தான்!

சிவனார் சந்நிதி கொண்டிருக்கும் அந்த விமானம், தட்சிணமேரு எனப்படுகிறது. பீடம் தொடங்கி கலசம் வரை முழுவதும் கருங்கல் கொண்டு கட்டப்பட்டது.

விமானக் கோபுரத்தின் உட்புறம் உள்ள மேல் அறை ஒன்றில் 108 கர்ணங்கள் கொண்ட பரத நாட்டியச் சிற்பங்கள் காணப்படுகின்றன. கீழ்த் தளத்தில் ராஜராஜன் காலத்தில் தீட்டப்பட்ட ஓவியங்கள் உள்ளன. மேலும், மழை நீர் சேகரிப்பின் மையமாகவும் பெரிய கோயில் திகழ்ந்திருக்கிறது.

தட்சிணமேருவாக அமைக்க எண்ணியதாலும் சிவபெருமான் மீது மாறாத பக்தி கொண்டிருந்ததாலும் பிரம்மாண்டமாக லிங்கத் திருமேனியை வடிவமைத்தான் ராஜராஜன். 13 அடி உயரத்தில் கம்பீரமாகக் காட்சி தருகிறார் பெருவுடையார். ஒரே கல்லால் ஆன லிங்கமூர்த்தம் இது.

வழிபாடு இங்கே, மகுடாகம அடிப்படையில் அமைந்துள்ளது. சிவலிங்க வழிபாட்டை நவதத்துவம் என்கிறது மகுடாகமம். ‘லிங்கத் திருமேனியின் நடுவில் தூண்போலத் திகழும் பாணமானது, மூன்று வகை அமைப்புகள் கொண்டிருக்கின்றன. இது அடியில் நான்கு பட்டையாகவும் இடையே எட்டுப்பட்டையாகவும் மேல் பகுதியில் வட்டமாகவும் இருக்கும்! சதுரத் தூண் வடிவம் பிரம்மா; எட்டுப்பட்டை வடிவம் ஸ்ரீவிஷ்ணு; வட்டத்தூண் ருத்திரன், மகேசன், சதாசிவன், பரபிந்து, பரநாதம், பராசக்தி என வணங்கிவிட்டு, உச்சிக்கு வரும்போது பரசிவ நிலையை தரிசிக்கலாம்’ என்கிறது மகுடாகமம்.

அதாவது, ‘உருவமெனத் திகழும் லிங்கமானது மறைந்து, பரவெளியான இந்தப் பிரபஞ்சமே லிங்கமெனத் திகழும்’ என்று சிலிர்க்கிறது இந்த ஆகமம். இவற்றையெல்லாம் அறிந்து அதனை மீறாமல் கோயில் எழுப்பியிருக்கிறான்.

இக்கோயில் லிங்கம், மத்தியபிரதேச மாநிலம், நர்மதா நதிக்கரையிலுள்ள ஒரு மலையிலிருந்து கொண்டு வரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இவர் உடுத்தும் வேட்டியின் நீளம் 35 மீட்டர். பக்தர்கள் வஸ்திரம் சாத்த விரும்பினால், இதற்கென ஆர்டர் கொடுக்க வேண்டும். அபிஷேகம் செய்ய லிங்கத்தின் இருபுறமும் படிக்கட்டுகளுடன் கூடிய மேடை அமைக்கப்பட்டுள்ளது.

மூலஸ்தானத்தில் சந்திரகாந்தக்கல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் வெயில் காலத்தில் குளிர்ச்சியாகவும், குளிர் காலத்தில் உஷ்ணமாக இருப்பதாகவும் ஒரு தகவல் இருக்கிறது.

வராகி அம்மன்

இக்கோவிலில் உள்ள வராகி அம்மன் மிகவும் சிறப்பு வாய்ந்தவர். காசியில் தான் வராகி அம்மன் சன்னதி உள்ளது. காசியைத் தவிர வராகி அம்மன் சன்னதி இங்கு மட்டுமே உள்ளது. அதிலும் தனி சன்னதியாக இத்தலத்தில் மட்டுமே வீற்றிருக்கிறாள் என்பது முக்கியமான அம்சம்.

9 அடி உயரமுடைய அம்மன் பெரியநாயகி நின்ற கோலத்தில் தெற்கு நோக்கி அருளுகிறாள். வேறெங்கிலும் இல்லாத வகையில் இந்த திருவுருவிற்கு இரண்டு கரங்கள் மட்டுமே இருப்பது வியக்கத்தக்கது.

இந்த வராகி அம்மன் என்பவள் அம்பாளின் போர்ப்படைத்தளபதி ஆவாள். சப்த மாதாக்களில் வராகியும் ஒருவள். சப்த மாதாக்களில் முக்கியமான பிரதானமான அம்மன் இவள் தான். கோர்ட் கேஸ் என்ற பிரச்சினைகளில் சிக்கித் தவிப்பவர்கள் இவளை வழிபட்டால் கண்டிப்பாக சிக்கல் தீரும்.

இராஜராஜ சோழனின் வெற்றி தெய்வம் இவளை பாவித்து வந்துள்ளார். அவர் எதைத் தொடங்கினாலும் இவளை வணங்கிவிட்டுத்தான், அபிஷேகம் செய்துவிட்டுத்தான் ஆரம்பிப்பானாம்.

தஞ்சை பெயர்க்காரணம்

புராண காலத்தில் தஞ்சகன், தாரகன், தண்டகன் என்ற மன்னர்கள், தங்களை யாராலும் வெல்ல முடியாது என்ற வரத்தை சிவனிடம் பெற்றிருந்தனர். இதனால் தேவலோகம் வரை சென்று வெற்றிக்கொடி நாட்டி அதிகாரம் செலுத்தினர்.

வரம்பு மீறிய இவர்களின் செயல்கண்ட சிவன், திருமாலையும், காளியையும் அனுப்பி அவர்களை வதம் செய்தார்.

இருப்பினும், சிவபக்தர்களாக இருந்த அவர்களது பெயர் விளங்கும் படியாக, தஞ்சகனின் பெயரால் தஞ்சாவூரும், தாரகனின் பெயரால் தாராசுரமும், தண்டகனின் பெயரால் தண்டகம்பட்டு என்ற ஊர்கள் உண்டாயின.

கோவிலின் சிறப்பு அம்சம்

இக்கோவில் சிவலிங்கத்தின் உயரம் 12 அடி தமிழின் உயிர் எழுத்துக்கள் 12. சிவலிங்க பீடத்தின் உயரம் 18 அடி. தமிழின் மெய் எழுத்துக்கள் 18. கோயிலின் கோபுரத்தின் உயரம் 216 அடி. தமிழின் உயிர் மெய் எழுத்துக்கள் 216.சிவலிங்கத்திற்கும் நந்திக்கும் உள்ள இடைவெளி 247 அடி. தமிழ் மொழியின் மொத்த எழுத்துக்கள் 247.

இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீ உயரமான ஒரு கற்கோயிலை ராஜராஜன் எழுப்பினார்.

கருவறையில் உள்ள சிவலிங்கம் உலகிலேயே பெரிய சிவலிங்கமாகும். 6 அடி உயரம், 54 அடி சுற்றளவு கொண்ட ஆவுடையார், 23 அரை அடி உயரம் கொண்ட லிங்கம் ஆகியன தனித்தனியாக கருங்கற்களால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது.

கஜூராஹோ, புவனேஸ்வரத்தின் லிங்கராஜ் ஆகியவையும் தஞ்சை பெரிய கோவிலின் 11 ம் நூற்றாண்டைச் சார்ந்தது தான். ஆனால் அன்று எவ்வளவு கட்டிடங்கள் உருவானாலும் ஆலயங்களின் தலைவனாக தஞ்சை பெரிய கோவிலே பேசப்பட்டுள்ளது.

1010 ஆம் ஆண்டு முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010 ஆவது ஆண்டோடு 1000 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

உலகிலேயே இங்கு தான் சண்டிகேஸ்வரருக்கு மிகப்பெரிய தனி சன்னதி உள்ளது. இங்கு நவக்கிரக சன்னதி இல்லை. சிவனே நவக்கிரக நாயகனாக விளங்குவதால், நவக்கிரகங்களுக்கு பதில் நவ லிங்கங்கள் உள்ளன.

பெரிய நந்தி

ராஜராஜன் வாயிலுக்கு எதிரே உள்ள 16 கால்மண்டபத்தில் ஒரே கல்லில் வடிக்கப்பட்ட மிகப்பெரிய நந்தி உள்ளது. இந்த நந்தி கி.பி. 16-ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின் காலத்தில் நாயக்க மன்னர்களால் உருவாக்கபட்டதாகும்.

இந்த மண்டபத்துக்கு தென்புறம் திருச்சுற்று மாளிகையில் வடதிசை நோக்கியவாறு காணப்படும் நந்தியே ராஜராஜன் காலத்தில் கோவிலுக்காக வடிக்கபட்டது. தஞ்சை பெரிய கோவிலில் இருக்கும் நந்தியின் சிலை இந்திய கோவில்களில் இருக்கும் மிகப்பெரிய நந்தி சிலைகளில் ஒன்றாகும்.

ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் மாவட்டத்திலுள்ள லேபாக்சி பாபனேஸ்வரர் ஆலயத்திலுள்ள நந்தியே இந்திய நிலப்பரப்பில் உள்ள கோவில்களில் முதலாவது பெரிய நந்தி. இதன் உயரம் 15 அடி. நீளம் 27 அடி.

தஞ்சை பெரிய கோவில் நந்தியின் உயரம் 12 அடி. நீளம் 20 அடி. தஞ்சை நந்தியின் வேலைப்பாடும், கலை அழகும் தனித்துவமானது. மேலும் இந்திய நிலப்பரப்பில் உள்ள ஆலயங்களிலேயே தஞ்சை பெரிய கோவிலில் உள்ள நந்தியே இரண்டாவது பெரிய நந்தி.

நந்தா விளக்கு

கருவறை இருள் சூழ்ந்த இடம். உள்ளே எப்போதும் வெளிச்சம் பரவி நிற்க வேண்டும். ஏனெனில் லிங்கம் அங்கே இருக்கிறது. மனிதர்கள் இல்லாத போதும் வெளிச்சம் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அதற்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட விளக்கு ஒன்று அமைக்கப்பட்டது.

இராஜராஜனின் சகோதரி குந்தவை ஏற்றிய விளக்கு அது. அது நந்தா விளக்கு என்கிறார்கள். நுந்துதல் என்பதற்கு தூண்டுதல் என்று பொருள். இவ்விளக்கின் சிறப்பு அமைப்பின் காரணமாக திரியை தூண்டுதல் அவசியமற்று இருப்பதால் நுந்தா விளக்கு என்றும், தூண்டாமணி விளக்கு என்றும் அழைக்கப்படுகிறது.

நுந்தா விளக்கு என்பது திரிந்து நந்தா விளக்கு என்றும், தூண்டாமணி விளக்கு என்பது திரிந்து தூங்காமணி விளக்கு என்றும் அறியப்பெறுகிறது.

மழைநீர் சேகரிப்புத்திட்டம்

அந்தக் காலத்திலேயே மழை நீரைச் சேமிக்கும் வியக்கத்தக்க முறையை ராஜராஜசோழன் பெரியகோயிலில் அறிமுகப்படுத்தியிருக்கிறார். மழைநீர் தேங்கி ஆலயத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க இரண்டு வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளது.

வடக்கு பக்கத்தில் ஒன்றும், தெற்குப் பக்கத்தில் ஒன்றுமாக நீர் வெளியேறும் பாதைகள் உள்ளது.முதலில் அழுக்காக வரும் நீர் தெற்கு பக்கம் மூலமாக நந்தவனத்திற்கும், இரண்டாவது வரும் நல்ல நீர் வடக்குப் பக்கமாக சிவகங்கை குளத்திற்கும் செல்லும் வகையில் இணைக்கப்பட்டுள்ளது. முதல் மழைநீர் சேகரிப்புத்திட்டம் இதுதான்.

கருங்கற்களால் இரண்டு சுவர்கள் சுற்றி அமைக்கப்பட்டு கருவறையில் லிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. உள் சுவரின் அகலம் 11 அடி. வெளிச்சுவரின் அகலம் 13 அடி. இந்த இரண்டு சுவர்களுக்கிடையேயான தூரம் 6 அடி.

இந்தச் சுவர்களில் சோழர்களின் ஓவியங்கள் வியக்கத்தக்க வகையில் வரையப்பட்டுள்ளன. இந்த இரண்டு சுவர்களுக்குமான ஆற்றலை அறிந்தால் அதிர்ந்து தான் போக வேண்டியுள்ளது. 216 அடி உயரம் கொண்ட கருங்கற்களால் இழைக்கப்பட்ட விமானத்தின் ஒட்டு மொத்தச் சுமையையும் இந்த இரண்டு சுவர்களுமே தாங்கி நிற்கிறது.

ஆயிரம் ரூபாய் நோட்டு

தஞ்சை பெரிய கோவிலுக்கு பெருமை சேர்க்கும் வகையில் மத்திய அரசு சார்பாக கடந்த 1954ம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி ₹ 1000 நோட்டை வெளியிட்டது. அதில் தஞ்சை பெரிய கோவில் எனப்படும் பிரகதீசுவரர் ஆலயத்தின் வியத்தகு தோற்றம் பதிக்கப்பட்டது.

டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை மற்றும் கான்பூர் ஆகிய நகரங்களில் அந்த ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டன. 5 வரிசைகளிலான எண்களில் அந்த நோட்டுகள் வெளியாகின. மும்பையில் அச்சிடப்பட்ட நோட்டுகளின் வரிசை ஆங்கில எழுத்து ஏ ஆகும்.

தபால் தலை

மத்திய அரசு 1995 ஆம் ஆண்டில் மாமன்னர் ராஜராஜ சோழன் உருவம் பதித்த 2 ரூபாய் தபால் தலையை வெளியிட்டது.

கும்பாபிஷேகம்

தஞ்சை பெரிய கோவிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு 5 பிப்ரவரி, 2020 ஆம் ஆண்டு காலை 9.30 மணிக்கு குடமுழுக்கு நடைபெற்றது.

இராஜகோபுரம், அனைத்து விமானங்களிலும் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. குடமுழுக்கை தொடர்ந்து அனைத்து கும்பங்களுக்கும் மகாதீபாரதனை நடைபெற்றது.

தமிழ், சமஸ்கிருதத்தில் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது.

திருவிழாக்கள்

பிரம்மோற்சவம், ராஜராஜசோழன் பிறந்தநாள் விழா, அன்னாபிஷேகம், திருவாதிரை, ஆடிப்பூரம், கார்த்திகை, பிரதோசம், சிவராத்திரி, தேரோட்டம்.

பிரார்த்தனை மற்றும் நேர்த்திக்கடன்

தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) ராஜராஜ சோழனால் ஆத்மார்த்தமாக கட்டப்பட்ட கோயில் என்பதால் என்ன பிரார்த்தனை செய்தாலும் நிறைவேறும் என்பது பக்தர்களது அசைக்கமுடியாத நம்பிக்கையாக உள்ளது.

இங்குள்ள வராகி அம்மன் சன்னதியில் பக்தர்கள் பிரார்த்தனைக்காக என்ன வேண்டிக் கொண்டாலும் உடனே நிறைவேறுகிறது. திருமணமாகாதவர்கள் இங்கு வேண்டிக் கொண்டால் திருமணவரம் உடனே கைகூடுகிறது.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மனமுருக பிரார்த்தனை செய்தால் குழந்தை பாக்கியம் கைகூடுகிறது. தவிர வழக்கு விவகாரங்கள், வியாபார சிக்கல்கள், கோர்ட் சம்பந்தமான பிரச்சினைகள் குறித்து அம்பிகையிடம் வேண்டிக்கொண்டால் பிரச்சினைகள் தீர்கின்றன.

பெருவுடையாரை வழிபட்டால் மனத்துயரம் நீங்கும், மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் பக்தர்களது வேண்டுதல்களையும் சுவாமி நிறைவேற்றி கொடுக்கிறார்.

பால் , தயிர்,பஞ்சாமிர்தம், அரிசி மாவு, தேன்,பன்னீர், இளநீர், சந்தனம்,விபூதி, மாப்பொடி, மஞ்சள் பொடி ஆகியவற்றால் அபிஷேகம் சுவாமிக்கு செய்யலாம்.

மேலும் சுவாமிக்கு 9 கஜ(35 மீட்டர் நீளம்) வேட்டி படைத்தல், அம்பாளுக்கு 9 கஜ சேலை சாத்துதல் ஆகியவற்றையும் செய்கிறார்கள். சுவாமிக்கு பெரிய அளவிலான அலங்கார மாலைகள் சாத்துகிறார்கள்.

நடை திறந்திருக்கும் நேரம்

காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரையும்.

மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையும் நடை திறந்திருக்கும்.

முகவரி

அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோயில்,

தஞ்சாவூர் மாவட்டம் – 613001.

தொலைபேசி எண் : +91-4362-274476, 223 384

மேலும் படிக்க

அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில், சுவாமிமலை

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *