கள்ளக்குறிச்சி மாவட்டம் (Kallakurichi district)

Kallakurichi district

கள்ளக்குறிச்சி மாவட்டம் (Kallakurichi district) தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். 2019, ஜனவரி 8 ஆம் நாள் விழுப்புரம் மாவட்டத்திலிருந்து பிரித்து, தமிழகத்தின் 34-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் அறிவிக்கப்பட்டது. தற்போதைய விழுப்புரம் மாவட்டத்தின் தெற்குமேற்குப் பகுதிகளைக் கொண்டு, தமிழ்நாட்டின் 34-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் புதிதாக துவங்கப்படுவதை, 8 ஜனவரி 2019 அன்று, தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி  மாவட்டத்தை 26 நவம்பர் 2019 அன்று தமிழ்நாடு முறைப்படி கள்ளக்குறிச்சியில் துவக்கி வைத்தார்.

நாடு இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
தலைநகரம் கள்ளக்குறிச்சி
பகுதி வட மாவட்டம்
பரப்பளவு 3530.58 ச.கி.மீ
மக்கள் தொகை 13,77,494 (2011)
அஞ்சல் குறியீடு 606xxx
தொலைபேசிக் குறியீடு 04151
வாகனப் பதிவு TN – 15

வரலாறு

கள்ளக்குறிச்சி மாவட்டம், 2 வருவாய் கோட்டங்களையும், 6 வட்டங்களையும், 562 வருவாய் கிராமங்களையும் மற்றும் 24 குறுவட்டங்களையும் உள்ளடக்கியது. இம்மாவட்டத்தில் 412 கிராம பஞ்சாயத்துகளை உள்ளடக்கிய 9 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. தேசிய நெடுஞ்சாலை எண். 79 ன் (உளுந்தூர்பேட்டை – சேலம்) ஒருங்கே அமைந்துள்ள மாவட்டத் தலைமையகமான கள்ளக்குறிச்சிக்கு அருகில் சேலம், திருச்சி மற்றும் பாண்டிச்சேரி ஆகிய விமான நிலையங்கள் உள்ளன.

மழைப்பொழிவு, கோமுகி மற்றும் மணிமுக்தா அணைகள் மற்றும் ஏரிப்பாசனம் ஆகியவற்றை நீராதாரமாகக் கொண்ட விவசாயம் சார்ந்த இம்மாவட்டத்தில் நெல், மக்காச்சோளம், கரும்பு, உளுந்து போன்றவை முக்கியமான பயிர்களாகும்.

550.70 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள கல்வராயன்மலைகள் மாவட்டத்தின் குறிப்பிடத்தகுந்த முக்கிய பகுதிகளாகும். பழங்குடி மக்களை அதிகமாகக் கொண்ட இம்மலையில் பெரியார், மேகம், சிறுக்கலூர் ஆகிய நீர்வீழ்ச்சிகள் மற்றும் சின்ன திருப்பதி கோயில் ஆகியவை அமைந்துள்ளன. திருக்கோவிலூரில் அமைந்துள்ள உலகளந்த பெருமாள் கோயில், வீரட்டனேஷ்வரர் கோயில், கபிலர் குன்று, உளுந்தூர்பேட்டை பரிக்கலில் அமைந்துள்ள லகஷ்மி நரசிம்மர் கோயில், சங்கராபுரம் வட்டத்தில் அமைந்துள்ள திருவரங்கம் ஆதிரங்கன் ரங்கநாதசுவாமி கோயில் மற்றும் ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோயில் ஆகியவை இம்மாவட்டத்தில் உள்ள மிகவும் புகழ்பெற்ற கோயில்களாகும்.

மாவட்ட வருவாய் நிர்வாகம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், இரண்டு வருவாய் கோட்டங்களும், 6 வருவாய் வட்டங்களும், 562 வருவாய் கிராமங்களும் கொண்டிருக்கும்.

வருவாய் கோட்டங்கள்

 1. கள்ளக்குறிச்சி
 2. திருக்கோவிலூர்

வருவாய் வட்டங்கள்

 1. திருக்கோவிலூர்
 2. கள்ளக்குறிச்சி
 3. உளுந்தூர்பேட்டை
 4. சங்கரபுரம்
 5. சின்னசேலம்
 6. கல்வராயன்மலை

நகராட்சிகள்

 1. கள்ளக்குறிச்சி
 2. திருக்கோவிலூர்
 3. உளுந்தூர்பேட்டை

பேரூராட்சிகள்

 1. சின்னசேலம்
 2. தியாக துருகம்
 3. சங்கராபுரம்
 4. வடக்கணேந்தல்
 5. மணலூர்ப்பேட்டை

ஊராட்சி ஒன்றியங்கள்

 1. கல்வராயன்மலை
 2. சங்கராபுரம்
 3. ரிஷிவந்தியம்
 4. சின்னசேலம்
 5. கள்ளக்குறிச்சி
 6. உளுந்தூர்பேட்டை
 7. திருநாவலூர்
 8. தியாகதுர்கம்
 9. திருக்கோவிலூர்

கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லைகள்

மாவட்டத்தின் கிழக்கில் விழுப்புரம் மாவட்டம், வடக்கில் தர்மபுரி மாவட்டம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம், மேற்கில் சேலம் மாவட்டம் மற்றும் பெரம்பலூர் மாவட்டம், தெற்கில் கடலூர் மாவட்டம் எல்லைகளாக உள்ளது.

அரசியல்

இம்மாவட்டம் 4 சட்டமன்றத் தொகுதிகளையும், 1 மக்களவைத் தொகுதிகளையும் கொண்டுள்ளது.

சட்டசபைத் தொகுதிகள்

 1. கள்ளக்குறிச்சி
 2. உளுந்தூர்பேட்டை
 3. சங்கராபுரம்
 4. ரிஷிவந்தியம்

மக்களவைத் தொகுதி

 1. கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி தொகுதி மறுசீரமைப்பின் போது உருவாக்கப்பட்ட புதிய தொகுதியாகும். இத்தொகுதியில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி (SC), சங்கராபுரம், ரிஷிவந்தியம் ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகளும், சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு (ST), கங்கவள்ளி (SC), ஆத்தூர் (SC) ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகளும் இந்த கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் அடங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா மற்றும் வழிபாட்டுத் தலங்கள்

கல்வராயன் மலைகள்

கல்வராயன் கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் ஒரு பகுதி ஆகும். பச்சைமலை, ஜவ்வாது மலைகள், சேர்வராயன் மலைகள் ஆகியவற்றுடன் இவை காவிரி ஆற்று வடிநிலத்தை பாலாற்றின் வடிநிலத்திலிருந்து பிரிக்கும் எல்லையாக அமைந்துள்ளன. 1095 சதுர கிமீ பரப்பளவுள்ள இம்மலைகளின் உயரம் 2000 முதல் 3000 அடி வரை உள்ளது.

கல்வராயன் மலைகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்க பட்டுள்ளது. வடபகுதி ‘சின்னக் கல்வராயன்’ மற்றும் தென்பகுதி ‘பெரிய கல்வராயன்’ என்று குறிபிடபடுகின்றது. ‘சின்னக் கல்வராயன்’ மலைகள் சராசரியாக 2700 அடி உயரமும், ‘பெரிய கல்வராயன்’ மலைகள் சராசரியாக 4000 அடி உயரமும் கொண்டவை.

கல்வராயன்மலையடிவாரத்தில் மலைகளுக்கிடையில் கோமுகி அணையும், அதையொட்டி சுமார் 15 ஏக்கர் அளவில் அழகிய பூங்காவும் உள்ளது. மேகம், பெரியார், பண்ணியப்பாடி போன்ற அருவிகள் காணப்படுகின்றன. மலையில் உள்ள ஓடையின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்பட்டு, படகு குழம் உருவாகியுள்ளது. சுற்றுலா பயணிகள் படகில் சென்று வரலாம். காட்டுப் பன்றி, செந்நாய், மான், கரடி போன்ற விலங்குகளைத் காணும் வாய்ப்பும் கிடைக்கலாம். கல்வராயன் மலைக்கு வரும் சுற்றுலாவாசிகளின் வசதிக்கு ஏற்ப, வனத்துறையினர் விடுதிகள் அமைத்திருக்கின்றனர். அங்கு தங்க முன் அனுமதி வாங்கிச் செல்ல வேண்டும்.

கோமுகி அணை

கல்வராயன்மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது, கோமுகி அணை. காமராஜர் முதல்வராக இருந்த 1963 ஆம் ஆண்டில் இந்த அணை கட்டும் பணி தொடங்கி, பக்தவத்சலம் முதல்வராக இருந்த பொழுது நவம்பர் 23, 1965ஆம் ஆண்டில் முடிந்து பயன்பாட்டுக்கு வந்தது. கல்வராயன் மலைப் பகுதியில் பெய்யும் மழைநீர் முழுவதும் கல்படை, பொட்டியம், மல்லிகைப்பொடி, பரங்கிநத்தம் ஆகிய ஆறுகளின் வழியாக இந்த அணைக்கு வருகிறது. 360 ஹெக்டேர் நீர்ப்பரப்பு கொண்ட இந்த அணை மூலம் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 2,024.29 ஹெக்டர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதற்காக அணையில் இருந்து 8,917 மீட்டர் தூரத்துக்கு கால்வாய் செல்கிறது. கோமுகி அணையின் மொத்த கொள்ளளவு 46 அடியாகும்.

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் குதிரை மீதமர்ந்து நேரு சவாரி செய்யும் சிலை, குறள் எழுதும் திருவள்ளுவர் சிலை, சிவபெருமான் சிலை, காளை மாடு, உழைப்பாளி சிலைகள், கண்கவர் விளக்குகள், காட்சி மேடைகள் இருக்கின்றது. அருகில் பூங்கா ஒன்று அமைந்துள்ளது. கல்வராயன் மலைக்கு சுற்றுலா செல்பவர்கள் கோமுகி அணையையும் ரசித்துவிட்டு செல்லலாம். கல்வராயன்மலையில் உள்ள பெரியார் அருவி, மேகம் அருவி, வெள்ளி அருவிகளை காண்பதற்காக வரும் சுற்றுலாப் பயணிகள் கோமுகி அணைக்கும் வந்து செல்கின்றனர்.

கபிலர் குன்று

கபிலர் குன்று என்பது கபிலர் வடக்கிருந்து உயிர் துறந்த இடமாகும். இது தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் பேரூராட்சி அருகே அமைந்துள்ளது. நண்பரும் வள்ளலும் ஆன மன்னன் பாரியின் மறைவுக்கு பிறகு, பாரிமகளிர் அங்கவை சங்கவை என்பவர்களை திருக்கோவிலூர் மலையமான் மன்னன் ஒருவனுக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டு, தென்பெண்ணை ஆற்றில் உள்ள ஒரு குன்றில் வடக்கு பக்கம் அமர்ந்து உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்தார்.

திருக்கோவிலூரின் தென் பெண்ணையாற்றில் அமைந்துள்ள “கபிலர் குன்று” (கபிலக்கல்) என்னும் இடத்தில் கபிலர் உயிர்துறந்தார் என ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர்.இவ்விடம் தற்போது தமிழக அரசின் தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட இடமாகப் பராமரிக்கப்படுகிறது. கபிலர்குன்று என்பது தனித்த பாறையும் அதன்மேல் சிறுகோயில் அமைப்பில் கட்டப்பட்ட கட்டடமும் கொண்டது. கோயில் உள்ளே சிவலிங்கம் உள்ளது. செங்கல் கொண்டு அமைக்கப்பட்ட கட்டடத்தின் பழைமை மாறாமல் இன்று மெருகு ஊட்டப்பட்டு உள்ளது. கட்டட அமைப்பை கருத்தில் கொண்டு, கபிலர்குன்று 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கட்டடபாணி எனத் தொல்லியல் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

கோயிலின் மேலே நான்கு பக்க மேல்பகுதிகளிலும் கடவுள் சிற்பங்கள் தெரிகின்றன. அச்சிலையின் மேல்பகுதியில் இரண்டு ஆண் உருவங்களும், இரண்டு பெண் உருவங்களும் தெரிகின்றன. பெண் உருவங்களின் முகம் பொலிவுடன் காணப்படுகின்றன. இப்பெண் உருவங்கள் அங்கவை, சங்கவையாகவும், ஆண் உருவம் அவர்களை மணந்தவர்களாகவும் கருத இடம் உண்டு. அல்லது பாரி, கபிலர் உருவங்கள் என்பதும் ஆராயப்பட வேண்டியுள்ளது. இவை மெருகு ஊட்டப்பட்டு உள்ளதால் எக்காலத்தைச் சார்ந்தவை எனக் கணக்கிட முடியவில்லை.

திருக்கோயிலூர் உலகளந்த பெருமாள் கோவில்

தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகரில் உள்ள உலகளந்த பெருமாள் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்று.இக்கோயிலின் பெருமாள் திருவுரு ஒரு காலில் நின்ற நிலையில் ஒரு காலை மட்டும் நீட்டி தூக்கியபடி நிற்கின்றார். பொதுவாக சிவாலயங்களின் சுற்றுப்பிரகாரத்தில் தான், விஷ்ணு துர்க்கையைக் காண முடியும். ஆனால், 108 திருப்பதிகளில் இங்கு மட்டும் தான் பெருமாள் சன்னதி அருகிலேயே விஷ்ணு துர்க்கை அருள்பாலிக்கிறாள். இவர்கள் இருவரையும் ஒரே இடத்தில் நின்று தரிசனம் செய்யலாம்.

கள்ளக்குறிச்சி பசுபதீஸ்வரர் கோயில்

பசுபதீஸ்வரர் கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.இக்கோயிலில் பசுபதீஸ்வரர், லோகநாயகி சன்னதிகளும், விநாயகர், முருகர், நவகிரகம், துர்க்கை, தட்சிணாமூர்த்தி உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம், கோயில் தேர் போன்றவை உள்ளன.

ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் ஆலயம்

இத்தலத்தில் இறைவன் அர்த்தநாரீஸ்வரர் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறார். தேவர்களின் தலைவனான இந்திரன் தினமும் இத்தல இறைவனுக்கு 108 குடம் பால் அபிஷேகம் செய்து வழிபடுவதை வழக்கமாக கொண்டிருந்தான். ஆனால், அம்மனை வழிபடாமல் சென்று விடுவான். தன்னை வழிபடாத இந்திரனுக்கு பாடம் புகட்ட நினைத்த பார்வதி ஒருமுறை அபிஷேககுடங்களை மறைத்து வைத்து விட்டாள்.

பால் குடங்களை காணவில்லையே என வருந்திய இந்திரன், அங்கிருந்த பலிபீடத்தில் தலையை மோதி உயிர் விட முயற்சித்தான். அப்போது ஈசன் தோன்றி, இனிமேல் பார்வதிக்கும் சேர்த்து அபிஷேகம் செய்யும்படியாக பணித்தார். அத்துடன் தினமும் நடக்கும் தேனபிஷேக பூஜையில் அர்த்தநாரீஸ்வரராக காட்சி கொடுப்பதாக கூறி மறைந்தார்.

இதன்படி இன்றும் கூட தினசரி நடக்கும் தேனபிஷேக பூஜையில் சுயம்புலிங்கத்தில் அர்த்தநாரி ஈஸ்வரனாக ஒளி வடிவில் காட்சி தருகிறார். மற்ற அபிஷேகம் நடக்கும் போது லிங்க வடிவம் மட்டுமே தெரியும். இத்தலத்திற்கு வந்து வழிபட்ட ராமருக்கு ஞானத்தையும், அகத்தியருக்கு திருமணக்கோலத்தையும், பூஜைசெய்த ரிஷிகளுக்கு நற்பலன்களையும், குக நமச்சிவாயருக்கு உணவளித்தும் அர்த்தநாரீஸ்வரர் அருள்புரிந்துள்ளார். இதுவே இத்தலத்தின் சிறப்பாகும். பல ரிஷிகள் இங்கு வந்து தங்கி ஈசனை வழிபட்டதால் இத்தலம் ரிஷிவந்தியம் என வழங்கப்பட்டது

திருநாவலூர் பக்தஜனேஸ்வரர் கோயில்

திருநாவலூர் பக்தஜனேஸ்வரர் கோவில் சுந்தரர் பாடல் பெற்ற நடு நாட்டுத் தலமாகும். இத்தலம் திருநாமநல்லூர் என்றழைக்கப்படுகிறது. இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். மேலும் இது சுந்தரமூர்த்தி நாயனார் பிறந்த தலமும் ஆகும்.

மேல்நாரியப்பனூர் தேவாலயம்

100 வருட பழமை வாய்ந்த தேவாலயம் சென்னை – சேலம் நெடுஞ்சாலையில் சின்ன சேலத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. தேவாலயத்தில் புனித அந்தோனியர் பக்தரான கஞ்சன் என்பவரால் கட்டப்பட்டுள்ளது. இந்த மேல்நாரியப்பனூர் தேவாலயம் தமிழ்நாடு, விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஒரு கிராம பஞ்சாயத்தில் அமைந்துள்ளது. இந்த தேவாலயம் அற்புதங்கள் மன்னர் புனித ஆன்டனி பாதூவிக்கு அற்பணிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 13 அன்று விழா கொண்டாடப்படுகிறது.

பொருளாதாரம்

கள்ளக்குறிச்சி பகுதி முழுவதும் வேளாண்மைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. மணிமுக்தா, கோமுகி அணைகளின் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 25 ஆயிரம் ஏக்கர் நிலம் பயனடைகின்றன. நெல், கரும்பு அதிக அளவில் விளைகிறது. இதனால் இப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட நவீன அரிசி ஆலைகளும், மூன்று சர்க்கரை ஆலைகளும் உள்ளன.இந்த பகுதியில் நெல், கரும்பு, மக்காச்சோளம், மஞ்சள், பருத்தி, கம்பு, உளுந்து ஆகியவற்றை பயிரிடுகின்றனர்.

மேலும் படிக்க

தமிழ்நாட்டின் மாவட்டங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *